என் மலர்tooltip icon

    சென்னை

    • மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
    • தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!

    நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

    அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!

    இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
    • தமிழகம், கேரளாவில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்தனர். இதேபோல், தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

    மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு .
    • பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தாம்பரம்– மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

    பிறகு, விழா முடிவுற்று இல்லம் செல்லும் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சதை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, மருத்துவமனை இயக்குநர், சிகிச்சை பெற்று வரும் 121 புற மருத்துவ பயனாளிகள் (out patients), 326 உள் மருத்துவ பயனாளிகளுக்கு (In patients), மத்திய ஆய்வகத்தில் இன்றைய தினம் இதுவரை 2390 பல்வேறு வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, அம்மருத்துவமனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பயனாளியிடம் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்து, முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை நல்ல முறையில் அளிப்பதாகவும், நன்றாக கவனித்துகொள்வதாகவும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    அத்துடன், மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், இம்மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள்.
    • அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    யார் வர வேண்டும் என்பது மிக முக்கியம். இது குறித்து சில காலத்தில் முடிவு செய்வோம். நல்லதொரு கூட்டணியை அமைப்போம். மெகா கூட்டணியை அமைப்போம். நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் ஒரு சில காலத்திலேயே அது நடைபெறும். உங்களுடைய விருப்பப்படியே நாம் கூட்டணியை அமைப்போம்.

    வருகின்ற அடுத்த 6 மாத காலம் கடுமையாக உழைக்க வேண்டும். ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.

    நம்முடைய வழிகாட்டி ஐயா ராமதாஸ் அவர்கள்தான், குலதெய்வம் ஐயா ராமதாஸ் அவர்கள்தான். ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள். அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி. ஐயா பாமகவின் நிறுவனர். அதில் மாற்று கருத்து கிடையாது.

    அதேவேளையில் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் நான் ஆசைப்படுபவன் கிடையாது. இன்று காலத்தின் கட்டாயத்திற்காக, உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

    வியர்வை, ரத்தம் சிந்தி, உயர்த்தியாகம் செய்து இந்த கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஐயாவின் நிரந்தரமாக நாற்காலி. ஐயா இங்கே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    சாமிக்கு சில நேரம் கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா போன்றவை எடுப்போம். இதில் பூசாரிக்குதான் பிரச்சினை.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    • மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக.
    • தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * என் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.

    * சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைப்போம்.

    * மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக

    * நம்முடைய குலதெய்வம், வழிகாட்டிதான் ராமதாஸ். அவர் உள்ளத்தில் இருக்கிறார்.

    * சில நேரத்தில் சாமிக்கு கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா எடுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.

    * அடுத்த 6 மாத காலத்திற்கு ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

    * திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பாமக-வின் இலக்கு.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • சமீபத்தில் அன்வர் ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து அன்வர் ராஜா விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. இலக்கிய அணி தலைவராக புலவர் இந்திரகுமாரி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    பல்லாவரம்:

    பல்லாவரத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    * தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன்.

    * கல்வியும் மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக உள்ளன.

    * சென்னை புறநகர் பகுதியில் மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    * காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது.

    * ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் தான்.

    * மனிதனின் அடிப்படை தேவையான உடை, உணவு எளிதாக கிடைத்தாலும் இருப்பிடம் கிடைப்பதில்லை.

    * பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.

    * 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன.

    * கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம்.

    * ரூ.1,672 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டாக்களை தற்போது வழங்கி உள்ளேன்.

    * ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * கலைஞர் ஆட்சிக்கு பின் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்.

    * வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார்.

    * அடிப்படை தெரியாத அறிவிலிபோல் அறிக்கை வெளியிடுகிறார்.

    * மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.

    * இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம் என்றார்.

    இதன் பின், பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

    • நேற்று சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,445-க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200

    06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040

    05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    07-08-2025- ஒரு கிராம் ரூ.127

    06-08-2025- ஒரு கிராம் ரூ.126

    05-08-2025- ஒரு கிராம் ரூ.125

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    • தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?
    • அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு, முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து, அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும், ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

    தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து, தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன், ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி, நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும், ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்?

    இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு, எல்லையில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?

    நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா?

    இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும், மானத்தையும், மண்ணையும், மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு, ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ, வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இதற்கு மேலும், Q - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களைக் காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்.



    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

    தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • பஹல்காமில் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் காயமடைந்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரனை முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

    பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் மற்றும் அவர் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்கள் குண்டடிப்பட்டு புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது 'அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்து சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் முதலமைச்சர் அவர்கள், புதுடெல்லி சென்றிருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களும் அவர் குடும்பத்தாருமான அவரது துணைவியார் டாக்டர் மநயன்தாரா, தந்தையார் திரு பி. ஆறுமுகம். மாமனார் டாக்டர் டி.கே.மணிகுமார், மாமியார் டாக்டர் ஜெ.சித்ரா, மாமன் டாக்டர் வேதாந்த சீனிவாசன் ஆகியோர் மாபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று (08-08-2025) காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இற்றிகழ்வின் போது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரக, கழக விவசாய அணிச் செய்வாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்,விஜயன், செய்தி தொடர்பு தலைவர் டி கே.எஸ்.இளங்கோவன் ஆகிடியோர் உடனிருந்தனர்.

    ×