என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு- சென்னையில் 10 மையங்களில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
- தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.
தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.






