என் மலர்tooltip icon

    சென்னை

    • 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
    • மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.

    தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.

    129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.

    தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தப்பட்டது.
    • தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தவெக தோழர்கள், மகளிரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

    பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

    தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.

    ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
    • சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு.

    பெண்கள் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் அனைவரும் பச்சை பொய் கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு. மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.

    தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

    அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்று வலைதளம் வழியாக நாளை (9-ந்தேதி) முதல் 11-ந்தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.

    இல்லையெனில் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ந்தேதி வெளியிடப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
    • ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.

    சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

    அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.
    • பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,

    நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான 50 மின் ஆட்டோக்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல் கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 இளஞ்சிகப்பு நிற ஆட்டோக்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 ஆட்டோக்கள் என மொத்தம் 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த அடையாள அட்டை மூலம், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லவும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் பயிர்க் கடன், கால்நடைக் கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு 5 சதவிகித கூடுதல் தள்ளுபடி, ஆவின் நிறுவன கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கவும், இ-சேவை மையங்களில் அனைத்து சேவைகளுக்கும் 10 சதவிகித சேவைக் கட்டணம் குறைவு போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்று பயன்பெறலாம்.

    தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46,592 மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

    பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ், ஐந்து பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலப் பத்திரமும், நிலம் வாங்குவதற்கான மானியமாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய்துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறுவதற்கான உதவித் தொகை ஆணைகளும், 10 பெண் தொழிலாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளும் என மொத்தம் 50 பெண்களுக்கு 1.18 கோடி ரூபாய் நிதி உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற செல்வி முத்துரத்தினஸ்ரீ, செல்வி ஜே. நிரஞ்சனா, செல்வி எஸ். வர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 2025-ம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சவுமியாவிற்கு.

    2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதினையும், விருது தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் அதிரடிப்படை காவலர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, சாகச நிகழ்ச்சிகளையும், தங்களின் கண்களைக் கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை கையாளுவதையும், ஆயுதங்களை பயன்படுத்திடும் முறை குறித்தும் செய்து காட்டியதை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு, கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், மோகன், ஜோசப் சாமுவேல்,சுதர்சனம், வேலு, மூர்த்தி, பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
    • தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை :

    தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த விழாவில் மாநில நிர்வாகிகள் நல்லதம்பி காளிராஜ் வேணுராம் , மகளிர் அணி நிர்வாகிகள் மகாலட்சுமி, சுப மங்களம், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தன், பிரபாகரன், பழனி, மாறன், செந்தில்குமார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினர் பிரேமலதாவுக்கு பிரமாண்ட ஆளுயுர மாலை அணிவித்தனர். பிரேமலதா கேக் வெட்டி மகளிர் அணிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    பின்னர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-

    தே.மு.தி.க.வில் மகளிர் அணியினருக்கு ஒரு சீருடையை உருவாக்கி கொடுத்த நமது தலைவர் கேப்டன் இன்று தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

    கல்லூரி விழாவில் எனக்கு நேற்று அளிக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை தே.மு.தி.க. மகளிர் அணியினருக்கு அர்ப்பணிக்கிறேன். மகளிர் தினமான இன்று கேப்டனின் லட்சியம், கொள்கைகளை அனைவரும் வென்றெடுப்பதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மும்மொழி கொள்கை தொடர்பாக எங்களது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்கிற கேப்டன் வாக்கின்படி தே.மு.தி.க. செயல்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தில் தொகுதிகளை குறைக்க கூடாது. இதற்காக தே.மு.தி.க. தமிழக அரசுடன் இணைந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பிரேமலதாவிடம், தே.மு.தி.க.வுக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதில் கூற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி கேட்ட போதும் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
    • தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே

    2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

    * த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.

    * நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்.

    * நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.

    * சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நண்பர் யார்? நீலிக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும்

    * தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்.

    • 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
    • 14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 11-ந்தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.

    தமிழகத்தில் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும். 

    • எனது ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • இல்லத்தை மட்டுமல்ல உலகத்தையும் இயக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள்.

    சென்னை:

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெண் காவலர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின், மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள்.

    * பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மகளிர் தின விழாவில் பங்கேற்கிறோம்.

    * வாழ்நாள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காக உழைத்தவர் தந்தை பெரியார்.

    * நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.

    * பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.

    * மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் பிறந்தவன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.

    * எனது ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இல்லத்தை மட்டுமல்ல உலகத்தையும் இயக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள்.

    * முக்கிய நரகங்களில் புதிதாக 72 கோடி ரூபாய் மதிப்பில் 700 படுக்கைகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

    * காஞ்சிபுரம். ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

    * 24 மணிநேர பாதுகாப்பு வசதியுடன் பெண்களுக்கான விடுதிகள் புதிதாக கட்டப்படும்.

    * கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன்களில் பெண்களுக்கு முன்னுரிமை, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. வழங்கப்படும்.

    * தமிழ்நாடு முழுவதும் 4.42 லட்சம் மகளிருக்கு ரூ.3,190 கோடி வங்கிக்கடன் இணைப்பு.

    * பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம்.

    * மகளிர் உயர மாநிலம் உயரும். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கும் பெண்களை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்.

    * ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டம், ஆண்களை போல அனைத்து உரிமையும் பெண்களுக்கு உண்டு.

    * பெண்கள் முன்னேறுவதை பார்த்து கேலி எண்ணும் மனப்பான்மையில் இருந்து ஆண்கள் வெளிவரவேண்டும்.

    * தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் பயன்பெற வேண்டும் என்று கூறினார். 

    • பிள்ளைகள் ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும்.
    • முதலமைச்சர் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஏன் எனக்கு உலக மொழி தேவை. நாங்கள் மொழிபெயர்ப்பாளரையா உருவாக்க போகிறேன். நான் ஒரு விஞ்ஞானியை உருவாக்க ஆசைப்படுகிறேன். நல்ல மருத்துவரை, நல்ல பொறியாளரை உருவாக்க ஆசைப்படுகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து அப்படி தான் செய்துகொண்டிருக்கிறோம்.

    * நாம் அனைவரும் இருமொழிக்கொள்கையை படித்து விட்டு தானே இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளும் அப்படி படிக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறோம்.

    * எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால் அது option-ஆ இருக்கணுமே தவிர Compulsion-ஆ இருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து.

    * அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர், எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை மையப்படுத்தி, அதை கற்றுக்கொண்டால் தான் பணம் தருவேன் என்று சொல்வது கிட்டத்தட்ட பிளாக்மெயில் மாதிரி உள்ளது என்று சொல்கிறார்.

    * போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளியில் பா.ம.க. துண்டுடன் நடனமாடின விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று அவர் கூறினார்.

    • 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

    இத்திட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. 

    ×