என் மலர்tooltip icon

    சென்னை

    • தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.

    சென்னை:

    டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.

    தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

    இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.

    விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.

    தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.

    டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    • திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.
    • அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி.

    முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.

    தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.

    வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?

    துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என கூறினார்.

    • பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
    • நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

    கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெற்ற நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

    விருப்பமனு அளித்தவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றனர். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி நேர்காணலில் பங்கேற்றார்.

    பின்னர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு அளித்தேன். நல்ல முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று நம்புகிறேன்.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் செய்வேன், என்னுடன் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் செய்வார்கள் என்ற உறுதி எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

    பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். அத்தொகுதியில் உள்ள பெண்களோடும், இளைஞர்களோடும், விவசாயிகளோடும் இத்தனை வருடங்களாக இருந்து கொண்டு வருகிறேன்.

    தமிழ்நாடு முழுவதுமே என் ஊர் தான். 7 வருடங்களுக்கு முன்பாக ராஜபாளையம் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால் அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன்.

    கேள்வி:- ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும்.

    கேள்வி:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

    பதில்:- அறிவுரை என்பதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கான பாதை என்பது அவரவர்களுக்கு என அமையும். அவரவர் ஆலோசனைப்படி அவரவர் பாதை அமையும். சினிமாவோ, அரசியலோ இரண்டுமே பொதுவாழ்வில் கடினமான பாதை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வின் வாக்குகளை விஜய்யால் அறுவடை செய்ய முடியாது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது பயணம் தற்போது தான் தொடங்கி உள்ளது. மேலும் ராஜபாளையத்தில் போட்டியிட்டால் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்.

    2026 சட்டமன்ற தேர்தலில் புதியவர்களும் வர வேண்டும். அதைவிட மக்களுக்கு யார் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்களோ, மக்களுக்காக உழைக்கிறார்களோ, அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார். 

    • நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.
    • தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    * வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்...

    * வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

    * மொழிப்பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது.

    * 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது.

    * நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

    * நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.

    * தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு.

    * எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார். 

    • இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
    • இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்

    ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

    பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.

    பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.

    தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.

    நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். 

    • வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.
    • மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    * நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.

    * திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது.

    * வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள்.

    * வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.

    * நம்மை யாராலும் எதனாலும் பிரிக்கமுடியாது. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம், இன்னும் பல ஆண்டுகள் தொடரும் சொந்தம்.

    * வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழுமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

    * வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

    * மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.

    * தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    • மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.

    மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.

    ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.

    அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!

    தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?

    இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான், அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.

    அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?

    "அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.

    பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

    ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

    ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
    • சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது.

    அதன் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

     

    இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் பேருந்தில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர்.

    சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    10-1-2026- ஒரு கிராம் ரூ.275

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    8-1-2026- ஒரு கிராம் ரூ.272

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    • அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

    சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

    அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    ×