என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார் குமரேஷ்.
    • கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று வித்வான் ஆர். குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    பிரபல திரைப்பட நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் மற்றும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான சுதா ரகுநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    குமரேஷ் தனது 5 வயதில் வயலின் வாசிக்க தொடங்கினார். தமது 10 வயதிற்குள்ளாகவே 100 மேடைகளை கண்டு குழந்தை மேதையாக உருவெடுத்தார். இவருடைய 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார்.


    யக்ஷா இரண்டாம் நாள் விழாவில் இவர் தனது இனிமையான வயலின் இசையால் மக்களை மகிழ்வித்தார். அவருடன் தனது பன்முகத் திறனுக்கு புகழ்பெற்றவரான வித்வான் ஸ்ரீ கே.யூ. ஜெயசந்திர ராவ் மிருதங்கம் வாசித்தார். இவரோடு சேர்ந்து நவீன இசையையும் பாரம்பரிய இசையையும் செறிவுர கலந்து இசைக்கும் வித்வான் ஸ்ரீ பிரமத் கிரண் தபளா இசைத்தார். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.

    யக்ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று இந்தியாவின் முன்னனி நடன கலைஞரான 'பத்ம ஸ்ரீ' ஆனந்தா சங்கர ஜெயந்த் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது.
    • அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை ராம்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து எஸ்.ஜி. சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் பாரதிய ஜனதாவினர் உற்சாகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.


    கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானது. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறக் கூடிய தொகுதி இது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் அவரை தோற்கடிக்க பா.ஜ.க. தயாராக உள்ளது.

    பா.ஜ.க.விற்கு ஓட்டு போட்டால் செல்லாத ஓட்டுக்கு சமம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். செல்லாத ஓட்டாக இருந்த பா.ஜ.க. தான் கடந்த 2014 தேர்தலில் 3-வது அணி அமைத்து 20 சதவீத வாக்குகளை பெற்றது. எனவே யார் செல்லாத ஓட்டு என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
    • இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும் 'யக்க்ஷா' கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

    கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்க்ஷா'கலைத் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.


    அதன்படி கங்கா மருத்துவமனையின் இயக்குனர், மருத்துவர் திரு. ராஜ சபாபதி அவர்களும், சமூக வலைதள பிரபலமும், புகழ்பெற்ற திரைப்பட நடிகையுமான அருணா முச்செர்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று தலைமுறைகளாக பாடி வரும் இவர், இதுவரையில் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். சிறந்த கர்நாடக இசைக் கலைஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


    இவர் நிகழ்த்திய இசைவிருந்தில் இவரோடு அஜிங்யா ஜோஷி (தபளா), அபிஷேக் ஷிங்கர் (ஆர்மோனியம்), சாய்பிரசாத் பாஞ்சல் (தம்பூரா) உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். 'யக்க்ஷா' திருவிழாவில் வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

    இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

    • ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநகர போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கல்லூரிக்கு ஒரு பெண் போலீஸ் வீதம் 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் அக்கா திட்டத்துக்கான போலீசார் அடிக்கடி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவிகளுடன் கலந்துரையாடி பொது இடங்களில் வாலிபர்கள் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி தங்களின் செல்போன் நம்பரை கொடுத்து தைரியப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற கல்லூரி மாணவிகள் போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பதால் போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பவ இடங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய முடிகிறது.

    கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா திட்டம் மட்டுமின்றி மாநகரில் இயங்கி வரும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் பெற்றோரை போலீசார் நேரடியாக சந்தித்து பேசி, அந்த பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க செய்து வருகின்றனர்.

    கோவை மாநகரில் அமலில் இருக்கும் போலீஸ் அக்கா மற்றும் ஆபரேஷன் ரீபூட் ஆகிய திட்டங்கள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளை நட்புரீதியில் தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகள் தெரிவித்து உள்ள கருத்துக்களின்படி அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக போலீசார் புறப்பட்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட பணிகள் நடைபெறுகிறது.

    பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வது ஆகிய 3 கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நடைமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன.

    பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் போலீசார் நேரடியாக சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தமிழை வளர்த்தனர். இவர்களை தாண்டி தற்போது மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை 200 பேர் நிர்வாணப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. ஏனென்றால் அந்த மாநில முதலமைச்சர் பா.ஜனதாவை சேர்ந்தவர்.

    பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை பிரதமர் கேட்டு இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும்.

    இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.

    நெல்லையில் நடந்த கூட்டத்தில் மோடி பேசும்போது, பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தி.மு.க. இருக்காது என்று கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. அதாவது தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் இந்தியாவே இருக்காது. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, துணைக்கண்டம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மொழி, மரபு உண்டு. அவற்றை காப்பதுதான் மத்திய அரசின் கடமை.

    ஆனால் ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது. அப்படி சட்டம் இல்லை என்றால் இந்தியாவே இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


    இந்நிலையில், ஈஷாவில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    திரையரங்க வரலாற்றில் முதல் முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் (PVR Inox)திரையங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மகா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கிச் செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மகா சிவராத்திரி விழா நம் பாரத கலாசாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், பஞ்சாபி இசைக்கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசைக்கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசைக்கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடனக்குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

    கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
    • பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.

    தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் சம்பவத்தன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது.


    இதனை பார்த்து வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது.

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
    • உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது

    கோவை:

    தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிரி உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையும் தற்போது வரவு வைக்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ வந்துள்ளது.

    அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரம் ரூபாய், உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும்.

    எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நான் உங்களுக்கு வழங்கி கொண்டிருப்பேன். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.

    அப்படி பயன்பட்டு வரும் இந்த தொகையிலும், சில தாய்மார்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமித்து வைப்பதாக தெரிகிறது. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.

    எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அருமை தாய்மார்களே உங்களுக்கு உதவ, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்றுமே நான் இருப்பேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர்.
    • ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான இ-மெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டெல் டிடெக்டர் கருவி உதவியுடன் பள்ளி முழுவதும் ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடனும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனார்.

    நீண்ட நேரம் சோதனை செய்தும், பள்ளியில் அப்படி எதுவுமே இல்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு வந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது, அதனை அனுப்பியது யார் என்பதை அறிய அந்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பள்ளி முன்பு வடவள்ளி இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட்டது. மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடந்த 2-ந் தேதி இதே பள்ளிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அப்போதும் அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். தற்போது 2-வது முறையாக அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    எதற்காக ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    ×