search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் வெங்காயத்தை போட்டி போட்டு வாங்கும் காட்சி.
    X
    பொதுமக்கள் வெங்காயத்தை போட்டி போட்டு வாங்கும் காட்சி.

    கடலூரில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்பனை- பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்

    கடலூர் பான்பரி மார்க்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. இந்த வெங்காயத்தை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

    மேலும் ஓட்டல்களில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டதால் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகள் விலை அதிகரித்து விற்பனை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் கிடைக்காமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கப்படுகின்றதா? ? என உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது.

    இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் மீண்டும் மீண்டும் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா? என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர்.

    அப்போது கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆகையால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பலர் அந்தக் கடையையும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்ற வாசகத்தையும் செல்போனில் படம் பிடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்ததை பார்க்கமுடிந்தது.

    காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை போட்டி போட்டுவாங்கி சென்றனர்.

    இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் நாடு முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக வரலாறு காணாத அளவில் தங்கம் போல் வெங்காயம் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கி சென்றனர்.

    இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து 2 லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். பலபேர் எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, வாழ்த்தியும் செல்கின்றனர் என்றார்.

    Next Story
    ×