என் மலர்
கோயம்புத்தூர்
- வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.
- செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.
வடவள்ளி:
கோவை போளூவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளன.
இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.
அந்த பகுதியில் சுற்றி திரிந்த யானை, அருகே உள்ள பகுதிகளுக்குள்ளும் புகுந்து சுற்றி திரிந்து வந்தன.
பின்னர் வண்டிகாரனூர் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள், அங்குள்ள நந்தகுமார் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு தென்னை மரங்கள் மற்றும் போர்வெல் மோட்டார் பைப்புகளை சேதப்படுத்தி சென்றது.
இதேபோல் பூந்தோட்டம் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.
அங்கு சிறிது நேரம் சுற்றிய காட்டு யானைகள், கோடாங்கி பள்ளம் வழியாக வடக்கு நோக்கி சென்றது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த பகுதியில் சுற்றிய ஒற்றை காட்டு யானை, வனத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவர், சாலையில் யானை நடந்து வருவதை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். யானையும் அவரை துரத்தி சென்றது. அவர் பாதுகாப்பான இடத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.
இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணின் கணவரும், சகோதரரும், அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்தனர்.
- போலீசார் அவர் மீது பெண்ணை மாணபங்க படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று காலை தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது பாத்ரூமின் ஜன்னல் அசைவது போல் தெரிந்தது. இதனால் அந்த பெண், ஜன்னலை உற்றுப்பார்த்த போது, அங்கு செல்போன் இருந்தது. வெளியில் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு, பெண்ணின் கணவரும், சகோதரரும் ஓடி வந்தனர். அவர்கள் அங்கிருந்த செல்போனை எடுத்து பார்த்த போது, அதில், வாலிபர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணின் கணவரும், சகோதரரும், அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் வாலிபரையும், செல்போனையும் மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் மேட்டுப்பாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த அப்சல் ரோசன்(வயது19) என்பதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சில்லறை மார்க்கெட்டில் விற்பனையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது பெண்ணை மாணபங்க படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- திராவிட தமிழர் கட்சியினர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழிசைக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவோம்.
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த காமகோடி, "பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காமகோடியின் கோமியம் தொடர்பான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவையில் திராவிட தமிழர் கட்சியினர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிட தமிழர் கட்சியினர், "ஐ.ஐ.டி இயக்குனருக்கு ஆதரவாக பேசியதாக வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவதாக" தெரிவித்தனர்.
- சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கோவை மத்திய ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிதடி, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்ற கைதியிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஆயுள் தண்டனை கைதியான செந்தில் என்பவர் தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
செந்தில் கோவை கணபதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவர்.
செந்திலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. செந்திலுக்கு மத்திய சிறையின் மெயின் வாயிலுக்கு வெளியில் சுத்தம் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது சிலர் வெளியே இருந்து வரும்போது அவரிடம் கஞ்சாவை கொடுப்பதும், அதனை அவர் ஆசனவாயிலில் வைத்து சிறைக்குள் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாக தலையால் மோதிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து செந்திலை ஜெயில் அதிகாரிகள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்திலின் முகத்தில் இரு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. இதற்காக முகத்தில் 16 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜன், செந்தில் மற்றும் பார்வையாளர்கள் போல் வந்து அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பிரபுராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரபுராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தமிழகத்தில் தி.மு.க.வையும் சேர்த்து வளர்ப்பது நாம் தமிழர் கட்சி தான்.
- ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தி.மு.க.வையும் சேர்த்து வளர்ப்பது நாம் தமிழர் கட்சி தான்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். அவர்கள் 32 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார்கள்.
இடைத்தேர்தலை பொருத்தவரை நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் பெறுவீர்கள் என்று கேட்கிறீர்கள். கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்திற்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்.

பெரியார் குறித்து இப்போது எதிராக பேசுவது ஏன் என கேட்கிறீர்கள்?. தலைவலி வரும்போது தான் மாத்திரை போட முடியும். பெரியாரை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் தான் இப்போது அவரை பேசுகிறார்கள். பெரியாரை அவர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
பெரியார் பெரியார் என்று பேசுகிறவர்கள், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியார் கூறியதை பேசி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே? நீங்கள் தான் பெரியாரை திராவிட குறியீடாக பார்க்கிறீர்கள். நாங்கள் தமிழ் தேசியத்தையும், பிரபாகரனையும் தான் பெரும் குறியீடாக பார்க்கிறோம்.
திராவிடம் என்று கூறுபவர்கள் 5500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தான் இரும்பை கண்டுபிடித்தார்கள் என்று கூறுகிறார்கள். இப்போது திராவிடர்கள் எங்கே போனார்கள்? தமிழை காக்க, வளர்க்க நமது முன்னோர்கள் போராடி உள்ளனர். ஆனால் அவர்களை முன் நிறுத்துவதை விட்டுவிட்டு ஒருவரை மட்டும் கூறுவதை தான் ஏன் என்று கேட்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்குள் நுழைய கியூ ஆர் கோடு கட்டாயமாக்கி இருப்பதாக கூறுகிறார்கள். அதை இப்போது தான் செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர்கள். ஏன் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனையில் பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு அனுமதி மறுத்தது ஏன்?.
எனது வீட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். எனது படத்தை போட்டு அவமதித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால் அண்ணா பல்லைக்கழக சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?.
அண்ணா பல்லைக்கழக சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான ஞானசேகரனை, சபாநாயகர் தம்பி ஞானசேகரன் என்று கூறுகிறார். நீங்கள் எதைப் பற்றியும் பேச அருகதை இல்லாதவர்கள்.
பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல. பிரபாகரன் வாழ்க என்பது தான் என்னுடைய கோட்பாடு. நாங்கள் திராவிடம் ஒழிக என்று பேசவில்லை. தமிழ் வாழ்க என்று தான் கூறுகிறோம்.
இன்று எனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் என்னை அரசியல் அனாதையாக ஆக்காமல் விடமாட்டோம் என்று போராடுவதாக கூறுகிறீர்கள். யார் அரசியல் அனாதை? நான் தைரியமாக தனித்து நிற்கிறேன். நாம் தமிழர் கட்சி இன்று அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருக்கிறது. யாரை அரசியல் அனாதையாக்குவோம் என்கிறீர்கள்?
நான் முன்பு தொண்டர் படையோடு வருவேன். இன்று இங்கு பவுன்சர்கள் வந்துள்ளார்களே. பாதுகாப்புக்காக என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் நானே பவுன்சர் தான். நாங்கள் பா.ஜ.கவின் பி டீம் என்றால், பா.ஜ.கவின் ஏ டீமாக தி.மு.க செயல்படுகிறது.
டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி ரத்து செய்வதை அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடக்கூடாது. அதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. இந்த வெற்றி தன்னெழுச்சியாக போராடிய அந்த மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு தான்.
- உலகெங்கும் இருக்கிற என்னோட சொந்தங்கள் சொல்லிவிடுவார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து, பிரபாகரன்-சீமான் சந்திப்பு படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சீமான் கேட்டுள்ளார். இவன், 15 ஆண்டாக எங்கு படுத்திருந்தான் எனவும் கேட்டிருக்கிறார். இருவரது சந்திப்பு படம், எடிட் செய்யப்பட்டது. அதுவே ஒரு ஆதாரமாகத்தான் எடுத்துக்காட்டுகிறோம். அதுக்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து எடுத்துக்காட்டுவது. ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? இந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்தான் என டெமோ காண்பிக்க சொல்கிறார். உலகம் முழுவதும் புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பதை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நண்பர் செங்கோட்டையனை இதுபற்றி ஏன் பேசவிடாமல் தடுத்துள்ளனர். அவருடன் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. அந்த ஆடியோ பதிவை வெளியிடட்டும். நான் என்ன பேசினேன் என்பது தெரிந்து விடும் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
* பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு தான். அந்த லட்சிய உறவு என்று பார்த்தால் இந்த மண்ணில் முதல் சொந்தக்காரன் அவருக்காக போராடி இறந்தவர். இப்ப அவரது லட்சியத்துக்காக நிற்கிற நாங்கள் எல்லாம் தான் அவரது ரத்த உறவு.
* கார்த்திக் மனோகர் சொல்வதற்கு பதில் நான் சொல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் இருக்கிற என்னோட சொந்தங்கள் சொல்லிவிடுவார்கள்.
* பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்றார்.
- தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்.
- பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.
கோவை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்களும், மாற்றுக்கட்சியினரும் இன்று தி.மு.க.வில் இணைந்துக் கொண்டனர்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* கட்சியில் சேர்ந்த பிறகு தான் எண்ணிக்கை தெரியும். சேருவதற்கு முன்பு எப்படி தெரியும்.
* மகிழ்ச்சி... தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்...
* தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது.
* துரைமுருகன் கூறியது என்னை பற்றி இல்லை. அண்ணாவையும், அவரது தலைவர் கலைஞரை சொல்லியிருக்கிறார்.
* பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.
* A டீமாக தி.மு.க. இருப்பதால் நான் B டீம் ஆகிவிட்டேன் என்றார்.
- பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- பொதுக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தொடங்கி மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
கோவை:
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் கோவை மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சினிமா டைரக்டர்கள் ஆர்.வி. உதயகுமார், அனுமோகன், மாநில மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அமருவதற்காக புத்தம் புது நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் அமர்ந்தபடியே பொதுமக்கள் பொது க்கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கூட்ட முடிவில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கே.ஆர். ஜெயராம் திடீரென எழுந்து பேசத் தொடங்கினார். அவர் பேசுகையில் பொதுமக்கள் அவரவர் அமர்ந்திருக்கும் நாற்காலிகளை அவர்கள் வீட்டுக்கே எடுத்துச் செல்லலாம், இதனை தான் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆண்களும், பெண்களும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினர். சிலர் 2, 3 நாற்காலிகளை தலையில் சுமந்தபடி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நாற்காலிகளுடன் அங்கிருந்து புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் பொதுக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தொடங்கி மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
- இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
- வழக்கில் இதுவரை 14 பேர் சாட்சியம் அளித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி
இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் சாட்சியம் அளித்தனர். இன்று இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். வழக்கு விசாரணையையொட்டி இன்று கோர்ட்டுக்கு இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
- முதியவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
- ஒற்றை காட்டு யானை தடாகம் சாலையை கடந்துள்ளது.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே பன்னிமடை தாளியூரை சேர்ந்தவர் நடராஜ்(69). இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று அதிகாலையும், தடாகம் சாலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வனத்தை விட்டு வெளியேறி அந்த பகுதியில் நடமாடிய வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை தடாகம் சாலையை கடந்துள்ளது.
யானை வருவதை பார்த்ததும் நடராஜ் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள்ளாகவே யாைன துரத்தி சென்று நடராஜை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது.
இதில் நடராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் நடராஜின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தடாகம் சாலையில் குவிந்தனர்.
அவர்கள், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை பிடித்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. பள்ளி பஸ்கள் சாலையில் நின்றிருந்தன.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார், வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக தடாகம் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி அருண்குமார் யானை தாக்கி உயிரிழந்த நடராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- தமிழ்நாடு முழுவதுமே இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- அனைவரையும் முட்டாள் ஆக்குவது தான் பா.ஜ.க. அரசியல்.
கோவை:
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய உள்ளோம்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடுவது என்பது அந்தந்த கட்சிகளின் முடிவு. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாடு மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாடு முழுவதுமே இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளனர்.
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு தி.மு.க.வினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை கிழக்கே போ என்று கூறினால், அவர் மேற்கே போவார். இப்படி தான் அவர் நடந்து கொள்வார். நடிகர் விஜயின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம். வேறு எதுவும் இல்லை.
ஐ.ஐ.டி இயக்குனராக உள்ள காமகோடி மாணவர்களுக்கு எதை சொல்லிக்கொடுக்க வேண்டுமோ, அதனை சொல்லிக் கொடுக்காமல் மூட நம்பிக்கையை சொல்லிக்கொடுக்கிறார்.
விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட காலத்தில் கோமியம் குடியுங்கள் என கூறுகின்றனர். அனைவரையும் முட்டாள் ஆக்குவது தான் பா.ஜ.க. அரசியல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை:
அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.
இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.
இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-
கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.
இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






