என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

    இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாா்ச் மாதமே சோ்க்கை தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது.

    தொடா்ந்து, வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கையும் கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சோ்க்கை தொடங்கி இதுவரை அரசுப் பள்ளிகளில் 41,931 மாணவா்கள் சோ்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் கடந்த ஆண்டு சோ்க்கை தொடங்கிய முதல் 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவா்கள் வரை சோ்க்கப்பட்டனா். ஆனால், நடப்பாண்டு சோ்க்கை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, மாணவா் சோ்க்கையை முன்வைத்து அரசுப் பள்ளி நலத் திட்டங்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

    மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான பணிகளை மேற் கொள்ளவும், 5 லட்சம் சோ்க்கையை இலக்காகக் கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
    • ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்க புதிய திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கொண்டு வர உள்ளது.

    ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் இந்தி திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

    மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    ரூ.1,000 மாத கட்டண திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
    • நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.

    அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

    இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

    இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
    • கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.
    • மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    சென்னையில் தமிழ்நாடு புதுமை தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * நாகரிகமற்றவர்கள் என சொல்பவர்கள் தான் அநாகரிகமாக பேசுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

    மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.

    கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

    புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.

    தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.

    2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த 10-ந்தேதி வரை ஏறுமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் சற்று இறங்கியது.

    தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கும், சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,520

    11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-03-2025- ஒரு கிராம் ரூ.109

    11-03-2025- ஒரு கிராம் ரூ.107

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
    • தமிழ்நாடு பட்ஜெட் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு.

    தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் பட்ஜெட் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    • இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
    • பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.

    தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.

    அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,

    முதல் மொழி: ஆங்கிலம்

    இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்

    இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?

    வெளங்கிடும்.

    தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?

    பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர்.
    • நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா நகர் 7-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் பாலமுருகன் (வயது 53) குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது மனைவி சுமதி (வயது 47) சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் (வயது 18), லிங்கேஷ் குமார் (வயது 16) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். 2-வது மகன் லிங்கேஷ் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    டாக்டர் பாலமுருகன் அண்ணாநகர் 13-வது மெயின் ரோட்டில் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். மருத்துவ தொழிலில் முதலீடு செய்வதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கி இருந்தார்.

    அவருக்கு ரூ.5 கோடி வரை கடன் இருந்ததாக தெரிகிறது.

    கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் டாக்டர் பாலமுருகனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த இயலவில்லை. வட்டி தொகையையும் அவர் கட்ட இயலாமல் திணறியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த குடும்பப் பிரச்சனையால் டாக்டர் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.

    இந்த நிலையில் கடன் தொகையை பலரும் டாக்டர் பாலமுருகனிடம் திருப்பி கேட்டனர். இதனால் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளான டாக்டர் பாலமுருகன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார்.

    இதுபற்றி அவர் தனது மனைவி சுமதியிடம் கூறியதாக தெரிகிறது. அவரும் உயிரை மாய்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. மகன்களுடன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தம்பதிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி டாக்டர் பாலமுருகன் தனது மனைவி சுமதி மற்றும் 2 மகன்களுடன் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.

    வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு 4 பேரும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். டாக்டர் பாலமுருகன் ஒரு மின் விசிறியிலும், அவரது மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் மற்றொரு மின்விசிறியிலும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து இருந்தனர்.

    வழக்கறிஞர் சுமதி தனது 2-வது மகன் லிங்கேஷ் குமாருடன் ஒரே மின் விசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அருகில் உள்ள வீடுகளில் யாருக்கும் கேட்கவில்லை.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு டாக்டர் பாலமுருகனின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் பக்கத்து வீடுகளில் இதுபற்றி தகவல் தெரி வித்தார். அவர்கள் வந்து அழைத்தும் டாக்டர் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருமங்கலம் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் டாக்டர் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது பற்றி தகவல் பரவியதும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருமங்கலம் போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.

    சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் மெட்ரோ ரெயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பம் முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது.

    இதனால் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 19 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை வரையிலான 4-வது வழித்தடத்தில் 18 உயர்மட்ட நிலையங்களும், 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

    இதற்கிடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியது.

    பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நேற்றுமுன்தினம் (11-ந்தேதி) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபாலிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக அரசிடம் வழங்கியுள்ள திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது.

    இந்த வழித்தடத்தின் மொத்தம் நீளம் 52.94 கிலோ மீட்டர் ஆகும். மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.15 ஆயிரத்து 906 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.

    ×