search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்கட்சி தேர்தல் மும்முரம்- தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது
    X

    உள்கட்சி தேர்தல் மும்முரம்- தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது

    • புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு.
    • ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகள் குறித்த தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

    அதன்படி கட்சிகள் சார்பில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த நிர்வாகிகள் பட்டியல் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பாரம்பரியம் மிக்க தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் கிளை கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு பேரூர் வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைப்புகளுக்கு புதிய தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சில ஒன்றியங்களுக்கு மட்டும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் அந்த தேர்தலும் நடத்தப்பட்டு விடும்.

    அடுத்த கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறும். தி.மு.க.வில் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பதவி உள்ளன.

    பெரும்பாலும் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்னும் 20 நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட வாய்ப்புகள் உள்ளன. உள்கட்சி தேர்தல் முடிந்ததும், புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்படும்.

    புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் தி.மு.க. பொதுக்குழுவை எங்கு நடத்துவது என்று மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். நல்ல இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் வகையில் பெரிய இடம் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

    குறிப்பாக வாகன நெருக்கடி ஏற்படாத வகையில் அதிக பார்க்கிங் வசதியுடன் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அந்த இடத்தை தி.மு.க. மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர்.

    எனவே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. உள்கட்சி தேர்தல் விரைவில் நிறைவு பெறுவதால் இந்த மாத இறுதியிலேயே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×