என் மலர்
சென்னை
- அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.
- C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.
இந்திய குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்கள் குழு நிதிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உடையவரும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக பணியாற்றிய பெருமைக்குரியவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர், மகாராஷ்டிர பாநில ஆளுநர் போன்ற பதவிகளை சிறப்புற வசித்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 13-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
- அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர்.
- அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஆறு, ஏழு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக எதுவும் நடக்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏன்? என்றால் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய், ஆட்சியில் பங்கு என்று கூறியதால் அவருடன் யார் இணைவார்கள் என்று பலராலும் உற்று நோக்கப்பட்டது.
ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாக நிகழும் சம்பவங்களால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்றால் மிகையாகாது. அது குறித்து பார்ப்போம்...
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்தது. அன்றில் இருந்து அமைதியாக இருந்த டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. அதற்கேற்ப பா.ஜ.க. செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றாக இணைய முயற்சி எடுத்த மத்திய மந்திரி அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம். கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு நயினார் நாகேந்திரனும் பதில் அளித்து இருந்தார்.
* அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பயணித்து வரும் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து செப்.5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்த செங்கோட்டையன் அன்று செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் கூறுகையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளே அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர். மேலும், அ.தி.மு.க.வில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சியே என்று தெரிவித்த செங்கோட்டையன் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை என்றார்.
ஆனால் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் ஆதரவாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிவருகிறார்.
* மல்லை சத்யா ம.தி.மு.க.-வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
சில காலமாகவே ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன். 32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
* பா.ம.க.-வில் இருந்து அன்புமணி நீக்கம்
பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இதனால் இருதரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை. இதையடுத்து இருதரப்பினரும் மாறிமாறி பா.ம.க.வில் இருந்து ஆதரவாளர்களை உத்தரவிட்டனர். இதனிடையே, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இதனால் பா.ம.க. யாருடைய தலைமையின் கீழ் செயல்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளில் நிலவும் உட்கட்சி பூசலால் அக்கட்சி தொண்டர்களிடையே சலிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக- பாஜக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலவரத்தால் 4 முனை என்பது இன்னும் எத்தனை முனையாகும் என்பதே அனைவர் மனதிலும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு ஏற்ப வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார்.
- சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர். கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
அண்மையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. உட்கட்சி பூசல்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
- நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது.
* அன்புமணி தரப்பு கூட்டிய பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
* அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
* கட்சி விதிகளின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார்.
* கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
* நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம்.
* பா.ம.க. என்ற ஜனநாயக அமைப்பில் விதிகளின் அடிப்படையில் தான் கட்சியை நடத்த முடியும்.
* பா.ம.க. தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.
* பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும்.
* உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை.
* அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது.
* வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.
* கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூற வந்துள்ளேன்.
* நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான் என்றார்.
- நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
- ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி+ குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதி ஏற்கிறோம்!
* நான், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், 'பெண்கள்- விவசாயிகள் - மீனவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
- எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.
* எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
* சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
* நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மற்றும் மின்சார ரெயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களால் பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயணிகள் சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது. இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15 மணி, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
- த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6-ந்தேதி அனுமதி கோரி மனு அளித்த நிலையில் விஜய் பிரசாரம் குறித்து பேச அழைப்பு விடுத்தும் த.வெ.க. நிர்வாகிகள் செல்லவில்லை என்றும், த.வெ.க. நிர்வாகிகள் பேசாததால் தற்போது வரை பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.
தற்போது வரை அனுமதி அளிக்கப்படாததால் விஜய் பெரம்பலூர் செல்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
- சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
இந்நிலையில் வேதமூர்த்தி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எனது மருமகன் திரு. சபரீசன் அவர்களின் தந்தையார் திரு. வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரு. வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.






