என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போது அவர் திருட்டு உள்பட மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஞானசேகரன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
- கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?
சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு சபாநாயகர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்ற பேச அனுமதி தாருங்கள் என கேட்டது தவறா?
* நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே எனது வாய்ப்பை மறுக்கின்றனர்.
* நான் சொல்ல வருவதை கேட்காமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அமைச்சர் சேகர்பாபு என அனைவரும் எழுந்து கத்துகின்றனர்.
* அ.தி.மு.க.வினரை காப்பாற்றுவதற்காக தான் சேகர்பாபு என்னை குற்றம்சாட்டுகிறார்.
* சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
* அதிகபிரசங்கித்தனமாக பேசுவதாக முதல்வர் என்னை கூறியது உண்மையில் எனக்கு வருத்தம் தருகிறது.
* தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என சட்டசபையில் பேசினேன், அது தவறாக புரிந்து கொள்ளளப்பட்டுள்ளது.
* எனது மாநிலத்தின் கோட்டாட்சியர், தாசில்தாராக வடநாட்டுக்காரனை நான் எப்படி ஏற்க முடியும்.
* தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் என் உயிரை தியாகம் செய்வேன் என சபாநாயகர் முன் முழக்கமிட்டேன்.
* கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?
* தமிழுக்காக போராடும் என்னை தகராறு செய்வதாக கூறுகின்றனர்.
* துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கோபம் வராதபோது சேகர்பாபுவுக்கு மட்டும் கோபம் வருவது ஏன்?
* தெலுங்கானாவை சுட்டிக்காட்டி நான் பேச முயன்றபோது என்னை தவறாக புரிந்து கொண்டனர்.
* எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொள்கிறாய் என சேகர்பாபு ஒருமையில் பேசியதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
- பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர்.
- கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மதுரை:
தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த அந்த விமானத்தில் வழக்கம்போல் சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் கொண்டு வந்த ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரியவகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வேலூர் பயணியிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து புறப்படும் சமயத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார். யார் அந்த நபர் என்றும், எதற்காக, யாருக்காக இந்த வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது.
- வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறுகையில்,
* வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகனின் செயல் வேதனை அளிக்கிறது என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
* வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
- 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
- தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கேட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
இந்த ஆண்டு தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், ஹசன் மவுலானா, தரமணி பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதிபடுவதாகவும் அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார்.
- கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர்உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக் என்பவருக்கும் இடையிலான நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் தச்சநல்லூரை சேர்ந்த கார்த்திக், டவுனை சேர்ந்த அக்பர்ஷா ஆகிய 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில் ஏட்டு ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு கிருஷ்ண மூர்த்தியின் காலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டது. இதையறிந்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு தனிப்படையினர் அவரை பிடிக்க திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ஏற்கனவே இடப்பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். எனவே முறையாக விசாரணை நடத்தாத டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், அப்போதைய உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் உதவி கமிஷனர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி. இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கவும் அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது.
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
- ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.
மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
- கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்றைய தினம் (19.03.2025)
ஒரே நாளில் …
● மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
● கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
● ஈரோடு நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியினர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழப்பு; மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
● சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக்கொலை.
அதுபோக, கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் சொல்லிக்கொண்டு இருந்தபோது வந்த செய்திகள் இவை.
Daily Status Report கொடுப்பது போல, Daily Murder Report,
Daily POCSO Report எல்லாம் கொடுக்க வைத்துள்ளது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை.
இதை விட கொடுமையாக சட்டம் ஒழுங்கின் நிலை தமிழ்நாட்டில் முன் எப்போதும் இருந்ததில்லை.
சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
"குற்றம் நடந்தால் கைது செய்கிறோம்" என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிகார மமதையின் உச்சம் என்றே எண்ணவும் தோன்றுகிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை என ஒன்று இருப்பதாகவோ, அத்துறையின் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் அச்சப்படுவதாகவோ தெரியவில்லை; அதற்கு நாள்தோறும் பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்களே சாட்சி!
மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் தான் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
- திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. மத்திய அரசின் சட்டமும் தெளிவாக உள்ளது. சமூக நீதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை திமுக அரசால் இனியும் ஏமாற்ற முடியாது. எனவே, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சட்டசபையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,
* மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ, நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
* 234 தொகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றம்சாட்டிய நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார்.
- செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.
அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அங்கு ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.
இதையடுத்து கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றது. பின்னர் காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர். அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வாகனத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.
பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானுவும், செல்ல துரையும் இணைந்து கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.
இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2 கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.
இதில் கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேதுவாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் இன்று தனது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.






