என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருக்கிறது- இபிஎஸ்
- இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
- இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்
ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.
பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.
தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.






