என் மலர்
சென்னை
- சென்னை விமான நிலையத்துக்கு இரவு வரும் அவர் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
- முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அந்த பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் டெல்லியில் முகாமிட்டு, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருவது அதற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்துக்கு இரவு 10.15 மணிக்கு வரும் அவர் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதால் நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து மாநில தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தெலுங்கானா முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனின் மறைவுக்கு, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு நேரில் சென்று அமித்ஷா ஆறுதல் கூற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 நாள் பயணத்தில் எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் செல்வார் என்று தெரிகிறது.
- இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
- சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிப்பதென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார்:
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு "நீட்" தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இந்தவகையில், "நீட்" தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர்.
பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.
அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
பின்னர், துணை முதலமைச்சர்முன்மொழியப்பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.
- பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள்.
- இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.
* பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் தி.மு.க. தலைமையின் பொய்முக வரலாறு, அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது.
* எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தேர்தல் அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது.
* அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி (வாக்குறுதி எண்: 160) என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி மோசடிப் பிரசாரம் வேறு.
* ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: அது ஒன்றிய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனர்.
* பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
* அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர்.
* இயலாமையை மறைப்பதற்காக, எல்லாவற்றிற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க. தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்.
* இதோ இப்போது, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதலமைச்சர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறென்ன?
*நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது சமரசமற்ற நிலைப்பாடு.
* மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படுவதே நிரந்தரத் தீர்வு. சிறப்பு ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு என்றும் நாம் கூறினோம்.
* நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமன்று. நிரந்தரமாக மக்கள் பக்கம் நிற்கும் நாம். எப்போதும் இப்படித்தான் எதிலும் தீர்வை நோக்கியே யோசிப்போம்.
* வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது.
* மக்கள் விழித்துக்கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது.
* இதுவரை எம் மாணவச் செல்வங்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் தி.மு.க. தலைமை. மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
* தி.மு.க. தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.
மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. நிச்சயமாக அது 2026-இல் நிகழும், நிகழ்ந்தே தீரும்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
- அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.
- டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், குமரி அனந்தனின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக வடபழனி மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு அங்கு, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வடபழனி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
- பயிற்சி மையங்களின் நலனுக்காகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
- மத்திய அரசை தவறாக வழி நடத்தி கொண்டு வரப்பட்ட தேர்வுதான் நீட்.
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை பின் வருமாறு:-
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.கழகம் எதிர்த்துக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
பொதுவாக, நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்களை பாதிக்கக் கூடியது. அதனால், அதை தவிர்த்து பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்டதாக நம்முடைய அரசு இருக்கிறது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நான் நம்புகிறேன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மாநில அளவில் நடந்து கொண்டு இருந்த நுழைவுத் தேர்வுகளை 2006-ஆம் ஆண்டு அதற்காக தனிச்சட்டம் இயற்றி அகற்றினார். அந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்தார். இதன் அடிப்படையில்தான், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்து திறன்மிக்க நம்முடைய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த மருத்துவர்கள் மூலமாகத்தான் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு மருத்துவத்துறையில் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம் அதற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்துக் கொண்டு வருகிறது.
மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எப்படி அந்த மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்தது. நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதி வாய்ப்பு இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் நாம் போராடினோம்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2021-ஆம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கினோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.
சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியை பெரும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் இருக்கும் பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது என்று இந்தக் குழு தெரிவித்தது.
எனவே, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்தது. இந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு செயலாளர்களை கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை 13.9.2021 அன்று நான் முன்மொழிந்தேன். அந்தச் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இந்த சட்டம் முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவர் தன்னுடைய அரசியல் சட்டக் கடமையை செய்யாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். ஆனால், நாமும் சளைக்காமல் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற கடுமையாக போராடினோம்.
இந்த நிலையில் 1.2.2022 அன்று அதை திருப்பி அனுப்பினார். உடனடியாக, 5.2.2022 அன்று இதே மாதிரியான சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நாம் நடத்தினோம். அதில், இந்தச் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்புவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன்வடிவு மீண்டும் 8.2.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இந்த சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசு தலைவர் அலுவலகத்தில் நேரடியாக சென்று மனு அளித்தார்கள். இந்த தொடர் முயற்சிகளின் பயனாக ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தார் என்ற செய்தியை 4.5.2022 அன்று சட்டமன்றத்தில் நான் பகிர்ந்து கொண்டேன்.
நீட் விலக்கு தொடர்பான நம்முடைய போராட்டத்தின் அடுத்த கட்டமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை ஆயுஷ் துறை உள்துறை உயர் கல்வித்துறை என்று பல்வேறு அமைச்சகங்கள் கூறிய எல்லா விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இதையெல்லாம் ஏற்காமல் நம்முடைய மாணவர்களுக்கு பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நம்முடைய நீட் விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதலை மறுத்துவிட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற பேரவையில் வேதனையோடு தெரிவித்து இருந்தேன்.
ஒன்றிய அரசு நம்முடைய கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம் ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
எனவே அந்த வகையில் இந்த பிரச்சனையில் அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உங்களுடைய மேலான ஆலோசனைகளை நீங்கள் எல்லோரும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சில தங்களின் சுயநலனுக்காக சொல்லி ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருவது உங்களுக்கு தெரியும் நாட்டுக்கும் நன்றாக தெரியும்.
நேற்று உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தூய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.
- கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- 5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
- குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.
முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்ந்து ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
- பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கார் கதவை திறந்தபோது ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
Indirect Taxes and Customs என்ற பெயர் பலகையோடு வந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் உடலை கைப்பற்றினர்.
பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
- அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னை, அபிராமபுரம், கே.வி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). இவர் மீது தாழம்பூர் போலீஸ்நிலையத்தில் நிலமோசடி குற்றச்சாட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் தாழம்பூர் போலீசார் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென கார்த்திகேயன் வீட்டு வாசலில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்மன் அளிக்க வந்த போலீசார் கார்த்திகேயனை தாக்கியதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் நட்சத்திர ஓட்டலிலேயே தங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






