என் மலர்
கோயம்புத்தூர்
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
- தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை.
கோவை:
கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்கு உரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க. தான் என்பதை காட்டிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.
ஆளுங்கட்சி மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் எதிர்க்கட்சி தலைவராகிவிட முடியும் என்று நம்புகிறார்.
இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் என்ற காரணத்தை காட்டி அதற்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய செயல்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளிவந்ததை ஏற்க முடியாது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செருப்பு போட மாட்டேன், சாட்டையால் தன்னை அடித்துக்கொள்வேன் என்று அண்ணாமலை அறிவித்து உள்ளார். இப்படிப்பட்ட முடிவை அவர் ஏன் எடுத்துக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. எனவே அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு நகைப்புக்குரியதாக உள்ளது.
சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று அண்ணாமலை கூறியது 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
என்னை வைத்து அவர்கள் விரும்புகிற அரசியல் சூதாட்டத்தை நடத்த பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.
தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. எங்களை யாரும் மிரட்டும் நிலையிலும் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அண்மையில் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் வீட்டிற்கு சென்ற தொல்.திருமாவளவன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
- அண்ணாமலை சாட்டையால் அடித்தபோது நிர்வாகிகள் அவரை தடுக்க முயன்றனர்.
- கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க.வினரின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் திட்டமிட்டபடி தனது கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.
கோவை சிட்ரா-காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு இன்று காலை அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். வீட்டில் இருந்து உடலில் மேல்சட்டை அணியாமல் வெளியே வந்த அவர் பச்சை வேட்டியும், அதனை சுற்றி துண்டும் கட்டியிருந்தார். தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை கையில் வைத்திருந்தார்.
வீட்டு வாசலில் அந்த சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார். இவ்வாறு 6 முறை தன்னை சாட்டையால் அடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அண்ணாமலை தான் கூறியபடி காலணி அணியாமல் இருந்தார்.
அண்ணாமலை சாட்டையால் அடித்தபோது நிர்வாகிகள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சாட்டையால் அடித்துக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* தி.மு.க.வின் மீதான வெறுப்புக்கோ, தனிமனிதன் மீதான வெறுப்புக்கோ சாட்டையால் அடித்துக்கொள்ளவில்லை.
* கிடைக்கும் அனைத்து மேடையிலும் தி.மு.க.வை தோலுரிப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தவே 6 சாட்டை அடிகள்.
* தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடைபெறுகிறது.
* பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
* தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
* கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
* சிசிடிஎஸ்-ல் எந்த ஆவணமும் கசிய வாய்ப்பில்லை. Download செய்தால் மட்டுமே கசிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன்.
- 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று தெரிவித்த இருந்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, 8 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.
- வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படிக்கும் மாணவிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.
இங்கு உள்ள பெரும்பாலான பகுதிகளில் 96 சி.சி.டி.வி. கண்காணிப்பு மேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.பெண்கள் விடுதிக்குள் சென்று வர ஒரே வழி தான் உள்ளது. அங்கு அதிநவீன கேமரா பயன்பாட்டில் உள்ளது. மேலும் கேமரா கண்காணிப்பு பணியில் 2 பேர் இருப்பர். மேலும் ஷிப்ட் அடிப்படையில் 14 பாதுகாவலர்கள் பணியில் உள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் மாலை 6 மணிக்கு மாணவிகளுக்கு அட்டனன்ஸ் எடுக்கப்படுகிறது. முதுகலை மாணவிகளுக்கு லேப் பணி இருந்தால் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர் மற்றும் விடுதி வார்டன் ஒப்புதல் பெற்று 8 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும்.
மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் அக்கா திட்டம் மூலம் விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் (பொறுப்பு) கூறியதாவது:-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 11 விடுதிகளில் 6 பெண்கள் விடுதிகளாகும்.
இந்த விடுதிகளில் 35-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கூடுதலாக தேவையுள்ள இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 8 மணிக்குள் மாணவிகள் விடுதிக்குள் வர வேண்டும். வெளியே எங்கு சென்றாலும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதுவும்தவிர விடுதிகளில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- குற்றவாளி ஞானசேகரனுக்கு பிணை வழங்கக்கூடாது.
- குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது" என்றார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.
குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது. குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டுவது ஆதார அரசியல்.
அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.
லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.
அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
- அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
குனியமுத்தூர்:
2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னிசை கச்சேரி, சிறப்பு பாடகர்கள் வருகை, பபே உணவு முறை, வாணவேடிக்கை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது.
இதேபோல கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள்.
அந்த சமயங்களில் இளைஞர்கள் பைக்ரேஸ், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்வது, போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக கோவையில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மேம்பாலங்களில் நள்ளிரவில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இளைஞர்கள் மேம்பாலங்களை குறிவைத்து பைக்ரேஸ் நடத்த வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டல், லாட்ஜ்களில் தீவிர சோதனையும் நடத்தப்படுகிறது. சந்தேக நபர்கள் யாராவது வந்து சென்றால் தகவல் தெரிவிக்குமாறு ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது எல்லை மீறுவதாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதினர் நள்ளிரவு 12 மணி வரும்போது, உற்சாக மிகுதியில் புத்தாண்டை கொண்டாட முயல்வார்கள். நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடுவது மற்றும் பைக் ரேஸ் போன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
மேலும் சிலர் புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, வெளியே கோவில் மற்றும் பொது இடங்களுக்கு சென்று மகிழ்வது உண்டு. அவ்வாறு வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விட்டுச் செல்லக்கூடாது. நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிறர்க்கும் தொந்தரவு கொடுக்காத நிலையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறுவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அசம்பாவித செயல்களை தடுக்கும் பொருட்டு, அன்றைய தினம் நள்ளிரவு கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள், சட்டத்தின் முன் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
மருத்துவக் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோ மெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக எல்லையில் இருந்து விலங்குகள் கொண்டு செல்லும் போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியளர்கள் மற்றும் தாசில்தார்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம்.
- குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை, துடியலூர் அருகே பன்னிமடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியையொட்டி சில கி.மீட்டர் தூரங்களில் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி, இந்த பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டங்கள் நேராக பன்னிமடை பகுதிக்குள் நுழைந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இந்த நிலையில் இன்று காலை, அந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் வந்து, குட்டியானையை மீட்டு, அதனை அதன் தாயுடன் சேர்ப்பதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது பன்னிமடை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில், பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் காணப்பட்டது. எந்தவித அசைவுமின்றி இருந்ததால் வனத்துறையினர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். யானை இறந்து கிடந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர்.
இந்த யானை எப்படி இறந்தது? யானை இறப்பிற்கான காரணம் என்ன? இறந்த யானை தான் குட்டி யானையின் தாயா? யானையை தேடி வந்தபோது இறந்ததா? அல்லது யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த வேறு யானையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
உயிரிழந்த யானையை வனப்பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பிரேத பரிசோதனை செய்தனர்.
- பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர்.
- சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.
இதையொட்டி, கோவை ஆதியோகி முன்பு நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.
இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் அவர்கள் நிகழ்வில் பேசுகையில், "மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோக மையத்தையே சாரும்.
ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ரதங்கள் இங்கிருந்து புறப்பட்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள்தோறும் பயணிக்க உள்ளன.
கோவில்களில் மூலவர் இருப்பதை போல் ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள் உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர். அதன் நல்ல தொடக்க விழா இன்று தொடங்குகிறது.
ஈஷா மையத்தின் பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.
இதற்கு முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது.
- அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார்.
பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. தனது சொந்த காலில் நிற்க முடியாமல் பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைவந்துள்ளது.
பா.ஜ.க. அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாகவும் உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க்பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து உழைப்பாளர் பேரணியும், மசக்காளிபாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.
- 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.
இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, "இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.
ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.
சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்." எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






