என் மலர்
சென்னை
- SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
- தொடர்ந்து செயலாற்றுவோம்!
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், #SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார்.
- கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க.
- மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு கண்டனம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோவில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் திமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
- வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.
- ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
* SIR குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
* வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.
* SIR என்பது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலைதிட்டம் அல்ல.
* SIR என்பது நமது குடியுரிமையை ஆய்வு செய்யும் செயல் நடவடிக்கை, இது ஒரு மறைமுக செயல் திட்டம்.
* தற்போது செயல்படுத்துவது பா.ஜ.க.வின் திட்டம் அல்ல, RSS-ன் செயல் திட்டம்.
* ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
- ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
* தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைத்தடியாக நடந்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
* மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
* ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
* தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
- ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக தி.மு.க.வினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை. கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் தி.மு.க.வின் மறைமுகச் செயல் திட்டமாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாரி ராகம் பாடி வருகிறார். இன்னொரு பக்கம் தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை. இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல தி.மு.க. தொடர் நாடகங்களை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில ஐ.எ.எஸ்.அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் சட்ட விரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்தவாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூ. முன்னாள் மாநில செயலாளர் முத்தரசனும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்று கோஷமிட்டனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
திருவள்ளூரில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பி. சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
- தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. இது சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேநேரத்தில் இன்னும் விலை உயர்ந்துகொண்டே செல்லும் என்று நினைத்து தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், பவுன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இதற்கிடையே நேற்று ரூ.180 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், ரூ.1,440 அதிகரித்து பவுன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது. காலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,280-க்கும், மாலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,480-க்கும் விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் உயர்ந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,600 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
06-11-2025- ஒரு கிராம் ரூ.165
- இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?
உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?
பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு
சென்னை:
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் காரில் பயணிப்போரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, சென்னை மாநகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே போலீசார், ஆர்.பி.எப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்






