என் மலர்
சென்னை
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.
பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. அதிலும் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், சில இடங்களில் கனமழையும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
- ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், "அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.
நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- "நொய்யல்" மற்றும் "வைகை" என்று பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வைகை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2024-இல் தொடங்கப்பட்டன. இந்த சுரங்கப்பாதை பணிகளுக்காக "நொய்யல்" மற்றும் "வைகை" என்று பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
"வைகை" சுரங்கம் தோண்டும் இயந்திரம், பிப்ரவரி 2024-இல் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து 775 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி, இன்று, அக்டோபர் 18, 2025 சுரங்கம் அமைக்கும் பணியைமுடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு),பொது மேலாளர்கள் திரு. ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), திரு. சி.செல்வம்(வழித்தடம்), CRE ஆலோசகர் திரு.சஞ்சீவ் மண்டல், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர்திரு. ஜெயராம், திட்ட மேலாளர் திரு.அஹ்மத், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லார்சன் & டூப்ரோநிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழே சென்றது. இந்தக் கட்டிடங்களுக்கும், சுரங்கப்பாதைக்கும் இடையேயுள்ள மண் அடுக்கு 9 மீட்டரிலிருந்து 12 மீட்டர் வரை இருந்தது. மந்தைவெளி பகுதியில் ஏற்கனவேபல முக்கியமான அடிப்படை வசதிக் கட்டமைப்புகள் — அதாவது, கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் ஆகியன இருந்தன. இதன் காரணமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல்கால அவகாசம் தேவைப்பட்டது.
வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரும்பாலும் வண்டல் மண் / மணல் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 13 முறை அதன் வெட்டும் முகப்பில் (cutterhead interventions) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சுரங்கம் அமைக்கும் பணியை முடிக்க 610 நாட்கள் தேவைப்பட்டது.
இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நொய்யல், மந்தைவெளி நிலையத்தை அடுத்தமாதத்தில் வந்தடையும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் ஏற்கனவே மூன்று இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. முதலில் ஆர்.கே.சாலையில். அடுத்து கோடம்பாக்கத்தில் மற்றும் இன்று மந்தைவெளியில். வரும் மாதங்களிலும் இதுபோல் பல சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
- முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல் புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.
எப்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திமுக அசிங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல, ஹிந்தி எதிர்ப்பு அல்லது, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற பெட்டியைத் திறப்பது வழக்கம். அறுபது ஆண்டுகளாக, அவரது தந்தை காலத்தில் தொடங்கி, அவரது பேரன் காலத்திலும், அதே நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா?
குழப்பத்தில் இருக்கும் முதலமைச்சருக்கு, சில விளக்கங்கள்.
ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிலும், முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.
மாநில அனைத்துச் சட்டங்களும், திட்டங்களும், அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளிலேயே மொழிபெயர்த்து அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களைப் புறக்கணித்து விட்டு, உங்கள் தந்தையின் பெயரையும், சிலையையும் வைப்பதை விடவா ஆணவம் வந்துவிடப் போகிறது?
தாய்மொழி தமிழை, பிழையின்றிப் பேச, எழுதத் தெரியாதவர்களை அமைச்சர்களாக வைத்துக் கொண்டு, ஐம்பது ஆண்டு காலமாக, யுனெஸ்கோ விருது உள்ளிட்ட போலி வரலாறுகளை உருவாக்கி, நமது மாணவர்களை மட்டுப்படுத்தியதை விட தரம் தாழ முடியாது என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?
நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஆளுநர்களாகக் கேட்டுப் பெற்று, ஆடிய ஆட்டத்திற்குத்தான் பத்து ஆண்டுகள் ஆட்சியைப் பறிகொடுத்து, அதே ஆளுநர் மாளிகையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு நின்ற வரலாற்றை தமிழக மக்கள் அறிவார்கள்.
உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க, அது டாஸ்மாக்கைக் கையாளும் அமைச்சரவை இல்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்ததை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்துவிட்டாரா? போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால், முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்?.

இரும்பின் தொன்மை குறித்த ஆய்வு, கீழடி ஆய்வறிக்கை இவை எல்லாம், உலக அரங்கில் செல்லும்போது நமது இந்திய நாட்டின் வரலாறாகவே பார்க்கப்படும். உலகின் பல நாடுகளும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது, நாமும் அதற்கேற்ப கூடுதல் ஆய்வுகளும், தகவல்களும் வழங்க வேண்டும். அவற்றைக் கேட்டால், திமுக அரசு தர மறுப்பது ஏன்?
நீதிமன்றத்தில், ஒன்றல்ல இரண்டல்ல. நான்கு வழக்குகளில் ஒரே நாளில் குட்டு வாங்கிய திமுக அரசு, அதை மடைமாற்ற வேறு வழியின்றி தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசை மீண்டும் அனுப்பியிருக்கிறது. இதே கேள்விகளை, திமுக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மாற்றி மாற்றி வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு தளங்களில் கேட்பதும், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களுக்குப் பொறுமையாக அதே பதிலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
- தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
குறிப்பாக, தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்ப்டடுள்ளது.
தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து உள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.95 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும் சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை காலையில் ரூ.2000 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.400 உயர்ந்துள்ளது.
காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.95,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 96,000க்கு விற்பனையாகிறது.
- சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு ஒரு கூட்டம் இதே போன்ற அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
- இந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை நேற்று (17.10.2025) அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற நபர் கூலிப்படைகளை வைத்து, அந்தக் கூலிப்படையில் செயல்பட்ட வரதன், பிரபு, விக்னேஷ் உள்ளிட்டோரின் துணைக் கொண்டு சந்தோஷ் அவர்களை கடத்தி சென்று தாக்கி, அவரது கைபேசியை கைப்பற்றி, அந்த கைபேசியின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கு தொடர்பு கொண்ட சாலவேடு பாபு என்ற நபர் சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு ஒரு கூட்டம் இதே போன்ற அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்திற்கு தலைவராக வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர் பெயரை சொல்லி சாலவேடு பாபு மிரட்டல் விடுத்துள்ளது அவரது பேச்சின் பதிவிலிருத்து தெரிய வருகிறது. இந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கூலிப்படையாக செயல்பட்ட பிரபு, வரதன், விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு தலைவராக இருந்த சாலவேடு பாபு மீது சட்ட நடவடிக்கை எடுத்தும், இவர்களுக்கு பின்புலமாக உள்ள நபரைக் கண்டறிந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பிரிவின் சந்தோஷ் அவர்களுக்கும், சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கும் மற்றும் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.
இதே போன்ற நிகழ்வுகள் இதன் பிறகு தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வண்ணம் காவல்துறையும், உளவுத்துறையும் முனைப்பு காட்டி இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஆரம்பத்திலேயே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இது போன்ற குற்ற செயல்கள் இதன் பிறகு நடைபெறாத வண்ணம் கடுமாயான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது.
- கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.
பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
எனவே 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கி உள்ள நிலையில் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்க வேண்டும்.
சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளிலும் செயல்படுகிறது. எந்தெந்த கடைகளுக்கு மதுபானம் தேவைப்படுகிறதோ அங்கு தட்டுப்பாடு இல்லாமல் சரக்கு அனுப்ப குடோனில் ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.130 கோடிக்கு விற்பனையாகும்.
பண்டிகை நாட்களில் இது ரூ.180 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. அந்த வகையில் இன்று முதல் 21-ந்தேதி வரை மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. எந்த மதுக்கடையிலும் குறிப்பிட்ட ரக மதுபானங்கள் இல்லை என்று சொல்லாத வகையில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான பயன்பாடு இருந்து வருவதால் விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மதுக்கடைகளில் ரம் மது வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் ரம் வகைகள் சப்ளை இல்லாததால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
- வரும் 24-ந்தேதி மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
- மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
- வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:-
பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை.
நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:-
மெட்ரோ ரெயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






