என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

234 தொகுதிகளிலும் அதிரடி பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி தினமும் 2 ரோடு-ஷோ
- ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
- சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பணியை தொடங்கி விட்டன. ஆளும்கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளில் இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
அதேபோல் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருந்த, தற்போதைய பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறுவதற்காக மிக வேகமாகவும், சுறுசுறுப்புடனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அ.தி.மு.க கட்சியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பே திண்ணை பிரசாரத்தை தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்திக்கின்றனர். அப்போது, மக்களிடம் அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பதுடன், தி.மு.க ஆட்சியின் அவலநிலைகளையும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, இதில் உடன்பாடு உள்ள கட்சிகளை கூட்டணியில் இணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் வருகிற 7-ந் தேதி கொங்கு மண்டலமான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 21-ந் தேதி வரை முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார்.
தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ரோடு ஷோ நடத்துகிறார். இந்த ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டறிவதுடன், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். தி.மு.க ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். ரோடு ஷோ முடியும் இடங்களில் மக்கள் மத்தியில் பிரசார வேனில் நின்றவாறு உரையாற்றவும் உள்ளார்.
இதுமட்டுமின்றி சட்டசபை தொகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள், நகை தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த சந்திப்பின் போது தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தந்த சட்டசபை தொகுதிகளில் தற்போது முன்னேற்பாடு பணிகளை கட்சியினர் தீவிரமாக செய்துவருகின்றனர்.
முதலில் வருகிற 7-ந் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அன்று காலை 9 மணிக்கு வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
9.30 மணிக்கு அங்குள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் சங்கத்தினரை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு பிளாக் தண்டர் சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ செல்கிறார். ரோடுஷோவில் நடந்து சென்று மக்களை நேரில் சந்திக்கிறார். 3 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ 4 மணிக்கு நிறைவடைகிறது. ரோடு ஷோ நிறைவின் போது மக்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.
5 மணிக்கு காரமடையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.
மேட்டுப்பாளையம் தொகுதியை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதியான பெரியநாயக்கன் பாளையத்திற்கு வருகிறார். அங்கும் அவர் ரோடு ஷோ நடத்த உள்ளார். 7 மணிக்கு துடியலூரிலும், 8 மணிக்கு சரவணம்பட்டியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மக்களையும் சந்திக்கிறார்.
அன்று இரவு கோவையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பஸ் நிலையத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. அங்கிருந்து சாலை மார்க்கமாக நடந்து பி.என்.புதூர், லாலிரோடு, என்.எஸ்.ஆர் ரோடு வழியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு கோவை கிராஸ்கட் ரோடு, சாய்பாபா காலனி, சங்கனூர் ரோடு வழியாக கணபதி நகர் செல்கிறார். கணபதி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
கோவை தெற்கில் வடகோவையில் இருந்து ரோடு ஷோ தொடங்கி சிந்தாமணி, அர்ச்சனா தியேட்டர் மேம்பாலம் வழியாக, மரக்கடை, கோனியம்மன் கோவில் செல்கிறார். அங்கிருந்து சுங்கம் வழியாக புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் ரோடு ஷோ நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர். கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கோவையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.






