search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான ஜெயக்குமார்
    X
    பலியான ஜெயக்குமார்

    சூடான் தீவிபத்தில் விருத்தாசலம் வாலிபர் பலி

    சூடான் நாட்டில் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தீ விபத்தில் விருத்தாசலம் வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி லட்சுமி. இவர்களது 2-வது மகன் ஜெயக்குமார். இவர் சூடான் நாட்டில் பீங்கான் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 -ந்தேதி ஜெயக்குமார் வேலைப் பார்த்த கம்பெனியில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் பலர் பலியானார்கள். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் விருத்தாசலம் வாலிபர் ஜெயக்குமாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரது உறவினர்கள் கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஜெயக்குமார் சூடான் நாட்டில் உள்ள செராமிகா சீலா என்ற கம்பெனிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி வேலைக்கு சென்றார்.

    அந்த கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயக்குமார் எந்த நிலைமையில் உள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரியவில்லை. தொலைக்காட்சி மூலமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே ஜெயக்குமார் உடல்நலன் குறித்து தெளிவாக எங்களுக்கு விளக்கம் தரவேண்டும். ஜெயக்குமார் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு சிறந்த மருத்துவ உதவி அளித்து குணமடைந்த உடன் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அவருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஜெயக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, ஜெயக்குமார் இறப்பு குறித்து இந்திய தூதரகம் உறுதி செய்ய வேண்டும். அவரது உடலை விரைவில் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    சூடான் நாட்டில் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விபத்தில் ஜெயக்குமார் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×