என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முன்னாள் துணைவேந்தர் யசோதாவுக்கு அவ்வையார் விருது- முதலமைச்சர் வழங்கினார்
    X

    முன்னாள் துணைவேந்தர் யசோதாவுக்கு அவ்வையார் விருது- முதலமைச்சர் வழங்கினார்

    • 1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.
    • பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,

    நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான 50 மின் ஆட்டோக்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல் கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 இளஞ்சிகப்பு நிற ஆட்டோக்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 ஆட்டோக்கள் என மொத்தம் 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த அடையாள அட்டை மூலம், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லவும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் பயிர்க் கடன், கால்நடைக் கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு 5 சதவிகித கூடுதல் தள்ளுபடி, ஆவின் நிறுவன கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கவும், இ-சேவை மையங்களில் அனைத்து சேவைகளுக்கும் 10 சதவிகித சேவைக் கட்டணம் குறைவு போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்று பயன்பெறலாம்.

    தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46,592 மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

    பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ், ஐந்து பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலப் பத்திரமும், நிலம் வாங்குவதற்கான மானியமாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய்துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறுவதற்கான உதவித் தொகை ஆணைகளும், 10 பெண் தொழிலாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளும் என மொத்தம் 50 பெண்களுக்கு 1.18 கோடி ரூபாய் நிதி உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற செல்வி முத்துரத்தினஸ்ரீ, செல்வி ஜே. நிரஞ்சனா, செல்வி எஸ். வர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 2025-ம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சவுமியாவிற்கு.

    2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதினையும், விருது தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் அதிரடிப்படை காவலர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, சாகச நிகழ்ச்சிகளையும், தங்களின் கண்களைக் கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை கையாளுவதையும், ஆயுதங்களை பயன்படுத்திடும் முறை குறித்தும் செய்து காட்டியதை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு, கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், மோகன், ஜோசப் சாமுவேல்,சுதர்சனம், வேலு, மூர்த்தி, பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×