என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி- செங்கோட்டையன்
- தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார்.
- நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
கோவை:
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தில் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும்.
உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் முதல் இடம் விஜய்க்கு தான். 2-வது இடத்தில் தான் பிரதமர், 3-வது இடம் முன்னாள் ஆந்திர முதல்-அமைச்சர், 4-வது இடத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.
அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரே 100 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என அ.தி.மு.க.வை பார்த்து குறிப்பிட்டார். அப்படி என்றால் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று பொருள்.
தி.மு.க ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆர். அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அதுபோன்று தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் வரலாறு படைப்பார். தலைவர் வருவார். முதல்வர் ஆவார் என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளுமே வேண்டாம். புதிய முகம் தான் தேவை என தமிழக மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
பொதுவாகவே ஒரு திரைப்படத்தை வெளியிடும் போது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு இதுபோன்ற தடைகள் வரும். பொங்கல் வரை காத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று பாருங்கள். டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நமது கூட்டணியில் இடம் பெறுவார்கள்.
மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோடு ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. ஆனால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் அங்கே உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். திரைப்படம் வெளியான பிறகு மக்களை வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும் என்றார்.






