என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசன் பதவிக்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார்- ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும்.
- சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
கோவை விமான நிலையத்தில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அது உதவும்.
மத்திய அரசு எவ்வளவு தந்து கொண்டிருக்கின்றது. அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. தமிழகம் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநரை பொறுத்தவரையில் மிக, மிக நேர்மையானவர்.
அவர் தன் கடமையை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்
தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதை காட்டிலும் கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரையில் இரு வேறு தீர்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றது. கேரளாவை பொறுத்தவரையில் கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை அனுமதிக்கும் அல்லது நியமிக்கின்ற முழுமையான அதிகாரம் இருப்பதாக சொல்லி இருந்தார்கள்.
இங்கு அது மாறான தீர்ப்பு வந்திருக்கின்றது. எனவே இது சட்ட வல்லுனர்களைக் கொண்டுதான் முறையாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள்.
நடிகர் கமல்ஹாசன் பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்கிறார்.
இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ, அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கிறவரை பற்றி என்னிடத்தில் எதற்கு கருத்து கேட்கிறீர்கள்.
பதவிக்காக அவர் அப்படி பேசி இருக்கிறார். இங்கே தீப்பற்றி எரிந்தாலும் அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக அவர் இருக்கிறார்.
சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா. அதுபோலத்தான் நாம் பேசுகின்ற போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி படைத்தவர்கள்.
முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு பாதுகாப்பு தருவது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.






