என் மலர்tooltip icon

    கடலூர்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் போட்டுள்ளதால் தன்னையும், தனது குடும்பத்தினரையும் முடிந்தால் போலீஸ் கைது செய்யட்டும் என்று கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் இன்று வாக்களித்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நேற்று பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பெண்கள் கோலமிடுவதும், அதில் அவர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதும் பெண்களின் சுதந்திரம். தனி மனிதனின் கருத்துக்கு தடை விதிப்பது நல்லதல்ல.

    கீரப்பாளையத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வீட்டின் முன்பு அவரது குடும்பத்தினர் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கோலமிட்டுள்ள காட்சி.

    எனது சொந்த ஊரான கீரப்பாளையத்தில் எங்கள் வீட்டு வாசல் முன்பும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கோலம் போட்டுள்ளோம். முடிந்தால் என்னையும், எங்கள் குடும்பத்தினரையும் கைது செய்து பாருங்கள்.

    போலீசார் தமிழக அரசுடன் இணைந்து செயல்படலாம். ஆனால் இதுபோன்று ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை தெரிவிப்பவர்களை யாரோ தூண்டுதலின் பேரில் தான் கைது செய்துள்ளார்கள்.

    காவல்துறையினர் தங்களுக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

    இதேபோன்று தூத்துக்குடி சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கும் யார்? யார்? தூண்டுதலின்பேரில் நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

    உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை கொண்டு வாக்கு சேகரிக்கின்றனர். கிராமபுற பகுதிகளில் ஒரு வாக்குக்கு இவ்வளவு என்று விலை பேசப்படுகிறது.

    இதுபோன்று வரக்கூடாது என்று ஒரு வரைமுறை உள்ளது. மரபுகளை பின்பற்றாமல் வாக்கு சேகரிக்கின்றனர். இந்த தேர்தலில் பண நடமாட்டம் பகிரங்கமாக உள்ளது. ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜமால்கான் குட்டகாரத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பாபு (வயது 33). டிப்ளமோ படித்துள்ளார். விருத்தாசலம் பெண்ணாடம் ரோடு தெற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம் மகள் கலைவாணி (28). பட்டதாரி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

    இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2 பேரும் கடந்த 26.11.2015 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமாகி 5 மாதங்கள் ஆன பிறகு, பாபு வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கலைவாணி கர்ப்பமடைந்தார். இதனால் அவருக்கு 5 மாத சடங்கு நடத்தப்பட்டு, அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    ஆனால் மறுபடியும் அவர் பாபு வீட்டுக்கு வரவில்லை. இதனால் பாபு, கலைவாணி வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இருப்பினும் அவர் வர மறுத்துவிட்டார். இதையடுத்து பாபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 11 மாதங்கள் ஆன பிறகு பாபு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலைவாணி வீட்டுக்கு சென்று, அவரை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து தனது வீட்டு மாடியில் கலைவாணியுடன் பாபு தனி குடித்தனம் நடத்தினார். இதற்கிடையே கடந்த 4.12.2016 அன்று தனது குழந்தைக்கு முதலாவது பிறந்தநாளை காலையில் கலைவாணியின் தாய் வீட்டிலும், மாலையில் பாபு வீட்டிலும் கொண்டாடினர். இருப்பினும் கலைவாணி பாபுவுடன் குடும்பம் நடத்தாமல் தனது தாய் வீட்டுக்கும், அவரது அக்காள் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.

    இது தொடர்பாக கடந்த 5.12.2016 அன்று மாலை 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாபு, கலைவாணியை கழுத்தில் தாக்கினார். இதனால் மயங்கி விழுந்த அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். இது பற்றி கலைவாணியின் தந்தை தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி (பொறுப்பு) மகாலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.

    அதில், இவ்வழக்கில் பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பெய்த பலத்த மழையால் தொழிலாளி வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
    கடலூர்:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    கடலூரில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    கடலூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், மேல்பட்டாபாக்கம், நடூவிரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலை முதல் இருந்து மழை பெய்தது.

    இந்நிலையில் மார்கழி மாதம் பனிக்காலம் என்பதால் குளிர்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிரால் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை இடி, மின்னல் இல்லாமல் சாரல் மழை பெய்துவருகிறது.

    ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. அந்த பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 42) கூலி தொழிலாளி.

    இவரது வீட்டின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். பெய்த பலத்த மழையால் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அந்த பகுதி குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீ முஷ்ணம் சுற்றுவட்டார பகுதிகளான ராஜேந்திரபட்டினம், சாத்தமங்கலம், ஆனந்தகுடி, கொக்கரன்பேட்டை, புதுகுப்பம், கழியன்குப்பம், கண்டியான்குப்பம், சேத்தான்பட்டு, ஸ்ரீ ஆதிவராகநல்லூர், நகரபாடி, பூணமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த சாரல் மழையில் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    பெண்ணாடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இருந்து லேசான சாரல் மழை இன்று காலை வரை விட்டு விட்டு பெய்தது.

    புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில் இருந்து சாரல் மலை பெய்தது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அனுமந்தை, ஆலத்தூர், குனிமேடு போன்ற சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் ஏற்பட்ட மோதலில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று மாலை 4 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் திருச்சிக்கு பயணம் செய்தனர். ஓடும் ரெயிலில் அவர்களுக்கிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

    அந்த ரெயில் இரவு 9 மணிக்கு விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாத்துக்கூடல் மேல்பாதி அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வாலிபர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று 5 வாலிபர்களில் ஒருவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனே ரெயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் ரெயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்து ரெயிலில் இருந்த ரெயில்வே போலீசார் கீழே இறங்கினர். அங்கு கீழே விழுந்த வாலிபர் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதையறிந்த வடமாநில வாலிபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விருத்தாசலம் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 வாலிபர்களிடமும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விசாரணை நடத்தினார். அதில் ரெயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த வாலிபர் பெயர் ஆகாஷ்தாஸ் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் 5 பேரும் சென்னையில் இருந்து திருச்சி பகுதிக்கு ஒப்பந்த ஊழியர்களாக வேலைக்கு சென்றவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதால் ஒடிசா மொழி தெரிந்த மற்றொரு வாலிபரை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    5 பேருக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஆகாஷ் தாசை மற்ற 4 வாலிபர்களும் சேர்ந்து ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொன்றார்களா? அல்லது ரெயில் இருந்து கீழே தவறி விழுந்து பலியானாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கடலூரை சேர்ந்த அருள்நாதன் (வயது 56) என்பவர் ஓட்டி வந்தார். ராமதாஸ் (56) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    அந்த பஸ் நள்ளிரவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. உடனே டிரைவர் அருள்நாதன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.

    உடனே டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி கல்வீசிய வாலிபரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டரும், டிரைவரும் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ் மூலம் கடலூருக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் விருத்தாசலம் பாலக்கரையில் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜமாஅத் உலமா சபை கடலூர் மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமை தாங்கினார். முத்தவல்லிகள் அப்துல் மஜீத், ஷேக் தாவுது, அப்துல் ஹமீது, ஷேக் ஹவுஸ் மியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மதத்தால் மக்களை பிரிப்பதை கண்டித்தும், முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க கூடாது என வலியுறுத்தியும், இந்துத்துவத்தை நாட்டில் திணிப்பதை கண்டித்தும் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், நகர ஐக்கிய ஜமாத் செயல் தலைவர் முகமது முஸ்தபா, துணைத்தலைவர்கள் சம்சுதீன், அபூபக்கர், ஜமாஅத்துல் உலமா சபை வட்டார செயலாளர் முகமது உஸ்மான், எஸ்.டி.பி.ஐ. தொகுதி தலைவர் முகமது ரபிக், த.மு.மு.க. காதர் ‌‌ஷரிப், லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள். இதில் முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ஐக்கிய ஜமாஅத் பொருளாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

    பண்ருட்டியில் அனைத்து மஹல்லா மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும் பேரணி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை காந்திரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர்.

    அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பியபடி, காந்திரோடு, கடலூர் ரோடு வழியாக பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி சாலையை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முத்தவல்லி இஸ்மாயில் ஹஜ்ரத், தி.மு.க.நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சுமைதாங்கியில், மங்கலம்பேட்டை, எம்.அகரம், எடச்சித்தூர், பழையப்பட்டணம் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில், அனைத்து இஸ்லாமிய மற்றும் அனைத்து சமுதாய இயக்கங்கள், நகர தி.மு.க., இந்திய குடியரசு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, உலமாக்கள் சபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கீழவீதி ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் புறப்பட்டு கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சுமைதாங்கி பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மங்காபிள்ளை, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச் செயலாளர் ஆபிருத்தீன் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ராஜாராம், வழக்கறிஞர்கள் இப்ராஹிம், குமரகுரு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அப்துல் பாரி நன்றி கூறினார். மேலும் மங்கலம்பேட்டையில் முஸ்லிம்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை நகர ஜமாத் சார்பில் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். பொருளாளர் அமானுல்லா, செயலாளர் அப்துல் ரஷீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முன்னாள் ஜமாத்துல் உலமா மாநில தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், முகமது காசீம் ஹஜ்ரத் உள்பட அனைத்து பள்ளி வாசல் முத்தவல்லிகள் ஜமாத்தார்கள், ஜே.எம்.ஏ. அரபிக்கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர். முன்னதாக லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் இருந்து லால்பேட்டை கைகாட்டி வரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, கடலூர் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். முஸ்லிம் லீக் தலைவர் ராஜா ரஜிமுல்லா, ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல் அஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஜமாஅத்துல் உலமா சபை மண்டல பொறுப்பாளர் முகமது இஷ்காக் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் முஸ்லிம் இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர். மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி பஸ்நிறுத்தம் அருகில் மந்தாரக்குப்பம் பள்ளி வாசல் செயலாளர் மதர்ஷா தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த வாலிபரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தாசில் தாருமான அன்பழகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர்சிங் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 29)என்பது தெரிய வந்தது. அவரது காரை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    பின்னர் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என சுரேசிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுரேஷ் காரில் கொண்டு வந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர் அருகே இரும்பு பட்டறை தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இரும்பு பட்டறை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கூரை வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து சீனிவாசன் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு சீனிவாசனின் மனைவி கயல்விழி அங்கு ஓடி வந்தார். தனது கணவர் மயங்கி கிடந்ததை பார்த்து கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மயங்கி கிடந்த சீனிவாசனை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை இடித்த போது சிலாப் விழுந்து வெட்டியதில் சீனிவாசன் இறந்து இருப்பது தெரியவந்தது.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    மத்திய அரசு குடியுரிமை  சட்ட திருத்தத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு வங்காளம், பீகார், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் வன்முறை நீடித்து வருகிறது. பஸ் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 

    குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்பு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுபோல் கடலூரிலும் மாணவர்கள் இன்று  போராட்டம் நடத்தினர். 

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை மாணவ, மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு  வந்தனர். பின்பு அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து  விட்டு கல்லூரி வளாகத்திற்கு வந்தனர். பின்பு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திருத் தத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 
    குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
    புவனகிரி :

    சிதம்பரம் அடுத்த கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் மிகவும் ஆபத்தானது. வடமாநிலங்கள் பற்றி எரிகின்றன. வரலாறு காணாத அளவுக்கு கலவரம் நடந்து வருகிறது. இவைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமர் மோடி கங்கையை தூய்மைப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு அங்கேயே அமர்ந்து உள்ளார். மக்களின் பிரச்சினைகள் என்ன? மக்களின் மனதில் என்ன இருக்கிறது, என்று மோடி புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதுதான் வழக்கம்.

    அமெரிக்காவில் அமெரிக்கர் என்று யாரும் கிடையாது. இங்கிலாந்து, ஆசியா, ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் தான் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்களால் அந்த நாடு தலை சிறந்த நாடாக மாறியுள்ளது. எனவே உலகம் எந்த திசையில் செல்கிறதோ, அந்த திசையில் மோடி செல்ல வேண்டுமே தவிர 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை அடைவேன் என்று சொன்னால் அது காட்டுமிராண்டி நிலை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் காட்டுமிராண்டித்தனம் தான் இருந்துள்ளது. ஒரு செம்மையான சமூகம் வேண்டுமா? காட்டுமிராண்டித்தனமான சமூகம் வேண்டுமா? என்பதை மோடி முடிவு செய்ய வேண்டும். எனவே தமிழக காங்கிரஸ் கட்சி, குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.

    ஆளுங்கட்சி அதிகார பலம், பணபலம், ஆள்பலத்தை வைத்து இந்த தேர்தலை நடத்தலாம் என்று முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு துணையாக செல்கிறது. ஒரு நாடாளுமன்ற தேர்தலை ஒரே நாளில் தமிழகத்தில் நடத்தி வருகிறோம். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தேர்தலை 2 கட்டங்களாக நடத்துகிறார்கள். ஏனென்றால் பொய் வாக்கு போடுவதற்கும், கலவரம் செய்வதற்கும், வேட்பாளர்களை தூக்குவதற்கும் இந்த தேர்தலை பயன்படுத்துகிறார்கள். தமிழக தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவை செய்கிற ஒரு அமைப்பாக இருக்கிறது. அந்த அமைப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
    சிறுபாக்கம் அருகே மரத்தில் பஸ் மோதியதில் வியாபாரி உடல் நசுங்கி பலியானார். 17 பேர் படுகாயமடைந்தனர்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அருகே மரத்தில் பஸ் மோதியதில் வியாபாரி உடல் நசுங்கி பலியானார். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று விருத்தாசலம், சிறுபாக்கம் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சேலத்தை சேர்ந்த கரிகாலன் (வயது 41) என்பவர் ஓட்டினார். தர்மபுரியை சேர்ந்த இளையராஜா என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் சிறுபாக்கம் அடுத்த அடரியில் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளி நகைகளை வாங்கி விற்கும் வியாபாரியான சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள சோழபள்ளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோவிந்தராஜ் (53) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி சீர்காழியை சேர்ந்த சந்திரா(40), சங்கர்(45), சக்திவேல்(32), தர்மபுரியை சேர்ந்த சாரங்கபாணி(45), விஜய்(35), மணிகண்டன்(25), வசந்தி(73), கணேசன்(50), சாமிதுரை(32), ராஜா(42), சாந்தகுமார்(17) உள்ளிட்ட 17 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சந்திரா, சங்கர் உள்ளிட்ட 17 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்தில் பலியான கோவிந்தராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் டிரைவர் கரிகாலன், கண்டக்டர் இளையராஜா ஆகியோர் காயமின்றி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    வேப்பூர் அருகே நள்ளிரவில் அரசு பஸ் புளியமரத்தில் மோதிய விபத்தில் நகைகடை அதிபர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 11 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அந்த பஸ் இரவு 12 மணி அளவில் வேப்பூர் அருகே அடரி என்ற கிராமத்தில் கடலூர்- சேலம் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்பு அந்த பஸ் சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர்.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்த கோவிந்தராஜ் (வயது 55). என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இவர் சேலத்தில் நகை கடை வைத்துள்ளார்.

    மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் காயம் அடைந்த 20 பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புளிய மரத்தில் மோதிய அரசு பஸ்சை கிரேன் மூலம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    ×