search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான ராஜசேகர்
    X
    பலியான ராஜசேகர்

    சூடான் தொழிற்சாலை விபத்தில் பண்ருட்டி வாலிபர் பலி

    சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    சூடான் நாட்டில் உள்ள பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இவர்களில் 18 பேர் இந்தியர்கள். இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வாலிபரும் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். (வயது 38). செராமிக் டிப்ளமோ முடித்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு சூடான் நாட்டில் உள்ள செராமிக் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் அங்கு நடந்த தீ விபத்தில் பலியாகி விட்டார். இந்த தகவல் ராஜசேகரின் மனைவி கலைசுந்தரிக்கு எட்டியது. இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவருக்கு மயக்கத்தை தெளியவைத்தனர்.

    அதன்பின்னர் கலைசுந்தரி தனது உறவினர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டர் அன்பு செல்வனிடம் கலைசுந்தரி கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது கணவர் உடலை சொந்த ஊரான மானடிகுப்பம் கிராமத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தை ஷிவானியின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அன்புசெல்வன் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

    ராஜசேகர் மனைவி கலைசெல்வி கூறுகையில் எங்கள் பகுதியில் நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாததால் அவர் சூடான் நாட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு பலியான சம்பவம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனது குடும்பத்தினர் ஆதரவு இன்றி தவிக்கிறோம். எனது மகள் கல்வி மற்றும் அனைத்துக்கும் அரசு தான் உதவி செய்யவேண்டும் என்றார்.

    சூடான் நாட்டில் வேலை பார்த்து வந்த ராஜசேகர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது மனைவி கலைச்செல்வியிடம் செல்போனில் பேசுவார். அதன்படி நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மதியம் 1 மணி அளவில் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி உள்ளார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீர் என ராஜசேகரின் பின்னால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை பார்த்து அவரது மனைவி கலைசுந்தரி அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில விநாடிகளில் வீடியோ காலும் துண்டித்து விட்டது. மீண்டும் அவருடன் கலை சுந்தரி பேச முற்பட்ட போது சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பின்னர்தான் ராஜசேகர் தீவிபத்தில் இறந்து விட்டதாக தெரியவந்தது

    இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

    தீ விபத்தில் ராஜசேகன் பலியானதால் மானடிகுப்பம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்கள் ராஜசேகர் வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் துக்கம் விசாரித்த படி உள்ளனர். இதனால் கிராமம் முழுவதும் சோகத்தில் காணப்படுகிறது.
    Next Story
    ×