search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northstate Youth Murder"

    • திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தாழம்பூர் பகுதியில் பிரபல கட்டுமான நிறுவனங்களின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கேசட்ரா மோகன்பர்மன் (43) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    அதிகாலை கேசட்ரா மோகன்பர்மன் அருகே உள்ள காரணை நேரு தெருவில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் புகுந்து திருட முயன்றார். இதற்குள் சத்தம் கேடு எழுந்த வீடுகளில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் கேசட்ரா தப்பி ஓடினார். மேலும் பிடிக்க வந்தவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கினார்.

    இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரை கட்டி வைத்து இரும்பு கம்பி கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கேசட்ரா ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த கேசட்ராவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கேசட்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இது தொடர்பாக காரணை பகுதியை சேர்ந்த ஆனந்த், ராஜா, உதயசங்கர், விக்னேஷ், பாலமுருகன், ரமேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    கேசட்ரா மட்டும் தனியாக திருட சென்றாரா? அல்லது அவருடன் கூட்டாளிகள் வேறு யாராவது சென்றனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக கட்டுமான நிறுவனத்தில் தங்கி இருந்து வேலைபார்த்து வரும் அனைத்து வடமாநில வாலிபர்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×