என் மலர்
கோயம்புத்தூர்
- பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.
கோவை:
குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.
கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.
கோவை:
கோவை குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர், எம்.ஸ்.பார்க் அவென்யூ, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறந்து கிடப்பதுடன், சில பூனைகள் மாயமாகியும் விட்டன. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்று இரவில் நடமாடுவது என்ன என்பது குறித்து விசாரித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உண்மையிலேயே சிறுத்தை தான் நடமாடுகிறதா? அல்லது வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.
அதன்படி எம்.எஸ்.பார்க் அவென்யூ பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகேயும், ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு செல்லும் வழி உள்பட 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். அந்த கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெ.ஜெ.நகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் வயதான சிறுத்தை ஒன்று இப்பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த பகுதி முழுவதும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
- சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் கேரளாவில் ஒரு வழக்கில் ஆஜராக சென்றதால் அன்றைய தினம் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சயானிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சயான் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிகிறது. அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
- கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
- போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தகவல் வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். அந்த கிளினிக்கிற்குள் நோயாளிகளை போல போலீசார் நுழைந்தனர். அப்போது தேவராஜ் (வயது 54) என்பவர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் மருத்துவம் பார்த்த தேவராஜிடம் மருத்துவம் படித்தற்கான சான்றிதழை கேட்டனர். அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து வந்ததும், இந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் இறந்ததும், அதன்பின் கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் போலி டாக்டர் தேவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
- ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது:-
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது.
அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.
கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.
கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
- திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.
காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.
அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.
மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.
இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.
திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.
மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.
- போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி தனியார் பஸ் சென்றது.
அந்த பஸ்சில் இளம்பெண் ஒருவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அவரின் அருகில் மற்றொரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் தனது கைக்குழந்தையை, இருக்கையில் இருந்த இளம்பெண்ணிடம் ரெயில் நிலையம் வந்ததும் வாங்கி கொள்வதாகவும், அதுவரை வைத்திருக்குமாறும் கொடுத்தார்.
அந்த பெண்ணும் வாங்கி வைத்து கொண்டார். ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.
இதையடுத்து அந்த பெண், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சென்று சம்பவத்தை கூறி கைக்குழந்தையை ஒப்படைத்தார்.
போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ராஜன்(வயது32) என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல கமிட்டியினரை சந்தித்தார்.
அப்போது பஸ்சில் இளம்பெண் விட்டு சென்ற குழந்தை, தன்னுடைய குழந்தை என்றும், அதற்கான உரிய ஆவணங்களையும், போட்டோவையும் காண்பித்தார்.
அவரை குழந்தைகள் நல கமிட்டியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜன் போலீசாரிடம், எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். நான் தற்போது என்ஜினீயராக உள்ளேன்.
கல்லூரி படிப்பை ஈரோட்டில் படித்தேன். அப்போது, எனக்கும், திருச்சியை சேர்ந்த திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தோம்.
எங்களது காதலுக்கு 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கோவை சுந்தராபுரத்தில் வசித்து வந்தோம்.
எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் எனது தந்தை உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
நான் திவ்யாவை திருமணம் செய்ததால் தான் இப்படி நேர்ந்ததாக எனது குடும்பத்தினர் தெரிவித்ததால், எனது மனைவி மனமுடைந்து போனார்.
அவரை நான் சமாதான படுத்த முயன்றபோது எல்லாம் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் நான் திருச்சூருக்கு கட்டுமான பணிகளை பார்வையிட சென்றேன். அங்கிருந்து எனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டேன்.
அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவரை தேடி வந்தேன்.
இந்த நிலையில் தான் அவர் பஸ்சில் வந்த பயணியிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்ற தகவல் அறிந்து அதிர்ச்சியானேன்.
உடனே திருச்சூரில் இருந்து புறப்பட்டு, கோவை வந்தேன் தெரிவித்தார்.
மேலும் எனது மனைவி அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை திரும்பி வருமாறு அழைத்துள்ளேன். வராவிட்டாலும் குழந்தையை நானே வளர்ப்பேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை. போலீசார் அவரது மனைவி திவ்யாவை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அவர் வந்த பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
எதற்காக குழந்தையை பஸ்சில் விட்டு சென்றார்? குடும்ப சண்டை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து 2 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணைக்கு பின்பு 2 பேரையும் குழந்தைகள் நல கமிட்டியினர் முன்பு ஆஜர்படுத்தி, அந்த குழந்தையின் பாதுகாப்புக்கு சரியான நபர் யார் என்று முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
- பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைைமச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது.
இதில் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கு சம வாயப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில மகளிர் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொள்கை மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
2001-ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
- ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார்.
- அமைச்சரின் உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை:
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (வயது 40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று கோவைக்கு வந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அமைச்சர் மதிவேந்தன் ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா அல்லது சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.
- முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது45). இவர் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து இவர் பேசினார். அப்போது எதிர்முனையில் இந்தியில் பேசிய மர்மநபர், தான் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன்.
நான் மும்பையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. அந்த நபர் இந்தியில் பேசியது, சுப்பிரமணியத்துக்கு புரியவில்லை.
இதையடுத்து அவர் தனது அருகே இருந்த நண்பரான செந்தில்குமாரிடம் கொடுத்தார். அவர், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபரும் ஆங்கிலத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியான இவர்கள் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோவை போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரை கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அழைத்து விசாரித்தனர். இவர்களிடம் மும்பை போலீசாரும் விசாரித்தனர்.
தொடர்ந்து, அவர்களுக்கு வந்த செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மர்மநபர் இன்டர்நெட்டில் இருந்து பேசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஐ.டி. யாருடையது. எங்கிருந்து அழைத்தார். அவர் கூறியது உண்மைதானா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.
இன்னும் சில தினங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் கும்பிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சமயத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது கோவையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சந்தை பகுதி, கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.
பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பஸ் நிலையங்களிலும் யாராவது சந்தேகத்திற்கி டமாக சுற்றி திரிகின்றனரா? என்பதையும் போலீசார் கண்காணிக்கின்றனர். பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொள்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்கர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்கின்றனர்.
கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடைவீதிகளில் போலீசார் சாதாரண உடை அணிந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டு வருகிறார்கள். இதுதவிர மாவட்ட எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விசாரித்த பின்னர் கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
- பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும்.
கோவை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்துக்கும் அவர் செல்கிறார். இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது.
ராமர் அனைவருக்கும் பொதுவானவர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து முக்கிய நபர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அரசு விடுமுறையை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்கின்றன. தமிழ்நாட்டில் விடுமுறை இல்லை என்றாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பெரும் விழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மசூதியை இடித்து கோவில் கட்டியதாக கூறும் உதயநிதி வரலாற்றை படிக்க வேண்டும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, வழிகாட்டுதலின் படிதான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. அதனால் இடிப்பதை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.
மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியாது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.

கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் தான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்று ஆடியோ வெளியிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்துக்குள் மேலும் 9 ஆடியோக்கள் வெளிவரும். அதன்பின்பு விரிவாக பேசுகின்றோம். இந்த ஆடியோக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கையாண்டு இருக்கின்றனர்? என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இந்த ஆடியோக்களை பொய் என்று தி.மு.க. சொல்லட்டும் பார்க்கலாம்.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார். தேர்தல் கூட்டணி குறித்து பாராளுமன்ற குழு பார்த்து கொள்வார்கள். 32 மாத ஆட்சியில் தி.மு.க. எதையும் மக்களுக்கு செய்யவில்லை. மாநில உரிமையை மீட்டெடுப்பது என்பது வெறும் வாய்ச்சொல்.
எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி. பா.ஜனதாவில் முதலமைச்சராக என்னை விட முழு தகுதி இருக்க கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பா.ஜனதாவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. மற்ற கட்சிகளை போல முழு கட்சியும் ஒற்றை தலைமை பின்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
- மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன்-அழகுகோமதி தம்பதியின் 2-வது மகள் ஸ்ரீநிதா (வயது13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது 4 வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார்.
ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார்.
ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் 'மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.
இதுகுறித்து ஸ்ரீநிதா கூறுகையில், நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார்.






