என் மலர்
சென்னை
- 439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர்.
- சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் காவல்துறை பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் கவன குறைவாக செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக போலீசார் மீதும் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலம் முழுவதும் இதேபோன்று 439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் இவர்களுக்கு சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சஸ்பெண்டு நடவடிக்கையில் இருந்து வரும் 202 போலீசார் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் டிஜிபி வெங்கட்ராமன், அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதன்படி நடவடிக்கையில் உள்ள 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
- காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது.
- தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது.
சென்னை:
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதிப்பங்கீட்டை முடிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைத்ததும் பேசி முடிவு செய்யலாம் என்று தி.மு.க.தரப்பில் கூறப்பட்டது. எனவே பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 5-ந்தேதிக்குள் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும்படி காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரீஷ்சோடங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க. தரப்பில் அதை கண்டு கொள்ளவில்லை.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை அடிமட்ட தொண்டர்கள் முதல் ஒவ்வொரு மட்டத்திலும் எதிரொலிக்கவும் தொடங்கி உள்ளது. புதுவையில் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை காங்கிரசை அழைக்காமலேயே தி.மு.க. நடத்தியது. பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரசுடன் தி.மு.க. எம்.பி.க்கள் கை கோர்க்கவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் -த.வெ.க. இடையேயும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் 70 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு வழங்க த.வெ.க. முன்வந்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் த.வெ.க. தரப்பிலும், உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் உடனே சொல்லுங்கள். 14-ந்தேதிக்கு பிறகு நாங்கள் வேட்பாளர் தேர்வுக்கு செல்ல வேண்டி உள்ளது என்று காங்கிரசிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
ஆனால் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது. தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரை ராகுல் அழைத்து விவாதித்துள்ளார். அப்போது கூட்டணியை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள், கட்சியின் பலம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை அவர் விவாதித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக ராகுல்காந்தி நாளை டெல்லியில் கே.சி. வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்போவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு ராகுல்காந்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் வருகிற 10-ந்தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட 692 மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி பட்டறை டெல்லியில் நடக்கிறது. இதில் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டெல்லியில் அவர்களையும் அழைத்து மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கூட்டணி சர்ச்சைகளுக்கு முடிவு வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
- இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.100 கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதல் நாளான நேற்று 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்களை வாங்கினார்கள். அதில் பலர் விஜய் பெயரிலேயே மனுக்களை வாங்கினார்கள். 10 ஆயிரம் மனுக்களும் 1½ மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
கூட்டம் அதிக அளவில் திரண்டு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் யாரும் விருப்ப மனு வாங்க நேரில் வர வேண்டாம். இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
பெயர், தந்தை-கணவர் பெயர், பிறந்ததேதி (வயது), பாலினம், கல்வி தகுதி, தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டில் இருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலை பேசி எண், மாற்று அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தாய்மொழி, பேசும் திறன் உள்ள மொழிகள்,
உங்கள் வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விவரிக்கவும், சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், தங்கள் பெயரின் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அதுபற்றிய தகவல்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களின் விபரம், தொழில், ஆண்டு வருமானம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் -குடும்ப விபரம், நீங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரம், நீங்கள் இதே தொகுதியில் வசித்து வருகிறீர்களா?
இல்லை எனில், தாங்கள் வசிக்கும் தொகுதி, உங்கள் வாக்குரிமை இதே தொகுதியில் உள்ளதா? இல்லை எனில், தங்கள் வாக்குரிமை உள்ள தொகுதி, நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள், தங்களின் சொத்து விவரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ஏதேனும் தயார் செய்துள்ளீர்களா? ஆம் எனில், குறிப்பிடவும்.
கழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள், கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்.
மேலும் தெரிவிக்க விரும்பும் வேறு ஏதேனும் கூடுதல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த விபரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், கடந்த 3 ஆண்டுகளின் குடும்ப உறுப்பினர்களின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.
- ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் நோக்கில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகரின் பல பகுதிகளில் பொதுக் கழிப்பிடம் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 260 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 3271 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேலும் 214 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 1905 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு இந்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது வரை மொத்தமாக 474 இடங்களில் இலவச ஒப்பனைகள் 5176 கழிப்பிட இருக்கைகளுடன் பயன்பாட்டில் உள்ளது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1262 இடங்களில் இலவச ஒப்பனைகள் 10,437 கழிப்பிட இருக்கைகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்த கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கழிப்பிடங்களில் மக்களின் கருத்துக்களை பெறவும் குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் கியூ ஆர் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மக்களின் தேவைக்கேற்ப மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறை கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடும் தகவல்களின் அடிப்படையில் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கழிப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது.
- ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்தக் கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.
அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று தே.மு.தி.க.வும் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்த 2 கட்சிகளில் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அன்புமணி இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் ராமதாஸ் சேர மாட்டார். இதையடுத்து ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ம. க., பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் இடம் பெறாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இது போன்ற சூழலில் தான் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. இடம் பெறும் கூட்ட ணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் திருமாவளவன் அதனை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 2 கட்சிகளுமே பிளவுவாத அரசியலை செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் எப்போதும் நாங்கள் இருக்க மாட்டோம்.
ஒருவேளை ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால் நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
- மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. முதன் முதலாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து பாஸ்கள் இயக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 625 மின்சார பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரையில் 380 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 225 ஏ.சி. பஸ்கள் விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையில் இருந்து 145 மின்சார பஸ்கள் இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து 100 மின் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
இதுவரையில் 225 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 குளு குளு சொகுசு பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3000 ஏசி வசதி அல்லாத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 1000 மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக ஏ.சி. சொகுசு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.
டபுள் டக்கர் 20 ஏ.சி. பஸ் விடுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வரும்.
முதல் கட்ட மின்சார பஸ் வசதி இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் கொண்டு வரப்படும். பொதுமக்கள் தங்கள் பயணத்தை மாற்றி வருகிறார்கள். நெரிசலில் பயணம் செய்வதை தவிர்த்து, வசதியாக அமர்ந்து செல்லவே விரும்புகிறார்கள். அதனால் ஏ.சி. மின்சார பஸ்களில் இனி வரும் காலங்களில் அதிக பயன்பாடு உள்ளதாக இருக்கும் என்றார்.
- பா.ஜ.க.வின் நெருக்கடியையே சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையும் சுமூகமாக தீர்த்து வெற்றிக் கூட்டணி அமைப்பார்.
- தமிழ்நாட்டுக்கு எந்தவித தியாகமும் செய்யாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு அரசியல் களத்தில் ஒருவர் குதித்து இருக்கிறார்.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் 18-வது ஆண்டு விழா சென்னை மண்ணடியில் உள்ள அந்த கட்சியின் தலைமை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கட்சி கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக மனித நேய மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. இந்த 18 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்பட்டபோது களத்திற்கு சென்று மக்களை மீட்கக் கூடிய பணிகளையும், அவர்களுக்கு நலத்திட்டங்களையும் மனிதநேய மக்கள் கட்சி செய்து வந்துள்ளது. இந்த சிறப்பான பணிகளை தொடருவோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையான அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய மாநாடு மதுரையில் நடந்தது. அந்த மாநாட்டில் அரசியல் அதிகாரத்தில் பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், உள்ளாட்சி மன்றத்திலும் சிறுபான்மை முஸ்லீம்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
அந்த அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களில் மக்கள்தொகை அடிப்படையில் 14 முஸ்லீம் எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமு.க.வின் தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் அயராது பணியாற்றுவார்கள்.
இந்த தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கும்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இதே போல் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இதுவரை நடந்த தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் வரக்கூடிய தீர்ப்பின் அடிப்படையில் தனி சின்னத்தில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து எங்கள் முடிவு அமையும். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டு பெறுவோம். கூட்டணி கட்சிகளால் தி.மு.க.வுக்கு நெருக்கடி இல்லை. இது தேர்தல் நேரத்தில் வழக்கமாக நடக்கும் விஷயங்கள்தான்.
பா.ஜ.க.வின் நெருக்கடியையே சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையும் சுமூகமாக தீர்த்து வெற்றிக் கூட்டணி அமைப்பார்.
தமிழ்நாட்டுக்கு எந்தவித தியாகமும் செய்யாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு அரசியல் களத்தில் ஒருவர் குதித்து இருக்கிறார். இவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதே இல்லை.
பேசுவதெல்லாம் வெறும் தத்துவம்தான். ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறார். ஆனால் அவருக்கு வரி பாக்கிக்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று கோர்ட்டு கூறி உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டை தலைநிமிர வைக்க மாட்டார்கள்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து வருவது மிகவும் கேவலமான செயலாக இருக்கிறது. சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டு இருக்கிறார். மோசமான பொய்களை பா.ஜ.க. சார்பில் பரப்புகிறார்.
பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் பிரதமர் மோடியை தாக்க முன்வந்தார் என்று சொல்வது அப்பட்டமான பொய். பிரதமர் மோடி பாராளுமன்றத்தை பார்த்து பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
இதற்கிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் - நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் - அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து - தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ.3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் - வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை - வளர்ச்சித் திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அடிமை அதிமுக.
நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புதுபுது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. வை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அடிமை அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து மாநகரங்களிலும் தலா ஒரு இடத்திலும் மற்ற இடங்களில் கழக நகர-ஒன்றிய-பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
- தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு என அறிவித்தும் கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஒரு வலிமையான தேர்தல் அறிக்கையை உருவாக்கத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு அமைப்பிற்கும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசார குழுவின் மிக முக்கிய உறுப்பினராக செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன் ஒரு குழுவிற்கு தலைமையாக உள்ளார். கட்சியில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் இருப்பதால், அவர் தனித்து ஒன்றும் இல்லை. அவர் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விஜய் திகழ்கிறார். ஒரு தலைமை என்பது தானாகவே உருவாக வேண்டும். மற்றவர்கள் சொல்லி உருவாகக்கூடாது.
தற்போதைய சில கூட்டணிகள் மேலிடத்து அழுத்தம் மற்றும் டெல்லியின் உத்தரவு காரணமாகவே இணைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மக்கள் குறைகளை தலைவர் விஜய் பெற்று வருகிறார்.
தி.மு.க. ஒரு "தீய சக்தி". அந்த சக்தியை வீழ்த்துவதே த.வெ.க.வின் முதன்மை இலக்கு. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எங்களது கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது.
தி.மு.க. சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்.
வேலூரில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் "முதல்-அமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இவ்வாறு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவது முறையல்ல.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எண்ணி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.
- இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.
இதில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார்.
மேலும் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும்.
இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ந்தேதி அலுவல் ஆய்வு குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை சட்டமன்றம் கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சிறப்பு தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.
கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்
"தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்" எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.
இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






