என் மலர்
சென்னை
- ரூ. 5,000 கோடி வரி வருவாய் இருக்கிறது. அது என்ன செய்யப்படுகிறது?
- மாநகராட்சி எந்த வேலையை தான் செய்யும்?
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உண்மையிலேயே முதல்வரை சந்தித்தவர்கள் துப்புரவு பணியாளர்களா?
அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களை பிரித்து கொடுத்தார்கள். மீதி இருக்கிறதை தற்போது கொடுக்கிறார்கள்.
ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. ராம்கிக்கு தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது வேண்டுதலா?
அந்த வேலையை செய்ய முடியாது என்றால், மாநகராட்சி எதற்கு? அதற்கு தேர்தல் எதற்கு? மேயர் என பொறுப்பு எதற்கு?
5 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்யப்படுகிறது?
மழைநீர் வடிந்து ஓடாது. கழிவு நீர் வெளிவராது. எந்த சாலையும் சீரமைக்கப்படாது. பிறகு எந்த வேலையை தான் மாநகராட்சி செய்யும்?
பள்ளிக் கல்விக்கு ஒரு துறை, உயர்கல்விக்கு ஒரு துணை, கால்நடைக்கு ஒரு துறை, பால்வளத்துக்கு ஒரு துறை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமிஷன் வாங்குவதற்கு ஒரு துறை. கவலைப்படாமல் மொத்த துறைக்கும் கமிஷன் துறை என பெயர் வைத்துவிடுவது நல்லது.
15 நாளில் போராட்டத்தை அவசரம் அவசரமாக முடித்துவிட்டு காலையில் சோறு போடுகிறேன். ரூ.2 லட்சம் காப்பீடு தர்ரேன், செத்தால் ரூ.10 லட்சம் தர்ரேன் என பசப்பு அறிக்கை விட்டு முடித்து சோறாக்கி போட்டு நாடகம் போட்டுள்ளனர்.
இதற்கு மேயர் தான் இயக்குநர். அவர் யாரிடமும் உதவியாளராக இருந்து கற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இயக்கம் சரியாக வரவில்லை. இயக்கம் மேற்பார்வை சேகர்பாபு சுத்தமாக தெரியவில்லை. படம் பிளாப் ஆகிவிட்டது. அந்தக் கூலியும் காலி. இந்தக் கூலியும் காலி. இரண்டு கூலியும் போய்விட்டது என தெரிவித்தார்.
- பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
- முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார்.
கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் வந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இல கணேசன் மறைவுக்கு நாகாலாந்து மாநிலம் 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
- மாநாட்டுக்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அவசர மருத்துவ சேவை பணியில் சுமார் 400 மருத்துவ குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி கட்சித் தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
இதையொட்டி மாநாடு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் மாநாடு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட உள்ளது.
மேலும் தட்டுப்பாடு வராமல் இருக்க 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விஜய் படம் பொறிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாநாட்டுக்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து அவசர மருத்துவ சேவை பணியில் சுமார் 400 மருத்துவ குழுவினர் ஈடுபட இருக்கின்றனர். மாநாட்டை சுற்றிலும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்.
மேலும் கூட்டத்தின் நடுவில் யாராவது பாதிக்கப்பட்டால் மின்னல் வேகத்தில் சென்று அவசர மருத்துவ வசதி செய்வதற்கு டிரோன் மூலம் மருத்துவ வசதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறிய கார் வடிவில் இருக்கும் டிரோனில் 25 கிலோ மருந்து பொருட்கள் இருக்கும்.
மாநாட்டு திடலில் கூடி இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தில் அவசர மருத்துவ சேவை தேவைப்படும்போது மருந்து பொருட்களுடன் டிரோன் பறந்து சென்று மருத்துவ சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது.
இதையொட்டி டிரோன் மருத்துவ சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று காலை மாநாட்டு பந்தலில் நடந்தது. சோதனை ஓட்டத்தை கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.
மாநாட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாநாட்டு பந்தல் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. த.வெ.க. மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றுலா தலம் போல் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
- திருமாவளவன் பிறந்தநாளை இன்று மாலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
- நாளை காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை தமிழர் எழுச்சி திருநாளாக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாளை அவருக்கு 63 வயது.
இதை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகிகள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் இணைந்து திருமாவளவன் பிறந்தநாளை இன்று மாலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் கவியரங்கம் வாழ்த்து அரங்கம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
வாழ்த்தரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் டிஜிபி வனிதா, திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்பி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில திருமாவளவன் எம்.பி. ஏற்புரை நிகழ்த்துகிறார். நள்ளிரவு 12 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.
தலைமை கழக நிர்வாகிகள் ஏ.சி பாவரசு, துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, பாவலன், தகடூர் தமிழ்ச்செல்வன், இளஞ் சேகுவாரா, பாலசிங்கம் ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நாளை காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பிறகும் கூட இன்றைக்கு திடீரென சோதனை நடத்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.
விடுதலை பெற்ற வரலாற்றையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூற வேண்டிய சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அரசியல் அவதூறுகளை அள்ளி வீசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை அரசியல்வாதி போல குற்றச்சாட்டுகளால் வசை மாறி பொழிந்தார். இதையெல்லாம் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவித்தோம். இந்த நிலையில்தான் இன்றைக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தின் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்.
'சட்டவிரோத பண பரிமாற்றம்' என சொல்லி அமலாகத்துறை செய்யும் அடாவடிகள் ஒவ்வொன்றும் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றன.
* ''கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.
* மூடா ஊழல் வழக்கில், "அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
* சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், "ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்" என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் வைத்தது.
அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. 'சட்டவிரோத பண பரிமாற்றம்' என பேசும் ஒன்றிய அரசுதான் 'வாக்கு திருட்டு' அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு' என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.
சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED தலை வைத்தும் படுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாகுவது மட்டுமே ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அதனை வைத்து பாஜக தலைவர்களும் பாஜகவின் அடிமைகளும் தங்களது மனம்போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இந்த துருப்பிடித்த ஆயுதங்களை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டே வருகிறது. இந்த அவதூறுகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. அது தெரிந்தும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற ED சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை.
- இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரதமர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்து பேசியது புதிது அல்ல.
- தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி உள்ளது.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
எங்கள் மூதாதை மாயோன் என்கிற கிருஷ்ணரின் புகைப்படத்தை வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் வணங்கினார்கள்.
பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறதா? எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதால் தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் அமைவதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சீமான், நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தனித்து களம் கண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப இது போன்ற கேள்வியை நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் எனக்கு ஒரே மனைவிதான் ஒரே மனைவிதான் என்று திரும்பத் திரும்ப உங்களிடமும் சொல்ல வேண்டி உள்ளது.
வருகிற சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்திக்க உள்ளது. இதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது பற்றி கேட்கிறீர்கள்.
மற்றவர்களின் பலவீனத்தை நம்பி நாங்கள் இல்லை. எங்களது பலத்தையும் வலிமையையும் நம்பியே களத்தில் இருக்கிறோம். நிச்சயம் தமிழகத்தில் தூய்மையான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நம்பிக்கையோடு தேர்தலில் போட்டியிடுகிறோம். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள்.
பிரதமர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்து பேசியது புதிது அல்ல. அதே நேரத்தில் நாங்கள் காலம் காலமாக சொல்லி வரும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க போவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
மீதமுள்ள 3½ ஆண்டுகளும் அதனை அவர் தவறாமல் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாகி விட்டதாக கவர்னர் கூறியிருப்பதற்கு கனிமொழி எம்.பி. மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இருவர் சொல்வதையும் கேட்டுக்கொண்டு அவர்களை ஒழிப்பதற்கான வேலையில் நாங்கள் ஈடுபட இருக்கிறோம். கூலி படம் முதல் நாளில் 150 கோடி வசூல் செய்திருப்பதன் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்கள் மத்தியில் இன்னமும் செல்வாக்குடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டால் அரசாங்கம் எதற்கு என்று தொடர்ந்து நாங்கள் கேட்டு வருகிறோம். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றுவதற்காகவே நாங்கள் களம் கண்டு வருகிறோம். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைப் பற்றி சீமான் குறிப்பிடும் போது அந்தக் கூலியும் காலி இந்த கூலியும் காலி என்றார். பின்னர் அவர் கூலி படம் வசூலை பற்றி குறிப்பிட்டு ரஜினிகாந்த் தமிழக மக்கள் மனதில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை குறித்து பிரதமர் மோடி கவனத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியான $433.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களில் 20 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் $ 52.1 பில்லியன் பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்றும், இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிவிதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் துறைகள் அனைத்தும் அதிகத் தொழிலாளர்களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது என்றும், இதில் எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28% பங்களித்தது என்றும், இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நெருக்கடியைத் தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம் என்று தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் தான் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகவும், இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்சங்களில், அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல், முழு சங்கிலியையும் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுவதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (ECLGS) 30% பிணையமில்லாத கடன்களை 5% வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலில் இரண்டு ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், RoDTEP நன்மைகளை 5% ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியமான காரணிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் காரணமாக மற்ற துறைகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும், அதிக சுங்கவரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று, அசலைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாகவும், பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையைச்சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
- மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
*தமிழ் புறக்கணிப்பு*
*இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரெயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்?*
மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (18.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பல்லாவரம் : நகர், பாம்போ லேக், பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா ரோடு, பல்லவா கார்டன், வைத்தியலிங்கம் ரோடு, அலுவலகம் லேன், எஸ்என்பி.
திருவான்மியூர்: காவேரி அபார்ட்மெண்ட், எல்.பி.ரோடு, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன், இந்திரா நகர் 2-வது தெரு, 1 மற்றும் 2-வது அவென்யூ, மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீசர்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ.
புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை பாஸ் ரோடு.
- 171-வது திரைப்படமான கூலி நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
- ரஜினிகாந்த் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய நல்வாழ்த்துகள்.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171-வது திரைப்படமான கூலி நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






