என் மலர்
சென்னை
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் 28-ந்தேதி சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சவரன் மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 80-க்கு விற்றது. இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ. 8 ஆயிரத்து 65-ஆக இருந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
- 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் தேர்வு எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
- வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 430 பேர் எழுதவில்லை (ஆப்சென்ட்). இதற்கிடையே பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
இந்த தேர்வை பள்ளி மாணவர்களாக 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேரும், பள்ளி மாணவிகளாக 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேரும், தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 755 பேரும், சிறைவாசி தேர்வர்களாக 137 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 90 பள்ளி மாணவ-மாணவிகள் எழுதவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
- தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்!
- வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
சென்னை:
1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! என்று கூறியுள்ளார்.
- தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது.
- வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 படுக்கைகள் உள்ளது. இதனை தவிர 2 ஐ.சி.யூ. படுக்கைகளும் இருக்கிறது. இந்த தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சாய் வித்யா கூறும்போது, "அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக வெப்பவாதத்துக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே வெப்பவாதத்துக்கு என 10 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு அமைக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெப்ப வாதத்துக்கு தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
- வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
- நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம்.
- இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.
தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது.
கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர்.
1971-இல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது.
வங்கதேச விடுதலைக்காக இந்திய இராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தலைவர் கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.
பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் சீனா படையெடுத்தபோதும், இந்தியா பாகிஸ்தான் போரின்போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி திரட்டித்தந்த தி.மு.க.வையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேயின் கொள்கையை ஆதரிப்பவர்கள்.
நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான்.
இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது.
செப்டம்பர் 14-ஆம் நாளை 'இந்தி திவஸ்' என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.
'கன்னடத்தைப் புறக்கணித்து, இந்தியைத் திணிப்பவர்களை ஏற்க மாட்டோம்' என்று கூறிக் கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?
எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. இலட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார்.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையம்- ரெயில் நிலையம் இடையே மேம்பாலம்.
- மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
சென்னை நகரில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்- ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் இடையே புறநகர் ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது "நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும். மக்களின் ஆட்சேபனையை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
- எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
- மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

- ஆசிரியர்களை நியமிப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
- கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆட்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2025-ஆம் ஆண்டு பிறந்து மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், இன்று வரை நடப்பாண்டிற்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர்களை நியமிப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள், 2768 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், 56 சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 10, 355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.
ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அதேபோல், கடந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே ஆள்தேர்வு அறிவிக்கை 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை தான்.
ஆனால், அந்தப் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் ஓராண்டாகியும் இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
அதன்பின் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. 2024-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தகுதித் தேர்வும் நடக்கவில்லை.
2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை அண்மையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
அதுவும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு கடுமையாக எச்சரித்த பிறகும் தான் அதுவும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்குமா? என்பதும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும்.
அதை மூடி விடலாமே? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தேர்வு நடத்தப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
- சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில் விழாக்களில் சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், புதுவை திருமலையராயன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணையின் முடிவில், கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், சினமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
- அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்த நிலையில் 56 கட்சிகள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் 1977 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (7-ந்தேதி) 265 பஸ்களும், சனிக்கிழமை (8-ந் தேதி) 270 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமன்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.






