என் மலர்tooltip icon

    சென்னை

    • திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
    • திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

    ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?

    பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    சொன்னீங்களே செஞ்சீங்களா

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
    • மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.

    மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

    மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • திரைப்பிரபலங்கள் பலர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி செப்.7-ந்தேதி நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025’ எனும் புத்தகம் இலவசம்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் படித்தவர்கள், கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.

     

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு

    ஒரு நாள் இலவச பயிற்சி

    இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, செப்டம்பர் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரடியாக நடைபெறுகிறது.

    இவ்வாறு கூறினார்.

    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கலந்து கொண்டு, 'ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நுட்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

    மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள், டெட் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய பாடத் திட்டங்களை சுருக்கமாக கற்றுத்தர உள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசம்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 'ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025' எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    முன்பதிவு செய்க

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 'TNTET ONE DAY FREE COACHING-2025' என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 9176055514 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு, 9176055542, 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    • பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
    • பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் பள்ளிக்கல்வி துறையில் முதுகெலும்பான பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் தான் எனும் நிலையில் அந்தப் பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பள்ளிக்கல்வித் துறையில் இயக்குனர், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தான். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் பொதுக் கல்விக்கு ஒருவர், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒருவர் என இரு முதன்மைக் கல்வி அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் பணியமர்த்தப்பட்டு இருப்பர்.

    பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லாவிட்டால் பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

    ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், கரூர்.

    கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்ம் தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 76 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் இவை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதேபோல், 23 மாவட்டங்களில் 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

    ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் போது அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணி இடங்களும், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களும் நிரப்பப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.

    இந்த அதிகாரிகள் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதாலும், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தான் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் இவற்றை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அரசின் அலட்சியம் தான் இன்று நிலவும் அவலநிலைக்கு காரணமாகும்.

    இப்போதும் கூட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலாளருக்கும் தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் போது அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அந்தப் பட்டியலைக் கூட தயாரிக்காமல் கல்வித் துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.

    மேலும் கல்விப் பணிகள் குறித்து முடிவெடுப்பதும், கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்தப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் தான்.

    அதுமட்டுமின்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் போது மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதனால், ஏற்படும் காலியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்படும். ஆனால், அரசின் அலட்சியத்தால் அனைத்து நிலை பதவி உயர்வுகளும் தடைபட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை; தமிழக அரசே ஒரு கணக்குப் போட்டு 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது; தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2500-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஆசிரியர் நாளை கொண்டாடும் வேலையில் கல்வித்துறையின் அவலங்களை பேசுவது வேதனையளிக்கிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வித்துறையை மேம்படுத்துவது இருக்கட்டும்... ஏற்கனவே இருந்த நிலை மேலும் சீரழியாமல் தடுப்பதற்குக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதன் விளைவு தான் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே தீர்வு திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர்.
    • திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் மந்தமாக இருக்கின்றது.

    சென்னை:

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    எதற்காக சுதந்திரத்தை தலைவர்கள் போராடி பெற்றுக் கொடுத்தார்களோ அது மாறி, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமை பறிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையெல்லாம் இந்த தலைமுறை படிக்க வேண்டும். நாளை மறுநாள் வாக்குத்திருட்டு, வாக்கு அதிகாரம் என்ற மாநாடு காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர் பேச உள்ளனர்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டி.டி.வி. தினகரன் வெளியே வந்துவிட்டார். ஓ.பி.எஸ். வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை. அது மூழ்குகின்ற கப்பல். அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை. இதை புரிந்து கொண்டதால் டி.டி.வி. தினகரன் வெளியே வந்தார். இன்று செங்கோட்டையன் வெளியே வந்து உள்ளார். ஆகையால் மக்கள் இவர்களுக்கு கெடு கொடுத்து விட்டனர். இது மூழ்குகின்ற கப்பல். இதில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.

    உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பா.ஜ.க. இதற்கு பல சம்பவங்கள் இருக்கு. எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர். இப்போது உச்சபட்சமாக அ.தி.மு.க.வில் அவர்களது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அ.தி.மு.க.வினர் விழித்துக் கொள்ள வேண்டும்.

    திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் மந்தமாக இருக்கின்றது. தூத்துக்குடி, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் ஏற்றுமதி மந்தமாக இருக்கின்றது. மக்களிடம் இருப்பு குறைந்துவிட்டது. மக்கள் விலை உயர்வால் கஷ்டப்படுகின்றனர். ராகுல் காந்தி 10 வருடங்களுக்கு முன்பே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று சொன்னார். 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அவர்கள் குறைத்து இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சொர்ணா சேது ராமன், மாநில நிர்வாகிகள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ. வாசு, சுரேஷ் பாபு, மகிளா காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் கானப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, இயல், இசை, நாடக மன்றம், பொதுக்குழு, நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகரும், காங்கிரஸ் கட்சி மாநில கலைப்பிரிவு துணைத் தலைவருமான கலைமாமணி தாராபுரம் கலாராணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கிய முன்னெடுப்பாக இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.
    • இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    மேலும், அஸ்ட்ராஜெனகா நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3-வது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (ஜி.ஐ.டி.சி.) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.

    இந்நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ.13 ஆயிரத்து 16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 17 ஆயிரத்து 813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாக இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.

    தமிழ்நாட்டில் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்புகளை நிறுவிட அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகள் மேற்கொள்ள இந்தக் குழுமம் திட்டமிட்டுள்ளது, இது, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட் பங்களுக்கான உலகளாவிய தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்னிறுத்துகிறது.

    அஸ்ட்ரா ஜெனகாவின் ஜி.ஐ.டி.சி., அஸ்ட்ரா ஜெனகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் 3-வது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத்தின் மீதுள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சந்திப்புகளின் போது வெளியிடப் பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும், இது ஜி.சி.சி.-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,493 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 820 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

    இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக, முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான குழு 15 ஆயிரத்து 320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீட்டுகளை ஈர்த்துள்ளது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரெயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் என தெரிவித்துள்ளது.

    • மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
    • சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். 210 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆசிரியர் தின விழாவில் கடந்த ஆண்டும் கலந்து கொண்டேன். அப்போது சில கோரிக்கைகள் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டது. அதில் பல கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மீதி கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி காட்டுவார்.

    திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பெரியார் பகுத்தறிவு, சுய மரியாதைக்கான ஆசிரியர், அதனால் தான் அவருக்கு லண்டனில் உருவப்படத்தை திறந்து வைத்து பெரியார் உலகிற்கே சொந்தமானவர் என்பதை முதலமைச்சர் காட்டி இருக்கிறார்.

    கலைஞர் மாணவராக இருந்தபோதே பத்திரிகை ஆசிரியராக இருந்து அதன் பிறகும் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.

    அந்த தலைவர்கள் வழியில் தான் முதலமைச்சர் திராவிட மாடல் வளர்வதற்கு ஆசிரியராக பணியாற்றுகிறார். கிராமங்களுக்கு செல்லும் போது இது தான் வாத்தியார் வீடு என அடையாளம் காட்டுவார்கள். அப்படிபட்ட வாத்தியார்களால் தான் டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என பலரும் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

    சமூக மாற்றத்தை கல்வி மூலம் தான் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு புரட்சியாளர் தான். மாணவர்களிடம் பகுத்தறிவு சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்.

    மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    இரு மொழிக்கொள்கையே போதும் என்று அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் உழைப்பால் தான் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்கள். இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடங்களை நடத்தாதீர்கள், விளையாடும் நேரங்களில் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள், அது தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.

    ஆசிரியர் தின விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படுகிறது, விரைவில் அந்த சிலையை முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா, பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
    • தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1 வது பிளாட்பாரத்தில் இருந்து 11-வது பிளாட்பாரம் வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. எழும்பூர் பாரம்பரிய ரெயில் நிலைய கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் சீரமைக்கப்படுகிறது.

    விமான நிலையத்தை போல ரெயில் நிலையம் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் செய்வதற்காக அங்கிருந்து புறப்படக்கூடிய ரெயில்களை மாற்றுவதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ரெயில்வே துறையின் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த மூன்று பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதால் தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து இயக்கவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

    வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை இரண்டு மாதங்கள் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 முக்கிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மாதம் அங்கிருந்து இயக்கப்படும்.

    எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் எண் 22675 எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

    இதே போல எழும்பூரில் இருந்து மும்பைக்கு செல்லக்கூடிய எண் 22158 எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    ஏற்கனவே கொல்லம் எக்ஸ்பிரஸ், குருவாயூர், மன்னார்குடி எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 6 ரெயில்கள் எழும்பூரில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரெயில் இயக்க மாற்றத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.
    • இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அடித்தட்டு மக்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதுவரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு பொருள்கள், செல்பேசிகள், வாகனங்கள், காப்பீடுகள் ஆகியவற்றின் வரி குறைக்கப்படவுள்ளன. இதனால், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதைப் போல தோன்றினாலும், வணிகம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளும் விற்பனை செய்யப்படும் போது மிகக்குறுகிய காலத்தில் அந்த வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.

    உடல நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரி 40% அதிகரிக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது. அதேநேரத்தில் பீடியின் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக 18% ஆக குறைக்கப்பட்டிருப்பது, பரோட்டா போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

    சிங்கப்பூரில் உள்ளது போன்ற ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்; அதேபோல், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.
    • திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்".

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

    அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

    நாளை நமதே! வெற்றி நிச்சயம்!

    பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!

    புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க!

    நன்றி

    வணக்கம். 

    • அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
    • காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள் என்றார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;

    அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

    அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;

    இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்;

    ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×