என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்யால் அ.தி.மு.க. வாக்குகளை அறுவடை செய்ய முடியாது- நேர்காணலில் பங்கேற்ற நடிகை கவுதமி பேட்டி
    X

    விஜய்யால் அ.தி.மு.க. வாக்குகளை அறுவடை செய்ய முடியாது- நேர்காணலில் பங்கேற்ற நடிகை கவுதமி பேட்டி

    • பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
    • நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

    கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெற்ற நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

    விருப்பமனு அளித்தவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றனர். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி நேர்காணலில் பங்கேற்றார்.

    பின்னர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு அளித்தேன். நல்ல முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று நம்புகிறேன்.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் செய்வேன், என்னுடன் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் செய்வார்கள் என்ற உறுதி எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

    பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். அத்தொகுதியில் உள்ள பெண்களோடும், இளைஞர்களோடும், விவசாயிகளோடும் இத்தனை வருடங்களாக இருந்து கொண்டு வருகிறேன்.

    தமிழ்நாடு முழுவதுமே என் ஊர் தான். 7 வருடங்களுக்கு முன்பாக ராஜபாளையம் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால் அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன்.

    கேள்வி:- ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும்.

    கேள்வி:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

    பதில்:- அறிவுரை என்பதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கான பாதை என்பது அவரவர்களுக்கு என அமையும். அவரவர் ஆலோசனைப்படி அவரவர் பாதை அமையும். சினிமாவோ, அரசியலோ இரண்டுமே பொதுவாழ்வில் கடினமான பாதை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வின் வாக்குகளை விஜய்யால் அறுவடை செய்ய முடியாது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது பயணம் தற்போது தான் தொடங்கி உள்ளது. மேலும் ராஜபாளையத்தில் போட்டியிட்டால் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்.

    2026 சட்டமன்ற தேர்தலில் புதியவர்களும் வர வேண்டும். அதைவிட மக்களுக்கு யார் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்களோ, மக்களுக்காக உழைக்கிறார்களோ, அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

    Next Story
    ×