என் மலர்
கோயம்புத்தூர்
- சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது.
- காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் நான் அரசியல் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்து விட்டார்கள் என தெரிவித்தார்.
தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என்று பெருமிதப்படுத்திக் கொண்ட சீமானின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் வருமாறு:-
சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும். அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது.
காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
- அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.
லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதன்படி, லுலு சூப்பர் ஃப்ரைடே மற்றும் லுலு பியூட்டி திருவிழா, அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.

லுலு சூப்பர் ஃப்ரைடே: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை
எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் உங்கள் விடுமுறை ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்.
அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசுகளைக் கண்டறிவதற்கும் இது சரியான வாய்ப்பு.
தேதி: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை.
சலுகைகள்: பல்வேறு வகைகளில் 50% தள்ளுபடி வரை சலுகை.
லுலு பியூட்டி திருவிழா: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை

தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதணங்களை அள்ளுங்கள்.
தேதி: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை
சலுகைகள்: அழகு சாதனப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி.
பியூட்டி திருவிழா போட்டிகள்: டிசம்பர் 7
டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உற்சாகமான சவால்களில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
போட்டிகள்:
* மெஹந்தி போட்டி: அற்புதமான மெஹந்தி வடிவமைப்பை உருவாக்குங்கள்.
* நெயில் ஆர்ட்: உங்கள் நகத்தை படைப்பாற்றலுடன் பெயிண்ட் செய்யுங்கள்.
* ஐலைனர் சவால்: தலைசிறந்த ஐலைனர் வடிவமைப்புகளை உருவாக்கவும்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
தகுதி: 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்
பதிவு: நவம்பர் 28 ஆம் தேதி முதல் லுலு வாடிக்கையாளர் சேவை மேசையில் தொடங்குகிறது.
இந்த விழாக்காலத்தை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றவும். மேலும் விவரங்களுக்கு லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரின் சமூக ஊடக சேனலை பின்பற்றுங்கள்.
- சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
- சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அ.தி.மு.க. மாநில நிர்வாகியான சஜீவனிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். எனவே, அவரிடம் கொடநாடு வழக்கு மற்றும் எஸ்டேட் தொடர்பான விவரங்களை பெற முடிவு செய்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்று இன்று சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
- நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கோவை:
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.
அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.
அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர்.
- கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்ஒருபகுதியாக கடந்த ஜூன் மாதம் விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு ரூ.35 லட்சம் செலவிலும், மற்ற பகுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.
கடந்த 14-ந்தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜ கோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் ஆகியவை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு நா.மூ.சுங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் ராஜகோபுரத்துக்கு 4 அடியில் 7 கலசங்கள், கருவறை விமானத்துக்கு 3 அடியில் 3 கலசங்கள், திசை கோபுரங்களுக்கு 3 அடியில் 10 கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில் 32 என மொத்தம் 52 கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ந்தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும்.
- அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. சென்னை மாநகராட்சி 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோவை மாநகராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கியாஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.
- வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருமணம்...!
வீடுகளில் எளிமையாக நடைபெற்ற காலம் மாறி, தற்போது மண்டபங்களில்தான் பெரும்பாலும் நடக்கின்றன. சிலர், நடுக்கடலிலும், நடுவானிலும் கூட திருமணத்தை நடத்துகின்றனர்.
திருமண விழாக்களில் தங்களது வசதிக்கு ஏற்ப மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்து கொள்கின்றனர். அப்படி ஓர் திருமண விழாதான், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று உள்ளது.
அதாவது, பொள்ளாச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. வழக்கமாக உணவு சாப்பிட 'டைனிங் டேபிள்'தான் போடப்பட்டு இருக்கும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால், தேங்காய் வடிவில் 'டைனிங் டேபிள்' அமைத்து இருந்தனர். 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் தேங்காய் வடிவில் உள்ள 'டைனிங் டேபிளில்' மகிழ்ச்சியுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். அத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
- கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.
இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கோவை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால்.
இவர் கடந்த 17-ந் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு டெல்லி செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை வழியனுப்பி வைக்க கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். அந்த சமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து விட்டு, டெல்லி புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு நின்றிருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமாரும், அவருடன் வந்தவர்களும் வேண்டும் என்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர்.
சத்குரு அகாடமி சார்பில் "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத்," இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்" எனும் தலைப்பில் பேசினார்.

அப்போது, இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது" என்றார்.
தொடர்ந்து, இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், "ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்" எனக் கூறினார்.
மேலும், இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.
முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், "நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி" எனக் கூறினார்.
இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.
இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன்.
- சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம்.
கோவை:
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் இன்று தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.
கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறியதாவது:-
கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.
ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.
அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.
சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
- கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.
கோவை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.கவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.
அடுத்த மாதம் 1-ந்தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.
இதற்காக 1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக வருகிற 30-ந் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.






