என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை.

    கோவை:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.

    11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.

    கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

    அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

    ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உ யர்மட்டக்குழு உறுப்பினர்மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    * ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
    • அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை கொடிசியாவில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தொழில் வளத்திற்கும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் புகழ்பெற்ற கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு முதல் முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    தமிழகத்தில் சமூக நீதியும் காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியும் காட்டப்படுகிறது. இது தமிழகத்தின் தனி சிறப்பாகும். இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோ மொபைல், ஐ.டி, காலணி உற்பத்தி, மின்னணு பொருட்கள் என அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.

    அதிலும் ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழகத்தின் பங்கு மட்டும் 33 விழுக்காடு.

    நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில் 61.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தி.முக. ஆட்சி அமைந்ததும் துணிகள் துறை என தனி துறை உருவாக்கினோம். தொழில்நுட்ப ஜவுளிதுறையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னை, கோவையில் 2 கருத்தரங்குகளை நடத்தினோம்.

    இப்படி பல முயற்சிகள் எடுத்து இந்த துறையின் வளர்ச்சிக்கு உழைக்கக்கூடிய அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த துறை வளர்ச்சிக்காக அரசு செய்துள்ள திட்டங்கள், சலுகைகள், சாதனைகள் பற்றி அவர் உங்களிடம் பேசுவார். இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பு உலக வாடிக்கையாளர்களை சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு புதிய சந்தைகள் கண்டறிவது, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம்

    இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக ஜவுளித்துறைக்கு மட்டும் 9 ஆயிரத்து 264 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டிலும் ரூ.915 கோடி மதிப்பில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-2026-ம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லை என்று சொன்னாலும் உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

    பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி நிறுவனங்களுக்கு அதி நவீன நெசவு மற்றும் பின்னலாடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து நீங்களும் வளர்ந்து, தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் திராவிட மாடல் அரசின் பெருங்கனவில் ஜவுளித்தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி இதற்கு பெரிதும் உதவும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கோவையில் நடந்த மாநாட்டை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

    நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதி அளிக்கிறேன். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து விழாவில் தொழில் தொடங்க ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அரசு கைத்தறித்துறைத் செயலாளர் அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கைத்தறி இயக்குனர் மகேஸ்வரி, நிர்வாக இயக்குனர் கவிதா, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.
    • திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.

    கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

     இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியதாவது:-

    விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர்.

    உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது.

    வெறும் 5 சதவீத பண்ணையாளர்களே அந்த அளவிற்கு பெறுகின்றனர்.

    தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சராசரியாக அதிக தொகை கறிக்கோழி வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இது உற்பத்தி 90 சதவீதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இயல்பாக ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாக உள்ளது. பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.

    நாள்தோறும் 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை கறிக்கோழிகள் வழக்கம் போல் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றன. 'விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்' என்ற பெயரில் தான் இந்த பிரச்னை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

    முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ஆலோசனைப்படி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது அரசு கொள்முதல் செய்யும் தொழில் அல்ல. ஒப்பந்த நிறுவனங்களுக்கும்ம் பண்ணையாளர்களுக்கும் இடையிலான வர்த்தகமாகவே இது நடைபெறுகிறது. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே அரசு தலையிட முடியும்.

    பண்ணையாளர்கள் தாங்களே சொந்தமாக கோழிகளை வளர்க்கிறோம் என கூறுகின்றனர். தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டியுள்ள நிலையில், பலர் இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த விவசாயியையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

     

    மேலும், தென்னை நார் மஞ்சி விலையை குறைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை சலுகை விலையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் இணைந்து முன்வைக்க வேண்டும்.

    பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் அல்லது தண்ணீர் வைக்க வேண்டாம் என தவறான தகவல்களை பரப்பக் கூடாது. திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.

    டிசம்பர் மாதமே வளர்ப்பு தொகையை ரூ.1 உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும், விற்பனை விலை உயரும்போதும் அதேபோல் கிலோவுக்கு ரூ.1 அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சுமார் 3 லட்சம் கோழிக் குஞ்சுகள் இறந்ததாக தகவல் உள்ளது.

    கோழிக் குஞ்சுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைய கறிக்கோழி விலை உயர்வு இந்த போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல; இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும்.

    சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தமிழ்நாடு அதிக நுகர்வோர்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

    தற்போதைய விலை உயர்வு படிப்படியாக குறையும். மேலும் தற்போது விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்பவர் மூலம் ரூ.20 வழங்க வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.
    • கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர்.

    கோவை:

    புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். நேற்று நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

    இதுபற்றி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

    மதுவிலக்கு, ஊழல், கனிம வள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலை மாறி உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப் போகிறவர்களுடன் பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கொண்டு வரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிந்தித்து வருகிறோம்.

    கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமாக எந்தக்கட்சியும் அணுகவில்லை.

    தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென்மாவட்டங்களில் யாரும் வெற்றி பெற முடியாது. நாங்கள் தனித்து விடப்படவில்லை.

    புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள் என்றார். 

    • பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.

    கோவை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று கோவை வந்தனர். கோவை காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தாமோதரன், செ.ம.வேலுசாமி, வைகைசெல்வன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர்.

    பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • கேரளா-தமிழக எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான வாத்து, கோழிகள் சில வாரங்களுக்கு முன்பு திடீரென இறந்தது. அதனை தொடர்ந்து நடத்திய சோதனையில் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள், வாத்துகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கேரளா-தமிழக எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள 1200 கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி பண்ணைகளில் அசாதாரண கோழி இறப்பு உள்ளதா? பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை. இங்கிருந்து தான் கோழிகள் சப்ளை செய்யப்படுகிறது. அங்கிருந்து வரத்து இல்லை. இருப்பினும், 1200 பண்ணைகளிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உரிமையாளர்கள் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகள், கறிக்கடைகள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் மாதந்தோறும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் தற்போது வரை நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் பண்ணைகளில் திடீரென கோழிகள் இறப்பு அதிகமாக இருந்தால் அல்லது பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை டாக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 'பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா' நேற்றும் இன்றும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று (16/01/2026) நடைபெற்ற நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து சுழற்றிய சிலம்பம் ஆகிவை பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

    ஈஷாவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவைச் சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    இயற்கை விவசாயத்தில் அத்தியாவசியமானதாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

    முன்னதாக வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் வெளிநாட்டவர் உட்பட அனைத்து தன்னார்வலர்களுக்கும் சிலம்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் கோசாலையில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து, மாலையில் கோவையைச் சேர்ந்த 'அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின்' கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தனர்.

    • கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
    • சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு ஆகும். முதன்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை.

    பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதன்பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
    • எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.

    கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

    அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

    தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார். 

    • தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.
    • கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

    கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழ்நாடு அரசின் கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்ததையே கூறினேன்.

    * தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான்.

    * தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் எந்த பிரச்சனையுமே இல்லை.

    * கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

     * விஜயின் பிரசாரத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகின்றனர். அதில் இருந்து மக்களின் எண்ணம் தெரிகிறது.

    * அது ஒரு சக்திதான். அதை யாராலும் மறுக்கவே முடியாது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டில் அரசியல் சக்தியாக உருவாகி விட்டார்.

    *  அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இது காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார்.
    • நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும்.

    உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் முதல் இடம் விஜய்க்கு தான். 2-வது இடத்தில் தான் பிரதமர், 3-வது இடம் முன்னாள் ஆந்திர முதல்-அமைச்சர், 4-வது இடத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.

    அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது.

    ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரே 100 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என அ.தி.மு.க.வை பார்த்து குறிப்பிட்டார். அப்படி என்றால் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று பொருள்.

    தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அதுபோன்று தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் வரலாறு படைப்பார். தலைவர் வருவார். முதல்வர் ஆவார் என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

    நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளுமே வேண்டாம். புதிய முகம் தான் தேவை என தமிழக மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

    பொதுவாகவே ஒரு திரைப்படத்தை வெளியிடும் போது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு இதுபோன்ற தடைகள் வரும். பொங்கல் வரை காத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று பாருங்கள். டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நமது கூட்டணியில் இடம் பெறுவார்கள்.

    மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோடு ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. ஆனால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் அங்கே உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். திரைப்படம் வெளியான பிறகு மக்களை வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும் என்றார்.

    ×