என் மலர்tooltip icon

    சென்னை

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
    • தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.

    தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.

    எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.

    • பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
    • காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.

    இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.

    இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.

    வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.

    இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

    செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
    • நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    பூத் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து யார் யாருக்கு ஓட்டுகள் விடுபட்டுள்ளது. வீட்டு முகவரி மாறியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களது ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எதேச்சதிகார போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.

    சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித் திட்டம் நடைபெறாமல் இருக்க அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்காக ஆரம்ப கட்ட பணிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இது தவிர கட்சி பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.

    இந்த ஆலோசனையில் மாவட்ட கழக செயலாளர்களுடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    சென்னை:

    சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.

    இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்அப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.

    இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

    கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.

    இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (11.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பல்லாவரம்: கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், அஞ்சலகம் நகர், ஓ.ஜி. முத்துசாமி நகர், சோமு நகர், புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், அஸ்தினாபுரம், புருஷோத்தமன் நகர் பகுதி, பஜனை கோவில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை.

    எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி.சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோவில் தெரு, குறவன்குளம், சுப்பகா நாயுடு தெரு, நேரு வெளிப்புற மற்றும் உள்விளையாட்டுத் தெரு, அப்பாராவ் கார்பன் தெரு, பேராண்டியாம்பிகா ஸ்டேடியம், பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க், பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு.

    • மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவ குழுவினர் அடைந்தனர்.
    • பாதுகாப்பான முறையில் கடந்து மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    சென்னை:

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் மெட்ரோ ரெயில்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் கேரியேஜ் மற்றும் டிக்கெட் என்ற திருத்த விதிகள்-2023 கொண்டு வரப்பட்டது.

    அதன்படி, நேற்று மீனம்பாக்கம் - ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவ குழுவினர் அடைந்தனர்.

    மெட்ரோ ரெயில் ஊழியர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் உதவியுடன் அந்த மருத்துவ குழுவினர் 7 மெட்ரோ நிலையங்களை பாதுகாப்பான முறையில் கடந்து மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மருத்துவ குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.

    சென்னை:

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
    • குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்

    2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.

    4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்

    5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்

    7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

    • பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை எழும்பூரில் உள்ள வங்கி ஒன்றின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தங்களது வங்கியில் கடன் வாங்கிவிட்டு 2 பெண்கள் ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் , மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டு சேர்ந்து வீட்டு கடன் பெறுவதற்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து அதனை வங்கியில் சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்ததை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
    • பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று 80-வது தொகுதியாக ஒசூர் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.

    அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் பெரும்பாலான வற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காண்கிறார். நேற்று ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை என்ற கோரிக்கையைத் தீர்க்க அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.

    உட்கட்சிப்பூசல்கள் கவனத்திற்கு வந்தால் இரு தரப்பையும் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கிறார். மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அவ்வப்போது ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • 18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர்.
    • ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.

    சென்னை:

    முற்போக்கு புத்தக காட்சி மற்றும் தி.மு.க. "இரு வண்ணக் கொடிக்கு வயது 75" என்ற பெயரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்.

    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தக காட்சியை தொடங்கி வைத்தார். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை வெளியிட்டார். அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். பின்னர் 2 நாள் கருத்தரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக தி.மு.க. 75 அறிவு திருவிழா வரலாற்று கண்காட்சியை பார்வையிட்டு திராவிட இயக்கத் தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தன்மானம் காக்கும் கழகம் மேடை நாடகம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருவள்ளுவர் கோட்டமே திராவிட கோட்டமாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். காலத்தின் நிறம் 'கருப்பு சிவப்பு' என்னும் அறிவு கருவூலத்தை தமிழ் சமூகத்திற்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ் நாட்டின் லட்சிய கொடியாய் விளங்குகிற நம்முடைய கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்று கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தக கண்காட்சி என்று இந்த கொள்கை திருவிழாவில் இளைஞர் அணி முன்னெடுத்திருக்கிறது.

    இந்த கொள்கை திரு விழாவுக்கு வித்திட்டு திக்கெட்டும் திராவிடம் எதிரொலிக்க இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி கடுமையாக களப்பணியாற்றி வருகிறார்.

    தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பயணத்தை நினைவு கூரக்கூடிய இந்த விழாவுக்கு அறிவு திருவிழா என்று தொடங்கி பெயர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

    கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா. அதை 50 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் கலைஞர். கழகத்தின் முதல் தலைமையகம் அறிவகம். கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் அறிவாலயம். இப்படி அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரக்கூடிய கட்சியின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவுத் திருவிழா என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்.

    உலக பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கோட்டத்தில் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்து உள்ள இளைஞர் அணி செயலாளர் கொள்கை இளவல் உதயநிதியையும், அவருக்கு துணை நிற்கக்கூடிய இளைஞர் அணியின் தம்பிமார்களையும் மனதார பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

    நான் நினைத்ததை விட சிறப்பாக இதை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அய்யன் வள்ளுவர் சொன்னது போல் 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையோடு சொல்கிறேன். அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். என் அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.

    முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967-ல் முதல் மாநில கட்சியாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் பல ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து கடைகோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள்.

    18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர். எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுப்புகள், நாடகங்கள், திரைப்படங்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள். அன்று தி.மு.க. உழைத்த உழைப்பு. சாதாரண உழைப்பு அல்ல. சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலகட்டத்தில் குக்கிராமத்தில் இருக்கக்கூடிய முடிதிருத்தக்கூடிய சலூன்கூட மக்களின் சிந்தனைகளை திருத்துகிற மையமாக செயல்பட்டது.

    சைக்கிள் கடை, டீக்கடை என ஒரு இடம் விடாமல் திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசித்து அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலக வரலாற்றை தெரிந்து கொண்டனர்.

    கிராமத்தில் இருப்பவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தனர். ரஷிய புரட்சி பற்றி படித்து ஊக்கமும், உறுதியும் பெற்றனர். இப்படி நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை. இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

    இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வை போல வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வை போல் வெற்றி பெற, தி.மு.க.வை போல உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான். இப்படி ஒரு இயக்கம் இனி இந்த மண்ணில் தோன்ற முடியாது.

    இந்த வரலாற்றையும், நமது கொள்கையையும் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிற காரணத்தால்தான் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றதில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

    இப்போது இந்த அறிவு திருவிழா மூலமாக இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்களை உதயநிதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் தந்தை பெரியார் செய்த பணி, கலைஞர் செய்த பணி, நான் விரும்பும் பணி. இதை உதயநிதி செய்கிற காரணத்தால்தான் தந்தை என்பதை விட இந்த இயக்கத்தின் முதன்மை தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த நேரத்தில் இளைஞர் அணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களில் இருக்கின்ற கட்டுரைகளை காலத்திற்கு ஏற்ற மாதிரி வீடியோக்களாக மாற்றி சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    'காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு' நூலை அனைவரும் படிக்க வேண்டும். சோனியா காந்தி முதல் அகில இந்திய தலைவர்கள் அனைவரும் தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதி இருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை அகில இந்திய தலைவர்களும், மற்ற மாநில தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்து விடாது.

    ராகுல்காந்தி, "ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்" என்று சொல்லி இருக்கிறார். லல்லு பிரசாத் யாதவ், "சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்" என்று பாராட்டி இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக விரைவில் வர இருக்கக்கூடிய, எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய தேஜஸ்வி, "நம்மை ஜனநாயகத்தின் தோழனாக" பார்க்கிறார்.

    இந்தியாவே போற்றும் இயக்கமாக நமது தி.மு.க. வளர்ந்திருக்கிறது. இந்த சாதனைகளும், வளர்ச்சிகளும்தான் பலருடைய கண்களை உறுத்துகிறது. நாம் பேசும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகிய கருத்துக்கள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

    என்னடா, இவர்களை தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால் இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே என்று கோபப்படுகிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, திராவிடம் வெல்லும். அதை காலம் சொல்லும் என்று முழங்கக் கூடிய திருவிழா இது.

    இது கூடி கலையும் கூட்டம் அல்ல, காலம் தோறும் கொள்கைகளை கூறிட்டுக் கொள்ளும் கூட்டமாக இருக்கிற காரணத்தால்தான் எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனை பெரிய தந்திரங்களை கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை.

    கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாத காரணத்தால்தான், இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக திருட்டுத் தனமாக குறுக்கு வழியில் வீழத்த முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதுதான் எஸ்.ஐ.ஆர். மறந்து விடாதீர்கள்.

    ஏன் அந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இதை வேண்டாம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லியும் ஏன் நடத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடங்கி விட்டது.

    இதற்கு எதிராக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராட போகிறோம்.

    இந்த நேரத்தில் இங்கிருக்கக் கூடிய இளைஞர் அணி தம்பிமார்களை நான் கேட்க விரும்புவது களத்தில் வேலை செய்யும் நீங்கள் எந்தவொரு போலி வாக்காளரும் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    உண்மையான நமது வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கருப்பு-சிவப்பு நிறம் சேர்ந்திருக்கிற போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. இந்தியாவையும் ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க 2019 முதல் தொடரக்கூடிய நமது பயணம் 2026-லும் மாபெரும் வெற்றியை பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்.

    தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், தலைவர் கலைஞரின் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, பரந்தாமன், ஆவடி சேகர், எபினேசர், மாவட்டச் செயலாளர் சிற்றரசு.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன், இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, இந்து ராம், நக்கீரன் கோபால், இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கருத்தரங்கு நாளை மாலை வரை நடைபெறுகிறது. முடிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை நிகழ்த்துகிறார்.

    ×