என் மலர்
சென்னை
- பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறுவதா? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மேலும், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும். அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேள்வியை முன்வைக்கின்றோம் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, சாத்தியக்கூறு இல்லை என்று கூறும் பதிலில் உள்நோக்கம் இல்லை. எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்த பின்னரே சாத்தியக்கூறு உள்ளதா? இல்லையா? என கூறுகிறோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு 10 திட்டங்களை முன்வைக்கலாம். சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
- புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிற நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.
- 3 கட்சிகளுக்கும் இடையே 2-வது கட்சி யார் என்பதுதான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், தேசிய ஜனநாயக கூட்டணில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் கூறியதாவது:-
வடஇந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டிலே உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
அ.தி.மு.க.வும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பா.ஜ.க.வும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிற நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியது அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நான் தான் 2-வது பெரிய கட்சி என்று க்ளைம் செய்து இருக்கிறார். ஆகவே, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க., ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே 2-வது கட்சி யார் என்பதுதான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரியான சூழலில், தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது.
தலைமை என்பது முக்கியமான விஷயம் தான். ஆனால் பொருந்தா கூட்டணி. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்படுகிற கூட்டணியை தவிர கொள்கை அடிப்படையில் பொருந்தா கூட்டணி. அதனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நடவடிக்கைகளில் முரண்பாடு இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறோம். ஆகவே இந்த கூட்டணியில் ஒரு வலு இருப்பதை உறுதிப்பாடு இருப்பதை நம்மால் காண முடிகிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற கட்சிகளுக்கிடையே இருக்கிற கூட்டணி அடிப்படையிலே கொள்கை பொருந்தா கூட்டணி
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் கனியும். ஆனால் இன்னும் அதற்கான சூழல் அமையவில்லை. திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஒன்று பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கோரிக்கை வலுப்பெறும் என்றார்.
- குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
- குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
டெல்லி சென்றார். அங்கு பளார்... பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.
இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.
வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம்.
அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.
குறைகளே சொல்லக்கூடாது என்பது அல்ல. குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
ஆகவே அவர் கூறிய அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுகின்ற எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.
- குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசுகையில், பல பொய் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க., அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும். தி.மு.க.வின் பிரச்சனைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பா.ஜ.க. வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை என்று விமர்சித்து இருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், என் மாமனார் காசுல நான் வாழல.. லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல.. சொந்தமா உழைச்சு சுயம்புவாக உங்க முன்னாடி நிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா குறித்த அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு இதர அரசியல் கட்சிகளுடன் பயணித்து வருகிறார்.
மேலும் ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
- கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
- பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியில் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தி, பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- கூட்டணி பற்றி பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சனைகளுக்காக அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட் டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித் ஷாவும் உறுதி செய்துள்ளார்.
அதே நேரத்தில் டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணியவைப்பதற்காக பா.ஜ.க. செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வருகிற 6-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
- பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய அன்றே 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், அதற்கு மறுநாளான 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தமிழக சட்டசபை கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி உள்ளது.
- கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
- கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது.
அதன்பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் விலை மளமளவென சரிந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோடு, அதைவிட அசுர வேகத்தில் விலை அதிகரித்தது.
இதற்கிடையே தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது.
இவ்வாறு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.
இந்த விலை உயர்வு குறைந்தபாடில்லை. கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, 'கிடுகிடு'வென உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.
கடந்த 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 840-க் கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த சூழலில், கடந்த 28-ந்தேதி தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 720-க் கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, அதாவது கடந்த 29-ந்தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 360-க்கும், சவரன் ரூ.66 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையானது.
இதனை தொடர்ந்து, தங்கம் விலை மீண்டும் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.65-ம், சவரன் ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 425-க்கும், சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையானது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720
27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-03-2025- ஒரு கிராம் ரூ.113
30-03-2025- ஒரு கிராம் ரூ.113
29-03-2025- ஒரு கிராம் ரூ.113
28-03-2025- ஒரு கிராம் ரூ.114
27-03-2025- ஒரு கிராம் ரூ.111
- நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.
- அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அதன் காரணமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளார்.
நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால் அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை.
அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா... இவ்வளவு இடம் இருக்கே... இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த செயல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.43.50 காசுகள் குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ரூ.1,965-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.






