என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி அருகே தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
    X

    வடவள்ளி அருகே தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

    • பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர்.
    • ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான இ-மெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டெல் டிடெக்டர் கருவி உதவியுடன் பள்ளி முழுவதும் ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடனும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனார்.

    நீண்ட நேரம் சோதனை செய்தும், பள்ளியில் அப்படி எதுவுமே இல்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு வந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது, அதனை அனுப்பியது யார் என்பதை அறிய அந்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பள்ளி முன்பு வடவள்ளி இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட்டது. மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடந்த 2-ந் தேதி இதே பள்ளிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அப்போதும் அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். தற்போது 2-வது முறையாக அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    எதற்காக ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×