என் மலர்
கோயம்புத்தூர்
- இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை, பிப்.5-
திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடக்க இருந்தது.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் பங்கேற்க சென்றனர். அவர்களை அந்தந்த மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு இந்து முன்னணியினர் புறப்பட்டனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதாக உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தடையை மீறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினரான ராம்நகரை சேர்ந்த சதீஷ், நிர்வாகிகள் குனியமுத்தூர் பிரபாகரன், புதிய சித்தாபுதூரை சேர்ந்த தசரதன், பாபா கிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.***
இவர்களது மகள் தேவி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் தனது மகன்களான ரித்திக், ரோகித் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரித்திக், ரோகித் ஆகியோர் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
கிட்டம்மாள் பாட்டி தனது மகள் தேவியை பார்க்க மாதத்தில் 2 முறை பல்லடம் செல்வார்.
அப்படி செல்லும் போது, அங்கு கிட்டம்மாள் பாட்டியின் பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் பளுதூக்கும் பயிற்சி செய்துள்ளனர்.
இதனை பார்த்த கிட்டம்மாள் பாட்டிக்கு, தானும் பளுதூக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரிடமும், மகள் மற்றும் பேரன்களிடம் தெரிவித்தார்.
பேரன்கள் உடனே தங்களது பாட்டிக்கு பளுதூக்குவது குறித்து பயிற்சி அளித்துள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டம்மாள் பாட்டி தனது மகள் வீட்டிற்கு சென்று விடுவார்.
அங்கு பேரன்கள் அவருக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வந்தனர்.
மேலும் தாங்கள் பயிற்சி பெற்று வரும் உடற்பயிற்சி நிலையத்திற்கும் அழைத்து சென்றனர்.
அந்த உடற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர் சதீஷ், கிட்டம்மாள் பாட்டி பயிற்சி செய்வதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மேலும் பாட்டிக்கு, பளுதூக்குவதில் இருக்கும் ஆர்வத்தை அறிந்து கொண்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிக்கு அழைத்து சென்றார்.
அங்கு நடந்த போட்டியில், கிட்டம்மாள் பாட்டி தனது முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5-வது இடம் பிடித்து அசத்தினார். இதுதவிர கவுந்தப்பாடியில் நடந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஸ்ட்ராங் மேன் ஆப் சவுத் இந்தியா 2024 என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கிட்டம்மாள் பாட்டிக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பது விருப்பம். இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
- தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
- தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது.
வடவள்ளி:
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை யொட்டி கோவிலுக்கு பக்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
- வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிந்தனர்.
- மலையேற்றத்துக்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்க சுவாமி உள்ளது.
7-வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் இன்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்களுக்கு அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை முகாமில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் வைத்திருந்த உடமைகளையும் வனத்துறையினர் சோதித்தனர்.
அவர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி பொருட்கள் இருந்தால் அதனை அவர்களிடம் வாங்கி விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர்.
பின்னர் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேற்ற பயணத்தை தொடங்கினர். அப்போது கைகளில் மூங்கில் குச்சிகள் மற்றும், தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர்.
இன்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை மலையேற அனுமதி உள்ளதால் வருகிற நாட்களில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மலையேற்றத்துக்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்றப் பயணத்தின்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும். அத்தியாவசியமான பொருட்களான குடிநீர், உணவு, மருந்து பொருட்களை எடுத்து வர வேண்டும். மலையேற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும். அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பின்னர் மலையேற வேண்டும்.
மேலும் மலையேற்றத்தின்போது தலைவலி, நெஞ்சு வலி, தலைசுற்றுதல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த பதிவு.
- தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக மோசடி செய்யும் கும்பல் தொடர்பாக கோவை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
- தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது.
- சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
- 2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஈரோடு சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரூ.19.03 கோடி அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை தொடர்பான திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து, கிளை அலுவலகம் பொள்ளாச்சியில் செயல்பட்ட நிலையில், 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து, 2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை முடிவில் ஈமு பார்ம்ஸ் இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.19.03 கோடி அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் சுசி ஈமு கோழி நிறுவனம் மீது 10 மோசடி வழக்குகள் உள்ளன.
- சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கோவை:
திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்தவர் யேசுதாஸ்(வயது33).
இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட்டு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில் யேசுதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுவது வழக்கம்.
அதன்படி யேசுதாசுக்கு ஜெயிலில் உள்ள தொழிற்சாலையில் பணி ஒதுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
கடந்த 27-ந்தேதி யேசுதாஸ், தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மதியம் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
யேசுதாஸ் மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயில் கைதி மரணம் அடைந்துள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோவை மத்திய ஜெயில் துணை வார்டன் மனோரஞ்சிதம், உதவி வார்டன் விஜயராஜ், தலைமை காவலர்கள் பாபுராஜ், தினேஷ் ஆகிய 4 பேரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
- ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
வடவள்ளி:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.
பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.
தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கொடியேற்றத்துக்காக 75 அடி உயர மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவி மரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கிறது.
அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் முன்புள்ள கொடிக்க ம்பத்தில் குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1 மணிக்கு மயான பூஜையும், 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30க்கு மகா பூஜை நடக்கிறது.
13-ந் தேதி(வியாழன்) காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6.30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்து இழுத்தல், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திரு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர்.
15-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி, மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றுவதற்காக, சர்க்கார்பதி வனத்தில் இருந்து கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
100-க்கும் மேற்பட்டோர் வனத்திற்கு சென்று 75 அடி உயர மூங்கில் மரத்தை வெட்டி சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
- மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது.
- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு சுயம்புவடிவில் காட்சி தரும் சிவனை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரையிலும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
மேலும் மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
- இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள்.
- சீமானின் ஆமைக்கறி கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி, "சம்ஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் இன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் பட்டம் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று ஒரு கோட்பாடு சொல்லியபோது தமிழ் என்பது தனித்த மொழி என்று அரசியல் களத்தில் பண்பாட்டுக் களத்தில் வென்று காட்டியவர் தந்தை பெரியார்.
சமஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் பேசுவாரே என்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர். ஆர்.எஸ்.எஸ்.-இன் கைக்கூலியாக மட்டுமில்லை, இந்திய அரசியலில் தமிழ்நாடு தமிழர் அரசியல், ஈழ விடுதலையில் தேசிய இன உரிமை என அத்தனையையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.
எங்களை போன்ற இளைஞர்களின் அறிவை சுரண்டி, பொருளாதாரத்தை சுரண்டி, உழைப்பை சுரண்டி, இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள். சீமானின் ஆமைக்கறி, மான் வேட்டை உள்ளிட்ட கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.
ஒரு போராளியை மாவீரரை ஸ்டார் ஓட்டல் செப் போல காட்டி, இளைஞர்களின் போராட்ட எழுச்சியை, தமிழ், தமிழர் மீதான உரிமையை மட்டுப்படுத்தியுள்ளார். இது ஆபத்தான மனநோய் மட்டுமில்லை, அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்" என்று தெரிவித்தார்.
- யானை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது.
- வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் உள்ளது.
இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதியில் வெகுநேரமாக சுற்றிய காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றது.
அங்கு ரேஷன் கடையின் கதவை உடைத்து தள்ளியது. இந்த நிலையில் ரேஷன் கடையில் இருந்து சற்று தொலைவில், அன்னலட்சுமி (67) என்ற மூதாட்டியின் வீடு உள்ளது.
இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் அன்னலட்சுமி, கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து ஓட முயன்றார்.
ஆனால் யானை அவரை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது. இதில் மூதாட்டி இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கு நின்றருந்த யானையை சத்தம் போட்டு காட்டுக்குள் விரட்டினர். பின்னர், காயம் அடைந்த மூதாட்டி அன்ன லட்சுமியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அன்னலட்சுமிக்கு, மானாம்பள்ளி வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.






