என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெறும்.

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பணம் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. ரூ.600 கோடி வரை நிலுவை பணம் வர வேண்டி உள்ளது. இதுக்குறித்து நேரடியாக சென்று வலியுறுத்தியுள்ளோம்.

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    பூந்தமல்லி: பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சிநேயர் கோவில் தெரு, வைத்தீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள்.

    போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.

    பெருங்களத்தூர்: சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர்குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், EB காலணி ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket)முறையை பயன்படுத்தி 169 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42,33,865 பயணிகள் (Online QR 1,58,337; Paper QR 21,27,345; Static QR 2,89,018; Whatsapp - 5,73,997; Paytm 4,21,447; PhonePe – 3,37,549; ONDC – 3,26,172), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    • உதயநிதி ஸ்டாலின் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இதை கருத்தில் கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள்.
    • உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    நம் இதயமெல்லாம் நிறைந்து, நம்மை எந்நாளும் வழிநடத்தும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாளைச் செம்மொழிநாளாக ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் இல்லத்து விழாவைவிடவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் கொண்டாடி மகிழவுள்ள தருணத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மதுரை மண்ணுக்கேயுரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார்.

    மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திற்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி - கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்ஃபி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர். ஏறத்தாழ 5 மணிநேரத்திற்கு மேல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மதுரையில் கழகத்திற்கு அடித்தளமிட்ட மாவீரரும் - மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான மதுரை முத்து அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து, தலைவர் கலைஞருடன் இணைந்து கழகம் வளர்த்தவருடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

    ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதலமைச்சரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.

    துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.

    இரவு, மதுரையில் அண்ணன் அழகிரி அவர்களையும் சந்தித்து நலன் விசாரித்தேன். தங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனபோதும், பந்தல் அமைந்த இடத்துக்கு நேரே சென்றேன். மறுநாள் நடைபெறும் பொதுக்குழு குறித்த ஆலோசனைகளை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திவிட்டு, அதன்பிறகே உறங்கச் சென்றேன்.

    ஜூன் மாதம் என்பது, நமக்குத் தலைவர் கலைஞர் மாதம். அதன் முதன் நாளில், கலைஞர் அவர்களால் எனக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்ட மதுரையில் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவுக்குக் காலையில் புறப்பட்டுச் சென்றபோது, வழியெங்கும் பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்து வரவேற்பளித்து, வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

    கழகத்தின் இரத்தநாளங்களாக இருக்கும் இந்த உண்மைத் தொண்டர்களின் பிரதிநிதிகளாகத்தான் கழகத்தின் இதயமான பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதயமும் இரத்தநாளங்களும் எப்போதும் இணைந்து சீராகச் செயல்பட்டால்தான் கழகம் எனும் நம் உயிர் வலிவோடு நீடித்திருக்கும் என்பதை எண்ணியபடியே பொதுக்குழு நடைபெற்ற உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்து சேர்ந்தேன்.

    வந்திருப்பது மதுரையா, சென்னையா என்று யோசிக்கின்ற அளவுக்குக் கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அப்படியே கொண்டு வந்து மதுரையில் வைத்தது போன்ற அமைப்புடன் பொதுக்குழு அரங்கத்தைச் சிறப்பாக அமைத்திருந்தார் மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி. அவருடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடபட்டி மணிமாறன் மற்றும் மதுரை கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, பொதுக்குழு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். உணவு ஏற்பாடுகளும் மதுரைக்கேயுரிய மணத்துடன் சுவையாக அமைந்திருந்தது.

    ஏறத்தாழ 7000 பேர் திரண்டிருந்த பொதுக்குழுவில், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியின் வழியே நடந்து சென்று, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று, வணக்கத்தைத் தெரிவித்து மேடைக்குச் சென்றேன். கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் தலைமைக் கழக நிர்வாகிகளும் பங்கேற்கப் பொதுக்குழு எழுச்சியுடன் தொடங்கியது. துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி எம்.பி., இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்றிருப்பதால் அவரால் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை.

    வரவேற்புரையை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்க, இரங்கல் தீர்மானங்களைக் கழகச் செய்தித் தொடர்புத்துறைத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் வாசிக்க, அதனைத் தொடர்ந்து தீர்மானக்குழுத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்தாசன் அவர்களும் மற்றவர்களும் ஒவ்வொரு தீர்மானமாகப் படிக்க, அவற்றைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலியால் நிறைவேற்றித் தந்தனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கழகம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் தொடர்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத்தில் தற்போது 23 சார்பு அணிகள் உள்ள நிலையில், புதிதாகக் கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு அணிகள் தொடங்கப்படவிருப்பதையும், அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் கிரிராஜன் எம்.பி. வாசித்தார். கழகத் தணிக்கைக் குழு அறிக்கையைச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அளித்தார்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைச் செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வையும் அதனுடன் கூட்டணி வைத்துத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க.வையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் உடன்பிறப்புகளாம் உங்கள் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    சிறப்புத் தீர்மானமாக, 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை கழகத் தலைவர் என்ற முறையில் நானே பொதுக்குழுவில் அறிவித்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையைக் கழகச் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. காணொலித் திரை வாயிலாக விளக்கினார். இன்றைய அரசியல்களத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அதனை நாம் எப்படி கையாளவேண்டும் – அதற்கான கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் கழகத் தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும் - மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

    துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆ.இராசா எம்.பி., கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் ஆகியோர் உரையாற்றியபிறகு, நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராகத் தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான உடன்பிறப்புகள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடிதான் பேச்சைத் தொடங்கினேன். மக்கள் பாராட்டுகின்ற - இது தொடர வேண்டும் என விரும்புகிற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட, ஏழாவது முறையாக தி.மு.க. அரியணை ஏறிட உடன்பிறப்புகளான உங்களின் உழைப்புதான் முதன்மையானது.

    எந்தப் பதவியையும் பெறாத, எந்தப் பொறுப்புக்கும் வராத, அறிவாலய வாசலைக் கூடி மிதிக்காத, கழகமே உயிர்மூச்சு, கருப்பு - சிவப்புக் கொடியே தன் சொத்து என நினைக்கிற உண்மைத் தொண்டர்களால் 75 ஆண்டுகாலமாக வலிமையுடன் நிலைத்திருக்கும் கழகம், தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு, தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும்.

    என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள். நானும் என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை நம் தொண்டர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் ஓர் முக்கியமான அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன்.

    கழக உறுப்பினர்கள் யாரேனும் எதிர்பாராத விதமாகச் சாலை விபத்தில் இறக்க நேரிட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

    தொண்டனாகத்தான் என் கழகப் பணி தொடங்கியது. தொண்டர்களுடன்தான் என் கழகப் பணி தொடர்ந்தது. தொண்டர்களால்தான் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன். என் மீது அன்பைப் பொழியும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதுதான் நான் நம்பிக்கை வைத்துப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்த நினைக்கிறேன்.

    ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் கழக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள். அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

    உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ளத் தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவிருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன் என்று கூறியுள்ளார். 

    • நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.
    • 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    பி.என்.எஸ். 329 அத்துமீறி அண்ணா பல்கலைக் கழகத்துக்குள் நுழைதல்-3 மாத சிறை தண்டனை.

    பி.என்.எஸ். 126(2)-அனுமதியின்றி ஒருவர் மீது பலத்தை பயன்படுத்தி, காயம் ஏற்படுத்துதல்-ஒரு மாத சிறை தண்டனை

    பி.என்.எஸ். 87-பெண்ணை கடத்தி துன்புறுத்துதல்-10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் கட்ட செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 127(2)-சட்டவிரோதமாக பிடித்து வைத்து துன்புறுத்துதல்-ஒரு ஆண்டு சிறை தண்டனை

    பி.என்.எஸ். 75(2) பாலியல் தொந்தரவு செய்தல்-3 ஆண்டு சிறை தண்டனை

    பி.என்.எஸ். 76-நிர்வாணமாகி உடல் ரீதியாக துன்புறுத்துதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 64(1) பாலியல் தாக்குதல்-30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.25 ஆயிரம் அபராதம். இதை செலுத்த தவறினால் 3மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ்.351(3)-நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்று மிரட்டுதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 238 (பி) குற்றத்தை மறைத்தல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்- அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை

    தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 இ-ஆபாசமாக படம் பிடித்து பிறருடைய தனியுரிமையை மீறுதல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    இதனிடையே, நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். 

    • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் தங்களின் விடுமுறையில் செய்தவற்றை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தனர்.

    இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

    இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகளை வழங்கினார். இதனிடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தலைவர்களின் பிறந்தநாள்கள் உள்ளிட்ட சிறப்பு தருணங்களை பயன்படுத்தி தண்டனைக் காலத்தைக் குறைக்கக்கூடாது என்றும் நீதிபதி கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.
    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு குறைந்தது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தலைவர்களின் பிறந்தநாள்கள் உள்ளிட்ட சிறப்பு தருணங்களை பயன்படுத்தி தண்டனைக் காலத்தைக் குறைக்கக்கூடாது என்றும் நீதிபதி கட்டுப்பாடு விதித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    பாலியல் வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகள் அத்தகையக் குற்றத்தை வேறு எவரும் செய்யாமல் தடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அந்த வகையில் குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளிலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இதற்கு காரணமான அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.

    விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் போது, அங்கும் திறமையான வழக்கறிஞர்களை வைத்து குற்றவாளி தப்பிவிடாமல் தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கான இழப்பீடாக குற்றவாளி செலுத்தும் ரூ.90 ஆயிரம் அபராதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது. இது போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட மாணவிக்கு குறைந்தது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களை பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவர்கள் யார் ? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    • இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது.
    • வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.

    சென்னை :

    பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

    தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

    பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார். 



    • 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • ஐந்தே மாதங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

    சென்னை:

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வன்கொடுமை வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள், அதே போல 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை விரைவாகப் பெற்றுத்தருவதிலும் தமிழ்நாடு முதலமைச்சரும் அவர் தலைமையிலான திராவிட மாடல் அரசும் காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

    அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

    இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன்தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்வி நிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு 'யார் அந்தச் சார்?' என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.

    "அமைச்சர்களுடன் படம் எடுத்ததற்காக முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு எனக் குற்றம்சாட்ட முடியாது" என உயர்நீதிமன்றமே தலையில் கொட்டிய போதும் திருந்தாமல் பெண்களை அச்சுறுத்தி அவர்களது படிப்பை முடக்க வேண்டும் என்பதற்காக 'யார் அந்தச் சார்?' என புரளியை வைத்து மலின அரசியல் செய்து வந்தார் பழனிசாமி.

    உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவும் தனது அறிக்கையிலும் ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை அவனின் செல்போன் 'flight Mode' இல் தான் இருந்ததும், அவன் யாருடனும் பேசவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி

    இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி!

    தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி! எனக் கூறியுள்ளார். 

    • பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.
    • அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    * சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரனின் செல்போன் பிளைட் மோடில் மட்டுமே இருந்துள்ளது.

    * அப்பெண்ணை ஏமாற்ற, பயமுறுத்தவே ஞானசேகரன் செல்போனில் பேசுவது போல் நாடகம் ஆடியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    * செல்போன் பிளைட் மோடில் இருந்தது தொடர்பாக ஏர்டெல் மண்டல மேலாளர் நேரடியாக வந்து நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.

    * பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.

    * அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.

    * ஞானசேகரனின் செல்போன் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாகவும், அதிகாரிகள் நேரடியாகவும் சாட்சி அளித்துள்ளனர்.

    * இன்னும் இந்த வழக்கில் வேறு சிலர் இருப்பதாக இனிமேலும் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

    * பெண்கள் துணிந்து வந்து புகார் கொடுக்க வேண்டும், அநீதிக்கு எதிராக பயந்து இருக்கக்கூடாது என்றார்.

    • பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
    • அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.

    சென்னை :

    அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

    இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

    பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.

    அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

    FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?

    #SIRஐ_காப்பாற்றியது_யார் ?

    இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது.

    அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,

    அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! என்று கூறியுள்ளார். 



    ×