என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார்- திருமாவளவன்
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
- தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை.
கோவை:
கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்கு உரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க. தான் என்பதை காட்டிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.
ஆளுங்கட்சி மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் எதிர்க்கட்சி தலைவராகிவிட முடியும் என்று நம்புகிறார்.
இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் என்ற காரணத்தை காட்டி அதற்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய செயல்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளிவந்ததை ஏற்க முடியாது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செருப்பு போட மாட்டேன், சாட்டையால் தன்னை அடித்துக்கொள்வேன் என்று அண்ணாமலை அறிவித்து உள்ளார். இப்படிப்பட்ட முடிவை அவர் ஏன் எடுத்துக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. எனவே அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு நகைப்புக்குரியதாக உள்ளது.
சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று அண்ணாமலை கூறியது 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
என்னை வைத்து அவர்கள் விரும்புகிற அரசியல் சூதாட்டத்தை நடத்த பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.
தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. எங்களை யாரும் மிரட்டும் நிலையிலும் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அண்மையில் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் வீட்டிற்கு சென்ற தொல்.திருமாவளவன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.






