என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மறைந்த ஆளுநர் இல. கணேசன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
    X

    மறைந்த ஆளுநர் இல. கணேசன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

    • பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
    • முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார்.

    கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் வந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இல கணேசன் மறைவுக்கு நாகாலாந்து மாநிலம் 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

    Next Story
    ×