என் மலர்
கோயம்புத்தூர்
- வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
- யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது.
வால்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நண்பர்கள் 2 பேரும் கொடுங்கலூரில் இருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு புறப்பட்டனர்.
அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர். ஆணகயா என்ற இடத்தில் வந்த போது சாலையில் யானைகள் கூட்டம் நின்றிருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டனர்.
சாலையில் நின்றிருந்த யானைகள் கூட்டம் திடீரென இவர்களை நோக்கி வேகமாக வந்தன.
இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை அந்தந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.
யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது. வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நடமாடிய யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். பின்னர் வாகனத்தையும் மீட்டனர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
யானைகள் கூட்டம் சாலையில் வழிமறித்து நிற்பதையும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவதையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2 தினங்களாக முலுக்கப்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லக்கூடிய சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கிறது. எனவே வனத்துறையினர் மிக கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கனரக வாகனங்களுக்கு பின்னால் சிறிய வாகனங்கள் வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கோவை:
நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேசன் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
- இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும்.
கோவை:
தனியார் யூடியூப் சேனலில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்தந்த மாவட்ட போலீசாரும் தாங்கள் செய்த வழக்குகளில் அவரை கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டன.
பழைய எப்.ஐ.ஆர்களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் கோவை சைபர் கிரைம் போலீசார் 15 வழக்குகளையும் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார், முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் இதுவரை 129 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும். விசாரணை முடிந்ததும் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றனர்.
- ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும்.
- சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
கோவை விமான நிலையத்தில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அது உதவும்.
மத்திய அரசு எவ்வளவு தந்து கொண்டிருக்கின்றது. அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. தமிழகம் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநரை பொறுத்தவரையில் மிக, மிக நேர்மையானவர்.
அவர் தன் கடமையை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்
தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதை காட்டிலும் கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரையில் இரு வேறு தீர்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றது. கேரளாவை பொறுத்தவரையில் கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை அனுமதிக்கும் அல்லது நியமிக்கின்ற முழுமையான அதிகாரம் இருப்பதாக சொல்லி இருந்தார்கள்.
இங்கு அது மாறான தீர்ப்பு வந்திருக்கின்றது. எனவே இது சட்ட வல்லுனர்களைக் கொண்டுதான் முறையாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள்.
நடிகர் கமல்ஹாசன் பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்கிறார்.
இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ, அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கிறவரை பற்றி என்னிடத்தில் எதற்கு கருத்து கேட்கிறீர்கள்.
பதவிக்காக அவர் அப்படி பேசி இருக்கிறார். இங்கே தீப்பற்றி எரிந்தாலும் அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக அவர் இருக்கிறார்.
சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா. அதுபோலத்தான் நாம் பேசுகின்ற போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி படைத்தவர்கள்.
முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு பாதுகாப்பு தருவது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
- சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பின்னர், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, அவர் கோவையில் வீடு- வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-
மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் முருகன் கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம். இந்த மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும், மேல்சபை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்று உள்ளார்.
சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.
பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியை பெற்று உள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன்- தம்பிகள் பிரிவது சேருவது இயல்பு.
அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது.
கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
- 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோவையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்ததாக மதுரை பொதுக்குழுவில் திமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது
அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, யாருக்கும் எப்போதும் துரோகம் இழைத்ததில்லை. திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபேது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.
தூர்வாரப்படாததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாய் தூர்வாரப்படாதது அவர்களுக்கே பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னக்கல்லார், பெரிய கல்லார், ஈடியார், பண்ணிமேடு, சோலையார் அணை, சேக்கல்முடி, தலனார், கவர்கள், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி, சக்தி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
வால்பாறையில் உள்ள நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணலி எஸ்டேட் பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 12 செ.மீ, வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, வால்பாறை தாலுகாவில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-126, வால்பாறை பி.ஏ.பி-114, வால்பாறை தாலுகா-106, சின்கோனா-103, சோலையார்-95, சிறுவாணி அடிவாரம்-46, பொள்ளாச்சி தாலுகா-31, மாக்கினாம்பட்டி-37.
மழையால் சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 936 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது.
- நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது.
- நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் விழுந்துள்ளன. சில எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்கள் மரம் விழுந்து, அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
மழையால் வால்பாறையில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.
பொள்ளாச்சி நகரில் பெய்த கனமழைக்கு பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, கோவை சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் அந்த சாலைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
பொள்ளாச்சி நகராட்சி 33-வது வார்டில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது. நெகமத்தில் இருந்து பெரியபெட்டி செல்லும் ரோட்டில் என்.சந்திராபுரத்தில் உள்ள பழமையான மரம் வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெகமம் செட்டியாக்காபாளையம், கக்கடவு, காணியாலம்பாளையம் பகுதிகளில் மழைக்கு 3 வீடுகள் சேதம் அடைந்தன.
- சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
- சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகனமழைக்காக சிவப்பு நிற எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது.
நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. மாவட்டத்தில் முக்கிய அணைகளாக உள்ள சிறுவாணி, ஆழியார், பில்லூர், சோலையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளன.
சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
அணையில் இருந்து பெறப்படும் நீர் வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த 24-ந் தேதி 19.02 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 25-ந் தேதி 21.55 அடி, 26-ந் தேதி 26.60 அடி, 27-ந் தேதி 30.24 அடி, நேற்று 32.73 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்தது.
கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15.71 அடி உயர்ந்துள்ளது. மேலும் இன்று அணையில் 6 செ.மீ மற்றும் அடிவாரப்பகுதியில் 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை கடந்த 25-ந்தேதி நள்ளிரவு நிரம்பியது. அன்று முதல் அணையின் 4 மதகுகள் திறந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 2 அடியாக இருந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3889.58 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலயில் 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 59.69 அடியாக உயர்ந்துள்ளது.
ஆழியாறு அணை நீர்மட்டம் கடந்த 24-ந் தேதி 75.30 கனஅடி நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 80.20 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது.
இதேபோல சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொது மக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் சாலை, கருமலை எஸ்டேட் பகுதியில் குரூப் ஆபிஸ் அருகேயும் மரம் விழுந்தது.

வால்பாறை தலைநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது. அதேபோன்று பெரியகல்லாறு, சின்னகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று காலை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 6-வது கொண்ைட ஊசி வளைவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
தொடர் கனமழையுடன் வீசிய சூறாவளி காற்றுக்கு சோலையார் அணை பகுதி சத்யா நகரில் உள்ள சுதர்சனன் என்பவரின் வீட்டின் மேல் கூரை காற்றில் பறந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு சோலையார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோவை மாநகரில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை வெளுத்து வாங்கியது. இரவிலும் இந்த மழை நீடித்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ. மீ மழை பதிவாகி உள்ளது.
மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-116, சின்கோனா-70, சிறுவாணி அடிவாரம்-86, வால்பாறை பி.ஏ.பி-58, வால்பாறை தாலுகா-55, சோலையார்-61.
- கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
- கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை:
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பில்லூர் அணையில் நேற்று திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இன்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது.
ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும்.
இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும்.
அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 மாவட்டங்களுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 79.50 அடியாக இருந்தது.
நேற்று காலை 11 மணியளவில் ஒரே நாளில் 7.50 அடி உயர்ந்து 87 அடியாக இருந்தது. மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவு 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 94.50 அடியை தாண்டியது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






