என் மலர்tooltip icon

    சென்னை

    • பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

    தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 386-வது பிறந்த நாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகிறது.

    இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். அவர்கள் மசூலிப்பட்டினத்தில் முதலில் கம்பெனியை தொடங்கி வணிகம் செய்தனர்.

    ஆங்கிலேயர்கள் போலவே டச்சுக்காரர்கள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிகம் செய்தனர்.

    அவர்களுக்குள் போட்டிகள் அதிகரிக்கவே ஆங்கிலேயர்கள் புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    அப்போது டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரது சகோதரர் அய்யப்ப நாயக்கர் என்ற உள்ளூர் நாயக் மன்னர்களிடம் இருந்து கூவம் ஆற்றின் அருகில் மதராசப்பட்டினம் என்ற பகுதி அடங்கிய ஒரு பெரிய இடம் ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது.

    1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆங்கிலேயர்கள் வாங்கிய அந்த நிலத்தில் 1640-ம் ஆண்டு ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர். அப்போது முதல் அந்த பகுதி நகரமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.

    கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.

    கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர்.

    அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.

    இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

    அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார்.

    இதனால் புதிதாக விரிவடைந்த நகரத்திற்கு பெயர் மதராசப்பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற சந்தேகம் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.

    நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர், பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்த சாந்தோம், நெசவாளிகள் வாழ்ந்த சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர்.

    திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.

    அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.

    இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் மிகப்பெரிய இடத்தை பெற்றது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரெயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.

    மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. காவல்துறையும் ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றமும் கட்டப்பட்டது. ஐகோர்ட், சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவை அப்போதுதான் உருவாக்கப்பட்டன.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.

    அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.

    அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன.

    அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.

    பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

    சென்னையில் தற்போது 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, உணவு என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.



    தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.

    மேலும் சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டிலேயே அதிக கார்கள் உற்பத்தியாகும் நகரமாகவும் சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் தொழில் நுட்பத்திலும் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது.

    வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.

    இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தலைநகராக, பேரும் புகழோடும் விளங்கும் சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவருமே கொண்டாடி மகிழ்வோம்.




    • பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    • நுங்கம்பாக்கம், அடையாறு, வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் சுமார் 50 நிமிடங்களில் 5 செ.மீ. மழை பதிவு.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, மயிலாப்பூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், புழல், அண்ணா நகர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    நுங்கம்பாக்கம், அடையாறு, வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் சுமார் 50 நிமிடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தியாகராயநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணுக்கால் அளவு மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில், சென்னையில் அதிகாலையில் கனமழை பெய்த நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • எல்லியம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பெசன்ட் நகர்: எல்லியம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ரமாஞ்சி அவென்யூ மற்றும் எஸ்பிஐ காலனி.

    அடையார்: சாஸ்திரி நகர் 1-வது மெயின் ரோடு மற்றும் 4-வது முதல் 13-வது குறுக்கு தெரு.

    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
    • 31 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், அடையார், மந்தைவெளி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனிடையே, காலை 5 மணி முதல் தற்போது வரை நுங்கம்பாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 4-5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது.
    • எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது.

    சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, மதுரையில் இன்று நடைபெற்ற தவெகவின் 2வது மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், எம்ஜிஆர் குறித்தும், அதிமுக குறித்தும் பேசினார்.

    இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-

    எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது. எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது. உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவர். உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவி அம்மா.

    அதனால், வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரை பயன்படுத்துறது, அண்ணா புகைப்படம் பயன்படுத்துறது, எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துறது, நான் தான் புரட்சித் தலைவர் மாதிரி சொல்வது எல்லாம் தேர்தல் யுக்தி.

    இதெல்லாம் எப்படி சொன்னாலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக. அவர்தான் கட்சிக்கே முழுமையான சொந்தக்காரர்.

    அதனால், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்த கை, வேறு எந்த கட்சிக்கும் வாக்குகள் போடாது. எங்கள் தலைவரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.

    எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அது உங்களுக்கு வாக்குகளாக வருமா என்றால் நிச்சயமாக வராது. அதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது.
    • ஹைட்ரஜன் ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் முதன் முதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள். ஒருவழித் தடத்தில் மட்டும் இயக்கப்படுவதால் மற்ற வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையொட்டி மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பெட்டிகளுடன் தயாராகும் ஏ.சி. ரெயில் விரைவில் மற்றொரு வழித்தடத்தில் இயக்குவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

    இதே போல ஹைட்ரஜன் ரெயிலும் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் சூழலில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. முதன் முதலாக ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரெயில் இதுவாகும். இந்த ரெயில் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏ.சி. மின்சார ரெயில் பணி விரைவில் முடிந்து விடும். இன்னும் 2 மாதத்தில் சென்னை கோட்டத்தில் ஒப்படைப்போம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

    • நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது.

    சென்னை:

    அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நகர்ப்புறத்தில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2135 முகாம்களும் நடத்தப்படுகின்றன.

    வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாதிசான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் போன்ற பல கோரிக்கைகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.

    திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 3,600 முகாம்கள் நடந்து உள்ளன.

    இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

    இந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் மனுக்கள் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப்பித்த பலருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    • நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம்.
    • இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செம்பொழில் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது.

    நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த கிராமத்து திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உள்ளே இடம்பெற்றுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். இன்று தொடங்கிய இந்த கிராமத்து திருவிழா வரும் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண்முன் காட்சிப்படுத்தும் விதமாக 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்விற்கு இன்று மற்றும் நாளை நுழைவுக் கட்டணமாக ரூ.50, 23 மற்றும் 24-ந்தேதிகளில் ரூ. 150 வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம், எந்திரத்தனமான வாழ்க்கையில் பழைய விஷயங்களை நாம் மறந்து கொண்டிருக்கும் பொழுது அதை நினைவுபடுத்தும் விதமாகவும் சிக்னலில் கூட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் முதலமைச்சர் கீழடி மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தி நம் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். நாம் யார் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.

    இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமததில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவியர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது.

    மேலும் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் களையப்பட்டதுடன் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 14.3.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.8.2025 அன்று தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் மாணவ-மாணவியர்கள் தினசரி பயன்பெற உள்ளார்கள்.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
    • தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையோடு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நேற்று முன்தினம் இதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முக்கிய ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

    இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது.

    முன்பு போல காத்திருப்போர் பட்டியலில் 400 டிக்கெட் தற்போது கொடுப்பதில்லை. அதிகபட்சமாக 250 டிக்கெட் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பயணம் உறுதியான டிக்கெட் மட்டுமே பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களிலும் இடமில்லை. இதேபோல கோவை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் முடிந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக பயணம் செய்யக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் விடுவது வழக்கம். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு வெளியாகும். இது பகல் மற்றும் இரவு நேர பயணம் செய்யக்கூடிய வகையில் இயக்கப்படும்.

    தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    இதற்கிடையில் எந்தெந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க சாத்தியப்படுமோ அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும்.

    எனவே தீபாவளி பயண கூட்ட நெரிசலை குறைக்க எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் தேவைப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவை விட இந்தப் பாலத்தின் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது.
    • மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு கி.மீக்கு ரூ.195 கோடி செலவாவதாகவும் தமிழக அரசால் கணக்குக் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    வழக்கமாக இத்தகைய மேம்பாலங்களை அமைப்பதற்கான செலவை விட திட்ட மதிப்பீடு 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

    சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் அதிக மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு பல வகையான ஐயங்களை எழுப்புகிறது.

    கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவை விட இந்தப் பாலத்தின் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.95 கோடியும், 2022-ம் ஆண்டு மேடவாக்கத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.101 கோடியும் மட்டும் தான் செலவாகியுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கட்டப்படும் மேம்பாலங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்படும் மேம்பாலங்களை விட தரத்திலும் வடிவமைப்பிலும் சிறப்பானதாக இருக்கும் என்பதால் அவற்றின் கட்டுமானச் செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.

    ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் கட்டப்பட்ட மதுரை-நத்தம் மேம்பாலம் சராசரியாக கி.மீக்கு ரூ.100 கோடி செலவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம் அதை விட 95 சதவீதம் கூடுதல் செலவில் கட்டப்பட்டு வருவது ஏன்? என்பது தான் வினா.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கிளாம்பாக்கம்-மறைமலை நகர், மதுரவாயல்-சென்னை வெளிவட்டச்சாலை இடையேயும், திருப்பெரும்புதூர்-சென்னை வெளிவட்டச் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. தலா 6 வழிப்பாதையும், 3 இடங்களில் மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வசதிகளும் கொண்ட இந்த மேம்பாலத் திட்டங்களுக்கு முறையே கி.மீக்கு ரூ.188 கோடி, ரூ.175கோடி, ரூ.155 கோடி தான் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை விட குறைவாக 4 வழிப் பாதையாக கட்டப்படும் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பாலத்திற்கு அதிக செலவாவது நியாயமல்ல.

    சென்னை அண்ணா சாலைக்கு அடியில் மெட்ரோ ரெயில் பாதை அமைந்துள்ள நிலையில், அதன் மீது தூண்களையும், பாலத்தையும் அமைக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்பதிலும், அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அதற்காக இயல்பை விட அதிக செலவாகும் என்பதிலும் ஐயமில்லை.

    ஆனால், அந்தக் கூடுதல் செலவு இயல்பை விட 50 சதவீதம் அதிகம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் லாபமடைய வேண்டும் என்பதற்காகவே திட்ட மதிப்பு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அதுமட்டுமின்றி, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.482 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஓராண்டில், அதாவது 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்ட மதிப்பீடு ரூ.43 கோடி மட்டும் அதிகரிக்கப்பட்டு ரூ.525 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அடுத்த ஓராண்டுக்குள்ளாக திட்ட மதிப்பீடு 18சதவீதம், அதாவது ரூ.96 கோடி அதிகரிக்கப்பட்டு, ரூ.621 கோடியாக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு இரு ஆண்டுகளில் 29 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பு இயல்பை விட 50சதவீத்துக்கும் கூடுதலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே.
    • திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.

    குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-மந்திரிகள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த புதிய மசோதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போதுதான் ஒழுங்கு இருக்கும். இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை.

    * திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×