என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீட் விலக்கு பெற சட்டப்போராட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    நீட் விலக்கு பெற சட்டப்போராட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிப்பதென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார்:

    மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு "நீட்" தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

    இந்தவகையில், "நீட்" தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர்.

    பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.

    அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

    பின்னர், துணை முதலமைச்சர்முன்மொழியப்பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இறுதியாக,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.

    Next Story
    ×