என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - ஆதவ் அர்ஜுனாவுக்கு அவரது மச்சான் எச்சரிக்கை
    X

    அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - ஆதவ் அர்ஜுனாவுக்கு அவரது மச்சான் எச்சரிக்கை

    • அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    அவர் பேசுகையில், பல பொய் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க., அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும். தி.மு.க.வின் பிரச்சனைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பா.ஜ.க. வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை என்று விமர்சித்து இருந்தார்.

    ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், என் மாமனார் காசுல நான் வாழல.. லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல.. சொந்தமா உழைச்சு சுயம்புவாக உங்க முன்னாடி நிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா குறித்த அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு இதர அரசியல் கட்சிகளுடன் பயணித்து வருகிறார்.

    மேலும் ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.



    Next Story
    ×