search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பறக்கும்படை"

    • பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
    • ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.

    பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் நீட்டுக்கல் என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது ஹெலிகாப்டரில் பணம், பரிசு பொருள் என எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.
    • காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வாகன தணிக்கையின்போது காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் 49 ஆயிரத்திற்கு அதிகமான பணம் எடுத்துவந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணத்தினை பெற்று செல்வதற்கான சிறப்பு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. சரக்கு வாகனங்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் எடுத்துசெல்லப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
    • கூடலூரில் மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணைய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.

    நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் 16 பறக்கும் படையினர் நேற்று மாலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 702 பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரையில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியே 67 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறக்கும் படை அதிகாரிகள் சோதனையை தொடங்குவதற்கு முன்பே நேற்று முன்தினம் போலீசார் பாரிமுனை பகுதியில் ரூ.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு பறக்கும் படை சோதனையில் நேற்று இரவு ரூ.1 கோடியே 42 லட்சம் பணமும், இன்று காலையில் வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே ரூ.10 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.

    சவுகார்பேட்டை பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 42 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது.

    இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அது வியாபாரி ஒருவரின் பணம் என்பது தெரிய வந்தது. ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக சம்பாதித்த பணம் இது என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகளின் படி இந்த பணத்தின் முழு பின்னணி பற்றி விசாரித்து வருகிறார்கள். இன்று காலையில் வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு அருகே வைத்து பிடிபட்ட ரூ.10½ லட்சம் தொடர்பாக சவுகார்பேட்டையில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதே போன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி அளவுக்கு பணம் பிடிபட்டுள்ளன.

    கூடலூரில் மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை-சங்கரன் கோவில் சாலையில் சின்ன கோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது. அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் காரில் இருந்த ரூ.1.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 லிட்டர் வெளிமாநிலங்களை சேர்ந்த மதுபான வகைகள் பிடிபட்டுள்ளன.

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ் குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 இருந்தது கண்டறியப்பட்டது.

    மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது.

    இப்படி சோதனையில் சிக்கிய ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இதே போன்று பறக்கும் படை அதிகாரிகளின் வேட்டை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ×