என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பொதுக்குழு"

    • என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள்.
    • உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    நம் இதயமெல்லாம் நிறைந்து, நம்மை எந்நாளும் வழிநடத்தும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாளைச் செம்மொழிநாளாக ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் இல்லத்து விழாவைவிடவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் கொண்டாடி மகிழவுள்ள தருணத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மதுரை மண்ணுக்கேயுரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார்.

    மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திற்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி - கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்ஃபி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர். ஏறத்தாழ 5 மணிநேரத்திற்கு மேல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மதுரையில் கழகத்திற்கு அடித்தளமிட்ட மாவீரரும் - மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான மதுரை முத்து அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து, தலைவர் கலைஞருடன் இணைந்து கழகம் வளர்த்தவருடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

    ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதலமைச்சரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.

    துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.

    இரவு, மதுரையில் அண்ணன் அழகிரி அவர்களையும் சந்தித்து நலன் விசாரித்தேன். தங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனபோதும், பந்தல் அமைந்த இடத்துக்கு நேரே சென்றேன். மறுநாள் நடைபெறும் பொதுக்குழு குறித்த ஆலோசனைகளை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திவிட்டு, அதன்பிறகே உறங்கச் சென்றேன்.

    ஜூன் மாதம் என்பது, நமக்குத் தலைவர் கலைஞர் மாதம். அதன் முதன் நாளில், கலைஞர் அவர்களால் எனக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்ட மதுரையில் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவுக்குக் காலையில் புறப்பட்டுச் சென்றபோது, வழியெங்கும் பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்து வரவேற்பளித்து, வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

    கழகத்தின் இரத்தநாளங்களாக இருக்கும் இந்த உண்மைத் தொண்டர்களின் பிரதிநிதிகளாகத்தான் கழகத்தின் இதயமான பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதயமும் இரத்தநாளங்களும் எப்போதும் இணைந்து சீராகச் செயல்பட்டால்தான் கழகம் எனும் நம் உயிர் வலிவோடு நீடித்திருக்கும் என்பதை எண்ணியபடியே பொதுக்குழு நடைபெற்ற உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்து சேர்ந்தேன்.

    வந்திருப்பது மதுரையா, சென்னையா என்று யோசிக்கின்ற அளவுக்குக் கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அப்படியே கொண்டு வந்து மதுரையில் வைத்தது போன்ற அமைப்புடன் பொதுக்குழு அரங்கத்தைச் சிறப்பாக அமைத்திருந்தார் மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி. அவருடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடபட்டி மணிமாறன் மற்றும் மதுரை கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, பொதுக்குழு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். உணவு ஏற்பாடுகளும் மதுரைக்கேயுரிய மணத்துடன் சுவையாக அமைந்திருந்தது.

    ஏறத்தாழ 7000 பேர் திரண்டிருந்த பொதுக்குழுவில், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியின் வழியே நடந்து சென்று, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று, வணக்கத்தைத் தெரிவித்து மேடைக்குச் சென்றேன். கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் தலைமைக் கழக நிர்வாகிகளும் பங்கேற்கப் பொதுக்குழு எழுச்சியுடன் தொடங்கியது. துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி எம்.பி., இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்றிருப்பதால் அவரால் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை.

    வரவேற்புரையை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்க, இரங்கல் தீர்மானங்களைக் கழகச் செய்தித் தொடர்புத்துறைத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் வாசிக்க, அதனைத் தொடர்ந்து தீர்மானக்குழுத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்தாசன் அவர்களும் மற்றவர்களும் ஒவ்வொரு தீர்மானமாகப் படிக்க, அவற்றைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலியால் நிறைவேற்றித் தந்தனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கழகம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் தொடர்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத்தில் தற்போது 23 சார்பு அணிகள் உள்ள நிலையில், புதிதாகக் கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு அணிகள் தொடங்கப்படவிருப்பதையும், அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் கிரிராஜன் எம்.பி. வாசித்தார். கழகத் தணிக்கைக் குழு அறிக்கையைச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அளித்தார்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைச் செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வையும் அதனுடன் கூட்டணி வைத்துத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க.வையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் உடன்பிறப்புகளாம் உங்கள் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    சிறப்புத் தீர்மானமாக, 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை கழகத் தலைவர் என்ற முறையில் நானே பொதுக்குழுவில் அறிவித்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையைக் கழகச் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. காணொலித் திரை வாயிலாக விளக்கினார். இன்றைய அரசியல்களத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அதனை நாம் எப்படி கையாளவேண்டும் – அதற்கான கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் கழகத் தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும் - மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

    துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆ.இராசா எம்.பி., கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் ஆகியோர் உரையாற்றியபிறகு, நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராகத் தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான உடன்பிறப்புகள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடிதான் பேச்சைத் தொடங்கினேன். மக்கள் பாராட்டுகின்ற - இது தொடர வேண்டும் என விரும்புகிற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட, ஏழாவது முறையாக தி.மு.க. அரியணை ஏறிட உடன்பிறப்புகளான உங்களின் உழைப்புதான் முதன்மையானது.

    எந்தப் பதவியையும் பெறாத, எந்தப் பொறுப்புக்கும் வராத, அறிவாலய வாசலைக் கூடி மிதிக்காத, கழகமே உயிர்மூச்சு, கருப்பு - சிவப்புக் கொடியே தன் சொத்து என நினைக்கிற உண்மைத் தொண்டர்களால் 75 ஆண்டுகாலமாக வலிமையுடன் நிலைத்திருக்கும் கழகம், தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு, தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும்.

    என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள். நானும் என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை நம் தொண்டர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் ஓர் முக்கியமான அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன்.

    கழக உறுப்பினர்கள் யாரேனும் எதிர்பாராத விதமாகச் சாலை விபத்தில் இறக்க நேரிட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

    தொண்டனாகத்தான் என் கழகப் பணி தொடங்கியது. தொண்டர்களுடன்தான் என் கழகப் பணி தொடர்ந்தது. தொண்டர்களால்தான் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன். என் மீது அன்பைப் பொழியும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதுதான் நான் நம்பிக்கை வைத்துப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்த நினைக்கிறேன்.

    ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் கழக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள். அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

    உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ளத் தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவிருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன் என்று கூறியுள்ளார். 

    • மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மாநாட்டு திடலின் நுழைவு பகுதியில் பசுமையாக காட்சிதரும் வகையில் பிரமாண்ட புல்வெளி தரையுடன் பூங்காவும், அதன் நடுவே செயற்கை நீரூற்று, நீரூற்றின் மத்தியில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க. வின் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் என 4 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கான இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.

    பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாலையில் பிரமாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகிற்னர். மேலும், ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவிற்காக சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் திரைக்கட்டி மறைக்கப்பட்டுள்ளது.

    பந்தல்குடி கால்வாயில் சாக்கடை நீர் கலந்து காணப்படுவதால் துணி கட்டி தி.மு.க.வினர் திரை அமைத்துள்ளனர். மேலும், பந்தல்குடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் விளம்பர பலகையும் துணி கட்டி மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திரையை தி.மு.க.வினர் நீக்கினர். 

    • தற்போது மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது.
    • இன்று மாலைக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. உள்கட்சி தேர்தலில் கிளை கழகம், பேரூர் கழகம், நகரம், ஒன்றியம், வட்டம் பகுதி, மாநகர செயலாளர் பதவிகள் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

    இப்போது மாவட்ட கழக செயலாளர்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த பதவிகளுக்கு போட்டியிட கடந்த வாரம் 4 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் 45 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து எதிர் கோஷ்டியினர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் பரிசீலனை நடந்து வந்தது. இதில் சில மனுக்களுக்கு முன்மொழிய மெஜாரிட்டி நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    மேலும் சில மாவட்டங்களில் எதிர்த்து போட்டியிட்டவர்களை அழைத்து சமரசம் பேசியதன் காரணமாக அவர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

    அதன் அடிப்படையில் இப்போது 72 மாவட்டங்களுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னை உள்பட 66 மாவட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர்கள் அப்படியே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ராமச்சந்திரனுக்கு பதிலாக ரவி அண்ணாதுரை நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக மூர்த்திக்கு பதில் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் இன்ப சேகரனுக்கு பதில் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அ.ம.மு.க.வுக்கு சென்று அங்கிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பூபதிக்கு பதில் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அங்குள்ள எம்.பி. மாவட்ட செயலாளர் பதவியை கேட்டதால் இழுபறியாக இருந்தது. இன்று மாலைக்குள் இதில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று அறிவாலயத்தில் தகவல் தெரிவித்தனர்.

    தற்போது மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று மாலைக்குள் அவர் மாவட்ட செயலாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது.

    இதன் பிறகு இன்னும் ஓரிரு நாளில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

    இதில் மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார். இதே போல் அமைச்சர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு நிறுத்தப்படுவார். பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. போட்டியிடுவார். இவர்களை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இதுபற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.

    இதற்காக வருகிற 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் தி.மு.க. பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    பொதுக்குழுவுக்கான முன் ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது.

    • புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு.
    • ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகள் குறித்த தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

    அதன்படி கட்சிகள் சார்பில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த நிர்வாகிகள் பட்டியல் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பாரம்பரியம் மிக்க தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் கிளை கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு பேரூர் வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைப்புகளுக்கு புதிய தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சில ஒன்றியங்களுக்கு மட்டும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் அந்த தேர்தலும் நடத்தப்பட்டு விடும்.

    அடுத்த கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறும். தி.மு.க.வில் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பதவி உள்ளன.

    பெரும்பாலும் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்னும் 20 நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட வாய்ப்புகள் உள்ளன. உள்கட்சி தேர்தல் முடிந்ததும், புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்படும்.

    புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் தி.மு.க. பொதுக்குழுவை எங்கு நடத்துவது என்று மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். நல்ல இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் வகையில் பெரிய இடம் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

    குறிப்பாக வாகன நெருக்கடி ஏற்படாத வகையில் அதிக பார்க்கிங் வசதியுடன் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அந்த இடத்தை தி.மு.க. மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர்.

    எனவே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. உள்கட்சி தேர்தல் விரைவில் நிறைவு பெறுவதால் இந்த மாத இறுதியிலேயே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    ×