என் மலர்tooltip icon

    சென்னை

    • ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியும் இழந்துள்ளனர். அந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை இழந்துள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களை அழைப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

    அப்போது, அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்ப, அப்பெண்ணுக்கு ஆதரவாக மேலும் சில பெண்களும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. எபினேசர் விளக்கம் அளித்தார்.

    இருப்பினும், அப்பகுதி மக்களுக்கும், எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மெண்டல்கள் போல் பேசுவதாக கூறினார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:-

    ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..

    ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!

    நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபினேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார். 




    • மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    • 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

    சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னையில், 2 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.

    இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சுமார் 118. 9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை சுமார் 26. 1 கி.மீட்டர் தொலைவுக்கும், இதே போல, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45. 8 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தொலைவுக்கு மற்றொரு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9.928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

    இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
    • நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.

    இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

    நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும் இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.

    இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    • ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
    • டி.ஆர்.பாலு மனைவி ரேணுகாதேவி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

    டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வின் வேட்பாளர்.
    • தமிழ் நாட்டுக்காரர் என்பதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியதாவது:-

    துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவர் பா.ஜ.க.வின் வேட்பாளர். அவரை தேர்வு செய்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை. அவர் தமிழ் நாட்டுக்காரர் என்பதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவருக்கு அதிகாரம் எதுவும் கிடைக்கப் போவது இல்லை. அதனால் தமிழகத்துக்கு பலன் வராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

    சென்னை:

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி நாங்க எங்க போனாலும் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார். பிரதான சாலையில் எடப்பாடி பழனிசாமி போகிறார். 1330 ஆம்புலன்ஸ் தமிழ்நாடு முழுவதும் செல்கிறது.

    உயிர் காப்பதற்காக ஆம்புலன்ஸ் செல்கிறது. ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும். உயிர் காக்கும் சேவையாக ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.

    "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று பழமொழி கூறுவார்கள். அது போல எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?

    மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்து ஒரு மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.

    அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என்று கூறுவது நல்லதல்ல, அவர் இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. அப்படிப்பட்ட தமிழக அரசின் மருத்துவ சேவையை குறை கூறி பேசும் அவரது செயல் தனது தரத்தை குறைத்துக் கொள்ளும் செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை.
    • உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண் வக்கீல் நர்மதா சம்பத் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கும், அங்கு நடைபெறும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • அதிகபட்சமாக அவர் 5 ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார்.
    • மருத்துவர் ஜெயச்சந்திரன் இறந்த பிறகு அவரது மனைவி வேணி 5 ரூபாய் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் பல ஆண்டுகளாக ஐந்து ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன். வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்றால் பலருக்கும் தெரிவது கடினம்தான். ஆனால் ஐந்து ரூபாய் டாக்டர் என்றால் அனைவரும் அவரது வீட்டுக்கு வழிகாட்டுவார்கள். அந்த அளவு அந்தப் பகுதியில் பிரபலமானவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டர்.

    கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவரான ஜெயச்சந்திரன் 1972-ம் ஆண்டு முதல் கிளினிக்கை தொடங்கி அதில் கட்டணமாக 2 ரூபாய் பெற்று வந்தார். அதிகபட்சமாக அவர் 5 ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாரடைப்பால் மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.

    மருத்துவர் ஜெயச்சந்திரன் இறந்த பிறகு அவரது மனைவி வேணி 5 ரூபாய் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில், மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி வேணி (71) மாரடைப்பால் உயிரிழந்தார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள வேணி கணவரின் சேவையை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்தவர் ரேணுகா தேவி பாலு.
    • நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகாதேவி பாலு மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு அவர்கள்.

    அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.

    அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.
    • இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2024-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப் பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கிடும் பொருட்டு அடையாளமாக 15 முன்னாள் படைவீரர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 348 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர். இத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 50 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.

    இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், பயனடைவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுவதால் கடன் சுமை குறையும்.

    இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல்ஆணை வழங்கப்படும்.

    தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு அரசு செலவில் சென்னை- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும்.

    வருங்காலங்களில் தமிழ் நாடு அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன்சிங் ரா சவான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 98 நபர்களுக்கும், உதவிப் பொறியாளர் (மின்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 67 நபர்களுக்கும், என மொத்தம் 165 நபர்களுக்கு இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) 406 நபர்கள், உதவிப் பொறியாளர் (மின்) 103 நபர்கள், முதுநிலை உதவி கொதிகலன்கள் இயக்குநர் 4 நபர்கள், இளநிலை கட்டடக் கலைஞர் 4 நபர்கள், இள நிலை வரைதொழில் அலுவ லர் 156 நபர்கள், இளநிலை உதவியாளர் 55 நபர்கள், தட்டச்சர் 32 நபர்கள் மற்றும் கருணை அடிப்படையில் உதவி வரைவாளர் 11 நபர்கள், இளநிலை உதவியாளர் 17 நபர்கள், பதிவுறு எழுத்தர் 8 நபர்கள், அலுவலக உதவியாளர் 3 நபர்கள் என மொத்தம் 799 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்க ளுக்கு தெரிவு செய்யப்பட்ட 169 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    • தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே , அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண்மணி ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத் திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முக்கியக் குற்றவாளிகள் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஏமாற்றி அழைத்து வரப்பட்ட ஏழை மக்களிடமிருந்து சிறுநீரகங்களை பறித்து மற்றவர்களுக்கு பொருத்திய திருச்சி மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மருத்துவமனை திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமானது என்பதால் தான் சலுகை காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    சிறுநீரகம் , கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் ஒருபடி மேலே போய், "தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல; சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு. இதை புரிந்துகொள்ள வேண்டும். இது திருட்டு அல்ல; முறைகேடு" என்று கூறியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார். 

    • நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக ரேணுகாதேவி தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    நுரையீரல் பாதிப்புக்காக கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேணுகாதேவி காலமானார்.

    ×