என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.

    இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, "இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.

    ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.

    இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.

    இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.

    இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.

    சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்." எனக் கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.

    அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.

    முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர்.
    • ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    பேரூர்:

    கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பகுதியில் வசிப்பவர் ஜெபராஜ் (வயது 39). ஆட்டோ டிரைவர்.

    இவர் தினந்தோறும் காலை அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலரை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பணியாக கொண்டு இருந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரையும் அவர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் 7-ம் வகுப்பு மாணவியை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஆனால் பள்ளிக்கு அழைத்து செல்லாமல் மாணவியை தனது வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சத்தம் போட்டு அழுதுள்ளார். இதையடுத்து மாணவியை சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி பள்ளியில் கொண்டு இறக்கி விட்டுச் சென்றார்.

    பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    உடனே ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.

    போலீசார் ஆட்டோடிரைவர் ஜெபராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
    • முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

    அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.

    சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும்.
    • இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.

    தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என சர்வதேச தியான தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார். டிசம்பர் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சர்வதேச தியான தினம் இன்று (21/12/2024) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் "மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில் டிசம்பர் 21-ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மன நலம், உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது

    மனிதர்களின் மனம் அதிசயமானது. ஆனால் துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணர்கிறார்கள். இது ஏனென்றால் மனம் எனும் அதிசய தொழில்நுட்பத்தை சரியாக கையாளும் கருவிகளை மக்களுக்கு கொடுக்கவில்லை.

    தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும். நாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் "மிராக்கிள் ஆப் தி மைண்ட்" என்ற ஆப்-இனை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வர முடியும். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனமெனும் அதிசயத்தை உணர்ந்திட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆசியும். .

    டிசம்பர் 21-ஆம் தேதியை இதற்கு தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் இது குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் அல்லது உத்தராயண காலத்தின் துவக்கம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகிற்கு மாற்றத்திற்கான கருவிகளை எடுத்துச் செல்வதில் பாரதம் மீண்டும் முன்னணியில் இருப்பது அற்புதமானது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்," என்று கூறியுள்ளார்.

    சத்குரு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் தியானக் கருவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இதன் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சிகள் குறித்து முன்னணி பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவில், ஈஷா யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் மக்களின் மன அழுத்தம் 50% குறைகிறது, தூக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்து உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    • தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
    • தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது.

    கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.

    மறுநாள் 17-ந் தேதி அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பா.ஜக. நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது, தங்களது கைகளில் பதாகைகள் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியடி சென்றனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை உள்பட 917 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசாைர கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செலயாளர் ஆறுச்சாமி, மண்டல செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலளார் ஜெய்சங்கர்,, பிரபாகரன், செல்வராஜ், சசிக்குமார் உள்பட மீது தடையைமீறி போராட்டத்தில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    கோயம்பத்தூரில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி கருப்பு தின பேரணியை பாஜகவினர் இன்று நடத்தினர்

    கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
    • 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    கோவை :

    கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் தி.மு.க. கூட்டணி போட்டியிடும்.

    * ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    * 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார். 

    • பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
    • பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.

    கோவை:

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார்.

    அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதற்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அதன்பிறகும் இறுதி ஊர்வலம் நடந்ததால் இன்று கருப்பு தினம் கடைபிடித்து, கோவையில் ஊர்வலம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர். போலீசாரை கண்டித்து கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அனுமதி கேட்டு போலீசாரிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    இருந்தாலும் திட்டமிட்டபடி கண்டன ஊர்வலம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்தனர். ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.

    • ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.

    கோவை:

    கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.

    அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

    • விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
    • நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன்.

    கோவை:

    கோவை காந்திபுரம் அருகே உள்ள பெத்தேல் கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஒட்டுமொத்த உலகமே மகிழ்ச்சியாக இருக்க கூடிய விழா என்றால் அது கிறிஸ்துமஸ் தான். கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையில் பங்கேற்று நானும் ஒரு கிறிஸ்தவன் என்றேன். உடனே அது பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.

    நான் இப்போது மீண்டும் உங்களிடம் சொல்கிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

    நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன். முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம். இந்து என்று நினைத்தால் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். நான் எப்போதுமே அப்படி தான் இருப்பேன்.

    எல்லா மதங்களின் அடிப்படை அன்பு தான். அதை தான் எல்லா மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் அதே மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புவார்கள். அவர்கள் உண்மையை பேசமாட்டார்கள்.

    மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் வெறுப்பை பரப்புவார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை பேசினார்.

    அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் கடந்த 13-ந் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவாக கையெழுத்து போட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்து போடவில்லை.

    அந்த தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது.

    இப்படிப்பட்ட அ.தி.மு.க.வை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புகிறார்கள். பாம்பு நிழலில் நிற்கும் தவளை போன்று தான் மக்கள் அ.தி.மு.க.வை பார்க்கிறார்கள்.

    தி.மு.க.வை நீங்கள் நம்புவது தாய் மான் நிழலில் குட்டி இளைப்பாறுவது போன்றது. இது அன்பால் செய்கிற உதவி. தி.மு.க இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு இருக்கும். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கோவை தனியார் மண்டபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என கூறி வந்தனர். ஆனால் அது தி.மு.க.வின் கோட்டை என்பதை நடந்து முடிந்த தேர்தல் மூலம் நீங்கள் காட்டி உள்ளீர்கள்.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தான் முதலில் தொடங்கியுள்ளது. அனைவரும் பூத்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    தி.மு.க.வின் திட்டங்கள் சென்று அடையாத வீடுகளே இல்லை. எனவே வாக்காளர்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்து எடுத்துக் கூற வேண்டும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே மேற்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோ டிரைவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

    கோவை:

    கோவையில் ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


    தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தற்போது அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி அளித்து உள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் எங்கும் பைக் டாக்ஸி இல்லை. எனவே, பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

    டாக்ஸிகளுக்கு அனுமதி என்றால் ஆட்டோக்களுக்கு வெள்ளை போர்டு அனுமதி வழங்க வேண்டும். எங்களது அடுத்தகட்ட போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். மேலும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார்.
    • பாஷாவின் உடல் அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ்கார்டனை சேர்ந்த அல்-உம்மா இயக்க தலைவரான எஸ்.ஏ.பாஷா உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் இருந்த எஸ்.ஏ.பாஷாவுக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். நேற்றுமுன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இன்று மாலை கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் ஹைதர் அலி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் எஸ்.ஏ.பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எஸ்.ஏ.பாஷாவின் வீடு, அந்த பகுதி, ஊர்வலம் செல்லும் பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    ×