என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை இருக்கும்.

    கோவை:

    பாப்பநாயக்கன்பாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.

    மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    • குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவை:

    கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.

    அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

    பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.

    • கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
    • தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வால்பாறை:

    தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை 160 அடிய உயரம் கொண்டது.

    கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக ஜூன் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

    பின்னர் மழை சற்று குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து விட்டது. மேலும் மின் உற்பத்திக்கும், பரம்பிக்குளம் அணைக்கும் நீர் திறக்கப்பட்டதால் சோலையாறு அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.

    குறிப்பாக சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 879 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 63 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:

    சின்னக்கல்லார்-75, சோலையார்-59, வால்பாறை பி.ஏ.பி-56, சின்கோனா, வால்பாறை தாலுகா-54, சிறுவாணி அடிவாரம்-23, பொள்ளாச்சி தாலுகா-11, ஆனைமலை தாலுகா-9, கிணத்துக்கடவு தாலுகா-8, மதுக்கரை தாலுகா-5 என மழை பெய்துள்ளது. 

    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • தரவரிசை பட்டியல் வெளியான அன்றே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வும் நடக்கிறது.

    கோவை:

    கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 405 இடங்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 921 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    6 ஆயிரத்து 921 இடங்களுக்கு மொத்தம் 30 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையானது நேற்று தொடங்கியது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பணியானது வருகிற 21-ந்தேதி வரை நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

    தரவரிசை பட்டியல் வெளியான அன்றே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வும் நடக்கிறது. இந்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. பின்னர் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 27-ந் தேதி நடக்க உள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை இருக்கும்.

    கோவை:

    கீரணத்தம், கேவி சகாரா மற்றும் கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை (18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அந்த வழித்தடங்களில் இருந்து மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கீரணத்தம் துணைமின்நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டியின் ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சியின் ஒரு பகுதி, சிவானந்தபுரம், சக்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி. நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு. மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
    • கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.

    அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.

    கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஆழியார் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கனடி அடி நீர் வந்து கொண்டிருந்தது. 200 கன அடி நீர் பாசத்திற்காக திறந்து விடப்படுகிறது. மழை வலுக்கும்பட்சத்தில் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 4,334 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 4 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ஆற்றுக்கு குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதேபோல கோவை குற்றாலம் மற்றும் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    • நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
    • கோவை மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

    • பில்லூர் அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.
    • பில்லூர் அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியான முழு கொள்ளளவை எட்டியது.

    அணையின் முழு கொள்ளளவான 100 அடியை எட்டிய நிலையில், 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.

    அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • சரளாவின் பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.

    பீளமேடு:

    கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வழக்கம் போல பயணிகள் வந்தனர். அப்போது அவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

    அங்கு வந்த பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவரது பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக விமான நிலைய இருப்பிட மேலாளர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அந்த பெண் கோவையை சேர்ந்த சரளா என்பதும், பெங்களூருவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்ததும் தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான போலீசார் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    கோவை பெண்ணிடம் துப்பாக்கி தோட்டா எப்படி வந்தது, அவர் இதனை யாருக்காக எடுத்து சென்றார் என்பது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மாநில அரசு கொடுக்க கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது.
    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை.

    கோவை:

    தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது. பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். அப்போது தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியவரும். எனவே மக்கள் எங்களின் வாக்குறுதியை எடுத்து படிக்க வேண்டும்.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பா.ஜ.க நிறைவேற்றி உள்ளது. தற்போது 3-வது முறையாக ஆட்சி நடந்து வருகிறது. 3-வது முறையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையுமே நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

    மாநில அரசு கொடுக்க கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது. 511 தேர்தல் வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எங்களை போன்று தி.மு.க.வில் யாராவது இதுபோன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாங்கள் 4 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என தெரிவிக்க முடியுமா?.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்தியாவில் 100 சதவீத மக்களுக்கும் சிலிண்டர் கொடுத்துள்ளோம். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் குறைப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் குறைத்துள்ளோம். எங்களது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் குறைக்கப்பட்டுள்ளது.

    கோவை விமான நிலைய விரிவாக்க பணியில் இங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை இன்னும் அரசு முழுமையாக கொடுக்கவில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்கள் தான்.

    இந்தியா முழுவதும் பயன்பெறும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் பயன்படுத்தாமல் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து கொண்டு வந்தனர். அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதேபோன்று பிரதமரின் மருந்தகம் இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் முதல்வரின் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திட்டமும் தோல்வியடையும் நிலையில் தான் உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியுள்ளீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அண்ணாமலை பதில் அளித்து பேசும் போது, நான் எந்த கடிதமும் எழுதவில்லை. நான் என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்று தான் சொல்வேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் நான் சொல்வேன்.

    நான் பா.ஜ.கவின் தொண்டன். உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மற்ற கட்சி வளர்ப்பதற்காக நான் இல்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    • கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கடக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருகிற 16-ந் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து இந்த 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு இன்று தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்.

    அதன்படி கோவை மாவட்டத்திற்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையினர், 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையில் 30 பேர் உள்ளனர். இவர்கள் இன்று கோவை வந்து, அங்கிருந்து அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதியான வால்பாறைக்கு செல்கின்றனர்.

    இதேபோல் 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் மதியம் கோவைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழை, வெள்ளத்தின் போது மக்களை காக்க வேண்டிய உபகரணங்கள், படகு, கயிறு மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கான ராட்சத கருவிகள் உள்பட பல்வேறு உபரகணங்களையும் எடுத்து கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். அங்கு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, மழை வெள்ளத்தின்போது மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திற்கு 3 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தர உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் அதிகம் மழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை, நீலகிரியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அப்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இந்த 2 மாவட்டங்களிலும் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரிடர் மீட்பு படையினர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர்.

    ×