என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வெப்பவாத சிகிச்சைக்கு தனி வார்டு
- தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது.
- வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 படுக்கைகள் உள்ளது. இதனை தவிர 2 ஐ.சி.யூ. படுக்கைகளும் இருக்கிறது. இந்த தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சாய் வித்யா கூறும்போது, "அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக வெப்பவாதத்துக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே வெப்பவாதத்துக்கு என 10 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு அமைக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெப்ப வாதத்துக்கு தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.