என் மலர்
சென்னை
- மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
- மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும்.
- எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.
சென்னை:
சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏர்போர்ட் மூர்த்தியை காலணியால் தாக்கி சட்டையையும் கிழித்தனர்.
பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களை திருப்பி தாக்கினார். டி.ஜி.பி. அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.
டி.ஜி.பி. அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பாதுகாப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலைந்து சென்றனர்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பா.ம.க பிரமுகரான ம.கா. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
அவர்களோடு செல்வதற்காகவே ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போதுதான் அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அங்கிருந்த தொலைக்காட்சியினர் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர். டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடயே, எர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.
தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார்.
- திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
- நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்" திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்?
இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- "இல்லை"!
நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- #ByeByeStalin! என்று பதிவிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார்.
- திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து, அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
- விளையாட்டின் ஒற்றுமை, ஊக்கம் ஆகியவற்றை இந்நிகழ்வு எடுத்துரைத்தது.
- பல துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.
சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக சென்னை, தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பார்வையாளர்கள் பெரிய திரையில் விளையாட்டின் சிலிர்ப்பை அனுபவித்தனர்.
இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (RUC) அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமைந்தது. விளையாட்டு- கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் என பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வாகவும் இருந்தது. F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மேலும், RUC-இன் அதிகாரப்பூர்வ ஜெர்சியை அவர் வெளியிட்டார். விளையாட்டு, சினிமா மற்றும் வணிகம் என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குழுவால் நிறுவப்பட்டது RUC. விளையாட்டு மைதானத்திற்கு அப்பாற்பட்டு விளையாட்டின் ஒற்றுமை, ஊக்கம் ஆகியவற்றை இந்நிகழ்வு எடுத்துரைத்தது. தடகளம், சினிமா ரசிகர்கள், திரைத்துறையினர், வணிகம் மற்றும் விளையாட்டு என பல துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்தனர்.
- நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 38ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
02-09-2025- ஒரு கிராம் ரூ.137
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
- மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்.
இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.
- சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்டைன எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.
சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்.
சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.
- தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில் இரண்டு நூல்களையும் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.
இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!
இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் மற்றும் முனைவர் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்;
பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.
ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.
உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
- ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90) வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
1,000-க்கும் மேற்பட்ட திரை பாடல்கள், 4,000 சுயாதீனப் பாடல்கள், 5,000 பக்திப்பாடல்களை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.
குறிப்பாக செங்குட்டுவன் எழுதிய, நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, இறைவன் படைத்த உலகை போன்ற பாடல்கள் என்றும் நினைவில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் என கூறலாம்.
- பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
- தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?
பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது.
மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?
மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
- திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!
பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!
சொன்னீங்களே செஞ்சீங்களா
இவ்வாறு அவர் கூறினார்.






